உன் பலம் எது? - உனக்குள் ஒளிந்திருக்கும் எஃகு மனிதனைத் தேடு!

Lifestyle story
Motivational articles
Published on

டல் நலம் பற்றி குறிப்பிடும்போது சுவாமி விவேகானந்தர்”உடலை  ‘எஃகு’ போல் உறுதியுடன் வைத்திருங்கள்"  என்கிறார்.

நம்மில் எத்தனை பேருக்கு உடல் நலன் குறித்த கவலை இருக்கிறது?

“ஏன் இல்லை? அதனால்தான் காலையில் தினமும் ஐந்து கிலோமீட்டர் ஓடுகிறேன்.”

“தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி கூடத்தில் கிடக்கிறேன்.” 

“அந்த யோகா குருவின் சீடன் நான்.  அவரின் யோக முறையை விடாமல் செய்கிறேன்.”

இப்படி உடனடியாக பதில் சொல்பவர்களிடம், ‘நீங்கள் எத்தனை பேர் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள்?’ என்று கேட்டால் அதில் பாதி பேர்  காற்று போன பலூன்போல் சுருங்கிக்கொள்வார்கள். 

“மிதமான சர்க்கரை வியாதி இருக்கு!”

“டாக்டர் தொடர்ந்து பிபி மாத்திரை சாப்பிட சொல்லியிருக்கார்.”

“இரவானால் ஒரே ஒரு பெக் மட்டும் போடுவேன். அப்பதான் தூக்கம் வரும்.”

 என்றெல்லாம் சமாளிப்பு குரல்கள் எதிரொலிக்கும்.

சுவாமி விவேகானந்தர் சொன்ன எஃகு போலான உடல் உறுதி இதுதானா?

உடல் என்பது பல்வேறு உறுப்புகளின் கூட்டமைப்பு. இந்த உறுப்புகள் அணுக்களின் அடிப்படையில் இயங்குகின்றன.

இந்த உறுப்புகளை நான்கு முக்கிய அம்சங்கள் இயக்குகின்றன.

அவை ரத்த ஓட்டம், காற்றோட்டம், வெப்ப ஓட்டம் மற்றும் நான்காவது உயிர் ஓட்டம் எனப்படும் சக்தியோட்டம். இவற்றில் முதல் மூன்று ஓட்டங்களை ஓரளவு உணர முடியும். ஆனால், நான்காவது ஓட்டமான உயிரோட்டத்தை உணர கொஞ்சம் தியானமும் ஆன்மிக அறிமுகமும் தேவை.

நீங்கள் செய்யும் உடற்பயிற்சியானது இந்த நான்கு இயக்கங்களை சீராக வைத்திருக்க உதவவேண்டும். இதை உணர்ந்து உடற்பயிற்சி செய்யும்போதுதான் நாம் நினைக்கும் ஆரோக்கியம் முழுமையாகக் கிடைக்கும்.

தினம்தோறும் பட்டியல் போட்டு உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று உடற்பயிற்சி செய்பவர்கள் பார்ப்பதற்கு கட்டுமஸ்தாக இருப்பதாக தெரியும். அவர்களையே சில மாதங்கள் இடைவெளி விட்டு சந்தியுங்கள். ‘ப்ரோ! கழுத்துல எலும்பு லேசா தேய்ஞ்சிடுச்சி...மூட்டு வலி’  என புதுப்பட்டியல் வெளியிடுவார்கள். காரணம் மேற்கண்ட விழிப்புணர்வு இல்லாத காரணம்.

ஆரோக்கியம் என்பது அழகான தோற்றம் அல்ல. நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் நீங்கள் இயல்பாக இருக்கும் தோற்றமே மிக அழகாக தெரியும்.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையில் பிரச்னைகள் வராமல் தடுக்க எளிய வழிகள்!
Lifestyle story

ஆரோக்கியம் என்பது அதிகாலையில் நீங்கள் எழும்போது உங்கள் உடல் முழுவதும் உற்சாகம் நிரம்பி வழிய வேண்டும். அதாவது ஒரு துப்பாக்கியில் இருந்து வெளிப்படும் தோட்டாவை போன்று நீங்கள் அத்தனை உற்சாக நிரம்பலுடன் எழுந்திருக்கவேண்டும்.

எழுந்திருக்கும் போதே சோர்வுகளுடனும் சோம்பலுடனும் அங்கே இங்கே வலி அல்லது புரண்டு புரண்டு படுத்து எழுந்திருப்பது எல்லாம் ஆரோக்கியமற்ற நிலையின் அறிக்குறிகளே!

அடுத்து நீங்கள் நல்ல ஆரோக்கியத்தில் இருந்தால், காற்றில் மிதப்பதுபோன்று மிதமான ஒரு ஆனந்தம் எப்பொழுதும் உடல் முழுவதும் பரவி நிற்பதை உங்களால் உணரமுடியும். மாறாக உடலை நீங்கள் சுமப்பதை போன்ற உணர்வும் அவ்வப்போது சோர்வும் ஏற்பட்டால், அது உங்களது ஆரோக்கியமற்ற நிலையின் அறிக்குறி.

