
"ஊழிபெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படுவார்"
இது வள்ளுவன் வாக்கு. அதாவது மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி. மனஉளைச்சலாக இருந்தாலும் சரி, எந்த நிலையிலும் உங்களது நிலையிலே இருந்து தவறிவிடாதீர்கள்.
பலர் பல நேரங்களில் தங்களது நிலையிலே இருந்து தடுமாறி தவறான காலடி எடுத்து வைப்பதாலேயே துன்பத்தையும் பெறுகின்றனர். மனஉளைச்சலையும் பரிசாகப் பெறுகின்றனர்.
சோகமோ, கஷ்டமோ எதிரான விளைவுகளை சந்தித்தால் சோர்வடையாதீர்கள். துவண்டு போகாதீர்கள். எத்தகைய தவறான செயல்களால் தீமைகளால் மன உளைச்சலைப் பெற்றோம் என்ற காரணத்தை ஆய்ந்து அறிந்து அதனையே பாடமாக்கிக் கொள்ளுங்கள்.
தமது வெற்றிகள் நினைத்ததை முழுமையாக அடைந்த ஆனந்தம் போன்றவற்றில் நாம் அடைகின்ற மகிழ்ச்சி மகத்தானது.
இந்த மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் காரணமே நாம் நாமாக செயல்பட்டதாலேயே வெற்றியை பெறமுடிந்தது. கூர்மையான அறிவாலேயும் நிதானமான செயலாலேயும் நஷ்டத்திலேயிருந்து கூட லாபத்தை பெறஇயலும்.
ஓர் இழப்பால் ஒரு லாபத்தைப் பெறலாம் என்பது பொது விதி. சோகத்தை இழப்பை தாழ்வு மனப்பான்மையை பக்குவமாக எடுத்து வீசி எறியுங்ள். வெற்றிக்கனி உங்கள் காலடியில் பொத்தென்று விழும். இது உறுதி.
கண் இழந்த பிறகுதானே கவிஞன் மில்டன் "இழந்த சொர்க்கம் " என்ற காவியத்தைப் படைத்தான்.
காதுகள் செவிடாய் இருந்தும், உலகமே வியக்கும் வண்ணம், கலைக்கு உயிரோட்டம் கொடுத்தவன் பீத்தோவான்.
பொதுவுடைமைப் பகலவன் உழைப்பாளிகளின் காவலனாக வாழ்ந்த ஜீவாவுக்கு காது கேட்காது.
காதும் - கண்ணும் வாயும் செயல் இழந்த ஹெலன் கில்லர் எவ்வாறு உலக வரலாற்றில் பதியப்பட்டார்.
வாழ்வில் நாம் பெறுகின்ற பயன்கள், மகிழ்ச்சிகள், வெற்றிகள் யாவும் கிடைப்பதில் பெருமையடைவதை விட இழப்பிலே இருந்து இவைகளைப் பெறுகின்ற முயற்சியின் அறிவுத் திறனே பாராட்டுதலுக்குரியது.
குன்னக்குடியார் தனது இசைக்கச்சேரியில் மெய்மறந்து வயலினை வாசித்துக் கொண்டிருக்கின்ற போது -எதிர்பாராது நான்கு நரம்பு போன்ற மெல்லிய கம்பிகளில் ஒன்று அறுந்துவிட்டதாம். இடையிலே அது அறுந்தாலும் தாளம் தப்பாது, லயம் குன்றாது, சுருதி சோரம் போகாது மூன்று கம்பிகளை மட்டும் மீட்டியே கரவொலியைப் பெற்றாராம்.
இவர்கள் எல்லாம் இழப்பிலே நட்டத்திலே லாபத்தைச் சேர்த்த வித்தகர்கள். சோர்வைத் தூக்கி எறிந்துவிட்டால் நீங்களும் வாகை சூடி வாழலாம்.
எப்போதும் மகிழ்ச்சியாக இருத்தல், தன்னைப் பற்றி உயர்வாக நினைத்தல், கிடைத்ததைக் கொண்டு மனநிறைவாக வாழக் கற்றுக்கொண்டால் வாழ்க்கை வசீகரமாகும்.
கைமாறு கருதாத நன்மைகளை பிறருக்குச் செய்வது என்பது விதிக்கப்பட்ட பணி அல்ல. இருந்தாலும் இதன் வழி நமது உடலும், உள்ளமும் முல்லை போல் மணம் வீசி மகிழ்வைத் தருகிறது.
தன்னலமில்லாத தியாகம் ஒழுக்கமான கட்டுப்பாடு, இவை நமது ஆன்ம பலத்தை தூய்மைப்படுத்த உதவும்.
வெளிஉலகத்திற்கு நீங்கள் நல்லவர்களாக, வல்லவர்களாக நேர்மையானவர்களாக சுட்டிக் காட்டப்பட்டால் அன்றைக்கே நீங்கள் தலைசிறந்து வித்தகராக விளங்கிவிடுவீர்கள்.