
சில நேரங்களில் நாம் சொல்வதுண்டு, பிரச்னைகள் நம்மை பார்த்து ஓட வேண்டுமே தவிர நாம் பிரச்னைகளை பார்த்து ஓடக்கூடாது என்று. வாஸ்தவத்தில் இது இரண்டுமே நடக்காத விஷயமாகும். பிரச்னைகளும் நம்மை பார்த்து ஓடாது நம்மாலும் பிரச்னைகளை பார்த்து ஓடமுடியாது. எப்படி இது நடக்கும், நீங்களே சற்று யோசித்துப் பாருங்கள்.
உதாரணத்திற்கு வீட்டில் ஒரு பிரச்னை இருக்கிறது அந்த பிரச்னையிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக நீங்கள் ஒரு வாரம் எங்கேயோ போயிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஒரு வாரம் கழித்து மறுபடியும் அதே வீட்டிற்குள் நுழைகிறோம், அந்த பிரச்னை தீர்ந்துவிட்டதா? இல்லை, அது விஸ்வரூபம் எடுத்து பிடித்து வைத்த பிள்ளையார்போல் வாசலிலேயே நம்மை வரவேற்கிறது. ஆகவே பிரச்னைகள் நம்மை பார்த்து ஓடாது, நம்மாலும் ஓட முடியாது இதுதான் உண்மை.
பிரச்னைகள் அடுத்தவர்கள் மூலமாகவும் வரலாம், சில சமயம் நம்முடைய செயலினாலும் அல்லது பேச்சினிலும் வரலாம். நாம் முடிந்தவரை நம்முடைய பேச்சை சில இடங்களில் குறைத்துக் கொள்வது நல்லது. வீண் பேச்சினாலும் பிரச்னைகள் அதிகமாகலாம் ஆகவே எங்கு பேசவேண்டுமோ அங்கு பேசவேண்டும். பிரச்னை வரும் என்று தெரிந்தால் அங்கு பேசாமல் இருப்பதே நல்லது. பல வழிகளில் வரும் இந்த பிரச்னைகளை நம்மால் முடிந்த வரை அவை வராத படிக்கு தவிர்க்க முடியும். அதற்கான எளிய வழிமுறைகளில் இப்பதிவில் பார்க்கலாம்...
நீங்கள் யாரிடமாவது எதாவது ஒரு கேள்வியையோ அல்லது யோசனையையோ அல்லது உதவியை கேட்டிருந்தால், அவர்களின் பதிலிற்காக பொறுமையாக காத்திருக்க வேண்டும். அந்த நபர் உங்களுக்கு தேவையான பதிலையோ அல்லது உதவியை அளித்தால் நல்லது. அப்படி இல்லையென்றால் மற்றவர்களை நாடுவதுதான் நல்லது. இதன் மூலமாக தேவையில்லாத வீண் பேச்சுக்களை தவிர்க்கலாம். உங்களது கேள்விக்கோ அல்லது உதவிக்கோ பதிலளிக்கவில்லை என நீங்கள் கோவப்படுவதால் எந்த பலனும் இல்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
உங்களுடைய நண்பர்களோ அல்லது உறவினர்களோ உங்களிடம் பகிரும் அனைத்து விஷயங்களையும் பற்றி நீங்கள் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அப்படி ஒரு சில விஷயங்களை பற்றி உங்களுக்கு தெரியவில்லை என்று அவர்கள் கிண்டல் செய்தால் அந்த நேரத்தில் அமைதியாக இருப்பதுதான் உங்களுக்கு நல்லது. மேலும் சில நேரங்களில் உங்களுடைய பேச்சிற்கு மதிப்பு இல்லை என்கிற பட்சத்தில், அமைதியாக இருப்பதே நல்லது. இதனால் தேவையில்லாத பிரச்னைகள், மனகசப்புகள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
சில நேரங்களில் யாராவது உங்கள் மீதுள்ள கோபத்தினால் வன்மமாக பேசினால், அவருக்கு நீங்களா யோசித்து பதில் அளிப்பது நல்லது. ஒருவேளை இதை பற்றி மேற்கொண்டு பேசினால் பிரச்னை ஆகும் என்று நீங்கள் நினைத்தால் அமைதியாக அங்கிருந்து சென்று விடுங்கள். நீங்கள் செய்யாத தவறுக்கு உங்களை குற்றம் சாட்டினால் நீங்கள் அங்கிருந்து சென்று விடுங்கள். விளக்கம் அளிக்கிறேன் என்று முயற்சி செய்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும்.
பொது இடங்களிலோ அல்லது அலுவலகத்தில் மீட்டிங்கிலோ பேசப்படுகின்ற ஒரு விஷயத்தை பற்றி உங்களுக்கு முழுவதுமாக தெரிந்திருந்தாலும், அச் சமயத்தில் வாயை மூடிக்கொள்வதுதான் நல்லது. ஆர்வக்கோளாராக நீங்கள் அதைப்பற்றி அந்த இடத்தில் சொல்லும்போது தவறாகப் புரிந்துக்கொள்ளப்படலாம்.
உங்களுடைய நண்பருக்கோ அல்லது ஆபீஸ் டீமில் யாராவது ஒருவருக்கோ, நீங்கள் அவர்கள் புரிந்த தவறுக்கு ஏற்கனவே எச்சரிக்கை செய்துவிட்டீர்கள் என்று வைத்து கொள்வோம். அவர்கள் மீண்டும் அதே தவறை செய்யும் பட்சத்தில் நீங்கள் மீண்டும் மீண்டும் அவரை எச்சரிக்க வேண்டிய அவசியமில்லை. மனதில் வைத்து குழப்பிக்கொள்ளாமல் அமைதியாக கடந்துவிட வேண்டும்.
ஆகவே , எங்கு அமைதியாக இருக்க வேண்டுமோ அங்கு அமைதியாக இருந்து தேவை இல்லாத இடங்களில் பேச்சை தவிர்த்து தேவைக்கேற்ப பேசினால் பிரச்னைகள் வருவதை கண்டிப்பாக தவிர்க்கலாம்.