

உயர்ந்த சிந்தனையே, உங்கள் வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்த உதவும் சிறந்த பயிற்சிக் கூடம். சிந்தித்து செயலாற்றும் தன்மை கொண்ட மனிதர்களுக்கு தான் வாழ்க்கையில், பகுத்தறியும் பக்குவமும், எப்படி செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உதிக்கும்.
சிந்திக்கும் ஆற்றலை வளர்த்துக்கொண்டே இருந்தால், எந்த இடத்திலும் உங்களுக்கு சரிவு நிலை ஏற்ப்படாது. எதிரிகளின் தாக்குதல் ஏற்ப்பட்டால், அதை எப்படி சமாளிக்கவேண்டும் என்ற உந்துசக்தி உங்களிடம் தானாகவே வந்துவிடும்.
தனிமனிதன் மாறினால் இந்த உலகமே மாற்றம் நோக்கி நகரும். இது கனவல்ல நிஜம், சாத்தியமே என்று, நினைக்கும் மனம்தான் உயர்ந்த சிந்தனையின் அடிநாதமாக திகழ்கிறது என்பதை புரிந்து கொள்வோம்.
தனி ஒருவன் அப்படி நடந்தால், இந்த ஜனசமுத்திரத்தில் மாற்றம் எப்படி சாத்தியம் ஆகும் என்ற கேள்வி எழுவது நியாயம். வானிலிருந்து விழும் மழைத்துளிகள்தானே, ஆர்ப்பரிக்கும் ஆறுகளாக பரிணாமம் ஆகிறது என்பதை உணர்ந்து, முதலில் நாம் ஒவ்வொரு வரும் இப்போதே மழைத்துளிகளாக உதாரணமாக திகழ்வோம்.
ஆணிவேர் ஆழமாக வேரூன்றி இருக்கும் போதுதான், மரங்களின் வளர்ச்சியும் அடர்ந்து பறந்து விரியும். அதேபோல்தான் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஆழ்மனதில் பதியும் உயர்ந்த சிந்தனையே, அவனின் வாழ்க்கையில் நெறிகள் பற்றிப் படர்ந்து, அறக்கூற்று உயர்வாகவும், உயிர்ப்போடும இருக்கும் என்பதை உணருவோம்.
உயர்ந்த சிந்தனையில் எழுப்பப்படும் கேள்விகள், எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட சக்தி வாய்ந்தது. அது நேர்மறை எண்ணங்களாகவோ அல்லது செயல் களாகவோ இருக்குமே தவிர, கீழ்த்தரமான எதிர்மறை தீவினை தருவதாக இருக்காது என்பதை மனதில் நினைத்து, எப்போதும் உயர்வான சிந்தனையே மனதில் நிலை நிறுத்த முயலுவோம்.
பாரதி கண்ட தீர்க்கமான பார்வை, அதாவது தொலைநோக்கு பார்வை தான், பெண்களின் விழிப்புணர்வு மற்றும் அவர்களின் முன்னேற்றம் இவற்றிற்கு உத்வேகமாக இருந்தது. அதுவே இன்றளவும் அவர்களுக்கு சமுதாயத்தில் சமமான உரிமையும், முன்னேற்றத்திற்கு அடித்தளமாகவும் அமைந்துள்ளது.
பாரதியின் சமூக சீர்திருத்த மற்றும் உயர்ந்த முற்போக்கு சிந்தனையில் விளைந்த ஆணித்தரமான எழுத்துக்கள் தான், சமூகத்தில் நிலவிய பல தவறான நடைமுறை அவலங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியது. அவர்களின் புரட்சி எழுத்துக்கள்தான், பட்டித் தொட்டி எங்கும் விடுதலை வேட்கையை ஊட்டி, மக்கள் சக்தி கிளர்ந்து எழுந்தது. பாரதி மறைந்தாலும், அவர்கள் விதைத்த உயர்ந்த சிந்தனை தரவுகள் அனைத்தும் காலம் கடந்து நிற்கிறது.
உ.வே.சாமிநாத ஐயர் அவர்களின், உயர்ந்த சிந்தனையில் எழுந்த பொறிதான், அழிந்து போகும் நிலையில் இருந்த பண்டைய தமிழ் மொழி இலக்கியங்களைத் தேடித்தேடி அலைந்து, அவற்றை அச்சில் ஏற்றியதால்தான், அந்த சிறப்புமிக்க காப்பியங்கள் இன்றளவும் பல தலைமுறைகள் கடந்து, தமிழ் தொன்மையையும், செழுமையையும் பறைசாற்றும் வகையில் தமிழுக்கும் தமிழ் மொழிக்கும் ஈடில்லா புகழை சேர்க்கின்றன.
உயர்ந்த சிந்தனையும், தீர்க்கமான தொலைநோக்கு பார்வையும் தன் வாழ்க்கையின் கடைப்பிடித்து வாழும் யாவரும் களப்போராளிகள். அவர்கள்தான், நாளைய உலகின் ஆகச்சிறந்த மனிதர்கள். நாமும், வாழும் காலம் அதனை பின்பற்றுவோம். நீக்கமற நிலைத்த புகழோடு வாழ்வோம்!