
நீங்கள் விரும்பிய விதத்தில் உங்கள் வாழ்க்கை அமைந்திருக்கிறதா? உங்கள் மனதுக்கு மகிழ்ச்சி கிடைக்கிறதா? மனதுக்கு நிறைவு தரும் செயல்களை செய்கிறீர்களா?
இந்தக் கேள்விகளுக்கு சரியான பதில்கள் கிடைத்தால் மட்டுமே உங்கள் வாழ்வில் அர்த்தத்தை உணர்வீர்கள் நிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கு வாழ்வின் அர்த்தம் தேடுவது மிக அவசியமே. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது.
பட்டியல் இடுங்கள்.
உங்களுக்கு மகிழ்ச்சி தரும் செயல்கள் எவை? உங்களுக்கு மிகவும் விருப்பமானவை எவை? எதில் உங்களுக்கு ஆர்வம் என்று ஒரு பட்டியல் போடுங்கள். இவை உங்கள் வேலை சார்ந்தவர்களாக இருக்கலாம். தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்ததாகவும் இருக்கலாம். நேரம் போவதே தெரியாமல் எந்தெந்த வேலைகளை விரும்பி செய்கிறீர்கள்? இதை செய்தால் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது என்ற அடிப்படையில் இந்தப் பட்டியல் இருக்க வேண்டும்.
விடை தேடுங்கள்.
உங்களை நீங்களே சில கேள்விகளை கேட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் இப்போது செய்வது என்ன? இனி செய்ய வேண்டியது என்ன? என்பதை அவை உணர்த்தும் உங்களிடம் எதை நினைத்து நீங்கள் பெருமைப் படுகிறீர்கள்?
மற்றவர்களின் எந்த பண்புகளை பார்த்து நீங்கள் வியர்க்கிறீர்கள்? எதைச் செய்யும்போது உங்களுக்கு அளவு கடந்த உற்சாகம் கிடைக்கிறது? ஒவ்வொரு நாளிலும் எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக உணர்கிறீர்கள்? இந்த உலகில் ஏதாவது ஒரு விஷயத்தை மாற்றும் சக்தி உங்களுக்கு கிடைத்தால் எதை மாற்றுவீர்கள்? வாழ்க்கையில் கண்டிப்பாக செய்தே ஆகவேண்டும் என்று நீங்கள் நினைப்பது எதை இந்த மாற்றத்தை செய்தால் உங்களுக்கு வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் இந்த கேள்விகளுக்கு ஒளிவு மறைவில்லாமல் விடை தேடுங்கள்.
அடிக்கடி செய்யுங்கள்.
ஒரு குழந்தைபோல எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருப்பது வரம். அப்படிப்பட்ட மகிழ்ச்சி உங்களுக்கு கடைசியாக எதில் கிடைத்தது. யாருடன் இருக்கும்போது கிடைத்தது? என்று யோசித்துப் பாருங்கள். அப்படி உங்களுக்கு மகிழ்ச்சியை வழங்கும் செயல்களை அடிக்கடி செய்யுங்கள்.
கற்றுக் கொள்ளுங்கள்.
நிறைய பேர் தங்களைச் சுற்றி ஒரு வட்டம் போடுகிறார்கள். அதையே பாதுகாப்பாக நினைக்கிறார்கள் .அதைத் தாண்டி வெளியில் செல்லவோ, புது மனிதர்களை சந்திக்கவோ அவர்கள் விரும்புவதில்லை. அந்த வட்டத்தை தாண்டி வெளியில் செல்லும்போதுதான், வேறொரு உலகத்தை உங்களால் பார்க்க முடியும். உங்கள் ஆர்வத்தையும் திறமைகளையும் ,அந்த உலகத்தில் வைத்து மதிப்பிட முடியும். புதிய மனிதர்களுடன் பழகும்போது அவர்களிடம் இருந்து புதுப்புது விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும்.
எல்லோருடனும் பழகுங்கள்.
உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சிக்கு யாரோ ஒருவரை மட்டுமே சார்ந்திருக்காதீர்கள். உறவுகள், நண்பர்கள், அலுவலக சகாக்கள் என்று எல்லோருடனும் பழகுங்கள். அவர்களை நீங்கள் மகிழ்ச்சியாக வைத்திருந்தால் அவர்களும் உங்களுக்கு மகிழ்ச்சியை தருவார்கள். ஒரு தொழில் ,வித்தியாசமான வியாபாரம் எதுவாக இருந்தாலும் அதை திட்டமிட்டு வாழ்க்கையை அதை நோக்கி நகருங்கள். காலம் மாறும்போது உங்கள் இலக்கும் மாறலாம். அதற்கு ஏற்ப மாறிவிடுங்கள். நான் சரியான திசையில் தான் செல்கிறோமா? என்பதை அடிக்கடி உறுதி செய்யுங்கள்.
நிரந்தர மகிழ்ச்சி பெறுங்கள்.
உங்கள் கவனத்தை திசை திருப்பும் எந்த விஷயத்துக்கும் இடம் கொடுக்காதீர்கள். சில சமயங்களில் பொழுது போக்குகள் கேளிக்கைகள் தேவைப்படலாம். ஆனால் இப்படியே இருப்பது தான் மகிழ்ச்சி தருகிறது என்று நினைத்து கேளிக்கைகளில் மட்டுமே மூழ்கி விடாதீர்கள். தற்காலிக மகிழ்ச்சிக்கும் நிரந்தர மகிழ்ச்சிக்கும் வித்தியாசம் உண்டு. வாழ்க்கையில் நடைபெறுவதே நிரந்தர மகிழ்ச்சியை தரும்.
பலத்தைப் பயன்படுத்துங்கள்.
உங்களின் பலம் எது? பலவீனம் எது? என்று மதிப்பிடுவதில் குழப்பம் இருக்கலாம். நெருங்கிய நண்பர்களிடம் இதைக் கேளுங்கள். உங்களுக்கு மகிழ்ச்சி தரும் செயல்களை செய்வதற்கு உங்கள் பலத்தைப் பயன்படுத்துங்கள்.
தோல்விகள் உங்கள் தேடலுக்கு தடை போடுவதாக இருக்கக் கூடாது. அவை உங்களுக்கு வழிகாட்ட வேண்டும்.
நிம்மதியைதேடி எங்கெங்கோ பயணம் செய்பவர்கள் கடைசியில் வீடு விரும்பியதும் அங்கே அதை கண்டுபிடிப்பார்கள்.
ஒவ்வொரு தோல்வியும் ஓர் அனுபவம். ஒவ்வொரு இழப்பும் ஒரு லாபம். ஒவ்வொரு மாற்றமும் ஒரு எச்சரிக்கை. ஒவ்வொரு காணாமல் போதலும் ஒருதேடல்தான்.