
குறிக்கோள் என்றால்? நீங்கள் மேற்கொள்ளப்போகும் தொழில், தொழிலின் வளர்ச்சி, பயன், பயனின் கூட்டுப் பலன், இறுதிநிலை. இலக்கை அடைதல், இவ்வளவு கட்டங்கம் அதில் உள்ளன.
வீட்டு மாடி இருக்கிறது. நாம் கீழே இருக்கிறோம் நாம் அடைய வேண்டிய இலக்கு, மாடி, மேல்தளம்! எப்படி அதை அடைவது? ஒரே தாவாகத் தாவி, எம்பிக் குதித்து அல்லது அந்தரத்தில் பறந்து மாடியை அடைந்துவிட முடியுமா? முடியாது.
மாடியை அடைவதற்காகத்தான் மாடிப்படிகள் அமைக்கப் பட்டுள்ளன.
முதல் படி. இரண்டாவது படி, மூன்றாவது படி என்று ஒவ்வொரு படியாக அடைந்து, கடந்து, இறுதியில் மாடியை அடைகிறோம். அவ்வாறுதான், நம் குறிக்கோளை அடையும் மோலோட்டமான ஆசை மட்டும் போதாது. அதனை நோக்கி நம் செயல் முதல்படி, அதை அடைந்ததும் இரண்டாவது படி அதைக் கடந்து மூன்றாவது படி என்று முன்னேற வேண்டும்.
பலபேர் தங்கள் ஆசை, குறிக்கோளில் வெற்றிபெற முடியாமல் போனதற்கு, அவர்கள் ஒரே தாவாகத்தாவி மாடியை அடைந்து விடலாம் என்று நினைத்ததுதான்.
"கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும்' என்று தங்கள் செயலின்மையை, அவநம்பிக்கையால் முயற்சிக்காமல் இருந்து விட்டதை ஏற்க மனம் இல்லாமல் வெறும் நப்பாசையில் காலம் கழித்து விடுவார்கள்.
அந்தக் காலத்தில் பள்ளியில் சேர்க்கும்போது, ஐந்து வயது நிரம்பிவிட்டது என்பதற்கு அடையாளமாக ஆசிரியர் ஒரு தேதியை குறிப்பிட்டு அதையே பிறந்த நாளாகப் பதிவு செய்துவிடுவார்.
அப்படி அந்நாளில் பிறந்த பலர்தான் இன்று இந்தியத் தலைவர்களாக உள்ளனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
எனவே, வீட்டின் மோட்டுவளையைப் பார்த்தபடி பகல் கனவு காணும் சராசரி மனிதனாக அல்லாமல், நடைமுறையை கவனித்து,அதன் கஷ்ட நஷ்டப் பாதையைக் கடக்காமல் வெற்றி கொள்ளுங்கள்.
எங்களுடைய தொழில் சம்பந்தமான குறிக்கோளால் அதனை நோக்கிய பணிகளால் மனித சமுதாயத்துக்கு எந்த வகையிலாவது பலன் விளையுமா என்று ஆராயுங்கள். நீ கூடுமானவரை, பிறருக்குப் பயன்தரத் தக்க வகையில் உங்கள் குறிக்கோள் அமைந்திருந்தால் மற்றவர்களின் அன்பும் ஆதரவும், உங்கள் முயற்சிக்கு உறுதுணையும் கிட்டும்.
குறிக்கோள் பெரியதாக, வலிமையானதாக, மிகுந்த வளம் தருவதாக இருக்கும் பட்சத்தில், அதைநம்மால் நிறைவேற்ற முடியுமா என்ற தயக்கமும் தன்னம்பிக்கை குறைவும் தாழ்வு மனப்பான்மையும் நம்மை லேசாக அச்சப்படுத்தும்; அந்த அச்சம் சஞ்சலத்தை உண்டாக்கும். சஞ்சலம் முயற்சியை தள்ளிப் போடச் செய்யும்.
எனவே உங்கள் திறனை நீங்களே குறைவாக மதிப்பிட்டுக் கொள்ளாதீர்கள்.
எங்கள் குறிக்கோள்களை எல்லாம் தீர்மானித்த பிறகு, அவற்றை வரிசையாக, முறைப்படுத்தி எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
இதுவே நீங்கள் செய்யும் முதல் வேலையாக இருக்கட்டும்.
உங்களுடைய குறிக்கோள்களை, ஆசைகளை அடைவதில் உங்களிடமுள்ள திறமைகள், உங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் ஆகியவற்றைக் காட்டிலும், உங்கள் மனோ நிலையே மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது.
மிதமான திறமைகளுடன் வெற்றி மனப்பான்மை கொண்ட ஒருவன். மிக புத்திசாலியான தோல்வி மனப்பான்மை கொண்ட ஒருவனைக்காட்டிலும் அதிகமான சாதனைகளைச் செய்வான்.
எனவே, வெற்றி மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
வெற்றி மனப்பான்மையுடனேயே எப்போதும் இருங்கள்;
வெற்றி அடைவதைப் பற்றியே எப்போதும் எண்ணுங்கள்!