

ஜிம்பாப்வே நாட்டின் பிரதம மந்திரியாகத் தன்னை உயர்த்திக் கொண்ட ராபர்ட் முகாபே என்பவர், ஒரு கிராமத்தில் தச்சு வேலை செய்துவரும் ஒருவருக்கு மகனாகப் பிறந்தார். சிறுவனாக இருக்கும் போதே இவர் படித்து பல விஷயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினார். இரவும் பகலும் பல நல்ல புத்தகங்களையும் பத்திரிகைகளையும் படித்துத் தன் அறிவுத்திறனை வளர்த்து வந்தார்.
உலக நாடுகள் கடைபிடிக்கும் அரசியல் முறைகள், அங்கு நடை பெறும் முக்கியமான நிகழ்வுகள், பொருளாதார முன்னேற்றம் போன்ற அனைத்தையும் அவர் ஆர்வத்துடன் தெரிந்துகொண்டார். அப்போது அவருடைய நாடு வெள்ளையர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு அடிமை நாடாக இருந்து வந்தது. தன் நாட்டின் நிலைமையைக் கண்டு மனம் வருத்திய முகாபே தன் நாட்டிற்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுக்கும் முயற்சியில் தன் உயிர், பொருள் அனைத்தையும் கொடுத்து உழைக்க ஆரம்பித்தார்.
கொரில்லாப் படையைத்திரட்டி வெள்ளையர்களுக்கு எதிராகப் போர்க் கொடியை உயர்த்தினார். வெள்ளையர் களின் அரசு அவரைக் கைது செய்து அவருக்குப் பத்து இலட்சம் அபராதமும் சிறைத் தண்டனையும் அளித்தது.
சிறையில் இருக்கும்போது நேரத்தை வீணாக்காமல் நன்கு படித்து, மூன்று பெரிய பட்டங்களைப் பெற்றார். அவர் சிறையில் இருக்கும் போது தாம் மிகவும் விரும்பிய தம்முடைய நான்கு வயது மகன் மலேரியா காய்ச்சலினால் தாக்கப்பட்டு மரணப்படுக்கையில் படுத்திருப்பதாக அவருக்குத் தகவல் கிடைத்தது.
தன் மகனுடைய முகத்தைச் சில நிமிடங்களாவது பார்ப்பதற்கு அவர் அரசாங்கத்திடம் அனுமதி கேட்டார். அரசாங்கம் அவருக்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டது. அவருடைய அன்பு மகனுடைய சாவு அவரை இடியாகத் தாக்கியது. தன் பையனுடைய முகத்தைப் பார்க்கக்கூட அனுமதி தரமறுத்த அயல்நாட்டு ஆதிக்கத்தை அழித்தே தீருவது என்று சங்கல்பம் எடுத்துக்கொண்டார்.
தங்களை ஆண்டு வந்த வெள்ளையர்களை அவர் வெறுக்க வில்லை. 'எங்களை மிருகங்கள் போன்று நடத்தாதீர்கள். எங்கள் நாட்டில் நாம் அனைவரும் சகல வசதிகளுடன் வாழ இடமும் பொருளாதார வசதிகளும் இருக்கின்றன' என்று கூறினார்.
தன் நாட்டிற்குச் சுதந்திரம் கிடைத்தவுடன், தன் தலைமையில் இயங்கி வந்த கொரில்லாக்களை வேட்டையாடிக் கொன்று வந்த கொள்ளையர்களின் படைத் தலைவரான ஜெனரல் வாட்ஸ் என்பவரையே சுதந்திர நாடான ஜிம்பாப்வே நாட்டின் படைத் தளபதி யாக நியமித்தார்.
ஏழைக் குடும்பத்தில் பிறந்த முகாபே அன்னிய ஆதிக்கத்தை அழித்துத் தன் நாட்டின் பிரதமராகத் தன்னை உயர்த்திக்கொண்டார். பெரிய காரியங்களைச் செய்து முடிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் தன் இலட்சியத்தை அடையக் கடுமையாக உழைப்பவன் கட்டாயம் மக்கள் மதிக்கும் தலைவனாக உருவெடுப்பான் என்பதை ராபர்ட் முகாபே வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள முடியும்.
ஏழ்மை நிலையிலிருந்து நாட்டின் பிரதம மந்திரியாக உயர்த்திக் கொண்ட அவருடைய முயற்சி போற்றத் தகுந்தது. முயற்சியால் முடியாதது எதுவும் கிடையாது என்பதை நாம் முதலில் உணர்ந்துகொண்டு உழைத்தால் உயர்வு நிச்சயம்.