உங்கள் உடல் அவ்வளவு எளிதில் சோர்வடையாது. மனம் சொல்லுவதை உடல் கேட்கும். அதாவது ஓய்வு வேண்டுமெனில் தூங்கலாம் என்று முடிவெடுத்த பத்துவினாடியில் நீங்கள் தூங்கிவிடுவீர்கள்.

உடல் ஏன் சோர்வடையாது எனில் நீங்கள் பணிகளை செய்யும்போது உங்கள் உடலில் இருந்து வெளியேறு ஆற்றலுக்கு ஈடாக உடனுக்குடன் பிரபஞ்சத்தில் இருந்து உங்கள் உடல் சக்தியை ஈர்த்துக்கொண்டே இருக்கும். எனவே உடல் எப்பொழுதும் சக்தி நிரம்பியதாக இருக்கும்.

இவையெல்லாம் உங்களிடம் இருக்கிறதா என்று பாருங்கள். இல்லையெனில் இந்த நிலையை அடைய முயற்சி செய்யலாம். இந்த ஐந்து விஷயங்களை பின்பற்றினால் நிச்சயம் இது சாத்தியம்.

1. நல்ல உறக்கம் அவசியம். துல்லியமாக ஒரு நேரத்தை குறிப்பிட்டு அந்த நேரத்தில் தூங்கி குறிப்பிட்ட நேரத்தில் எழுந்திருக்க பழகுங்கள். ஆரோக்கியமான உறக்கத்திற்கு சிறந்த நேரம் இரவு 10 முதல் காலை 5 மணி வரை.

2. உடலை வருத்தாமல் மிதமான உடற்பயிற்சி 30 நிமிடங்கள் செய்யுங்கள். அந்த பயிற்சியில் நிச்சயம் உச்சி முதல் உள்ளங்கால் வரை அனைத்து உடல் பகுதிகளும் அடங்கவேண்டும். நடைபயிற்சி ஆக சிறந்த பயிற்சி. ஆனால் அப்படி போகும்போது ஹெட் போன் மாட்டுகொண்டு பாட்டுகேட்பது. வழிநெடுக செல்போனை வைத்துக்கொண்டு பேசிக்கொண்டே செல்வது. நடைபயிற்சியின் முடிவில் தெருவோர டீ கடையில் நான்கு மெதுவடைகளை திணித்துகொள்வது எல்லாம் கெட்ட செயல்கள்!

இதையும் படியுங்கள்:
அளவுக்கு மீறி உழைக்கிறீர்களா? - 'ஒன் மேன் ஆர்மி' மனப்பான்மையை மாற்றுங்கள்!
Lifestyle story

3. தினந்தோறும் மனத்தூய்மை செய்யுங்கள். நமது மனதை ஆய்வு செய்வது மூலம் இதனை செய்யலாம். அல்லது காலை மாலை 20 நிமிடம் தியானம் செய்வது நல்லது. மனத்தூய்மை என்பது நமக்குள் எழும், நமக்கு உதவாத எண்ணங்களை நீக்குவது. இதனை காலை மற்றும் இரவு என இருவேளைகளில் செய்யவேண்டும். உங்களுக்கும் உங்கள் வாழ்க்கைக்கும் என்னென்ன தேவையோ அதைப்பற்றிய சிந்தனை மட்டுமே அதுகுறித்த அறிவு மட்டுமே எப்பொழுதும் இருக்கவேண்டும். வெற்றி தானே வந்தடையும்.

4. தினம் ஒருவருக்கு உள்ள உவகையுடன் உதவுங்கள். குறைந்தது பத்து ரூபாய் யாராவது ஒருவருக்கு கொடுப்பது அதாவது தேவையறிந்துகொடுப்பது நல்லது. இது பிரபஞ்ச இயக்கத்தில் உங்கள் மீதான நேர்மறை ஆற்றலை அதிகரிக்க செய்யும்.

5.புன்னகை மட்டுமே உங்கள் முகவரியாக இருக்கவேண்டும். யாரை சந்தித்தாலும் அவர்களின் நேர்மறை குணத்தை மனம் திறந்து பாராட்டுங்கள். அப்பொழுதுதான் உங்களை சுற்றி உள்ள ஈர்ப்பு அலை அதிகரிக்கும்.

உடல் - உயிர் - மனம் இந்த மூன்றும் மனித வாழ்க்கையில் பின்னிபிணைந்தது. உடல் எஃகுபோல் ஆகவேண்டும். மனம் இறகு போல இலகுவாகவேண்டும். வாழ்க்கை என்றென்றும் இன்பமாக மாறி நிற்கும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com