

இதோ... இன்னும் சில நாட்களில் இந்த வருடம் முடியப் போகிறது. இந்த ஆண்டு ஒவ்வொருவர் வாழ்விலும் எதோ ஒரு பெரிய சம்பவத்தை நிச்சயம் பாதித்திருக்கும். எப்போதும் நாம் முடிந்த வருடத்தை திட்டியே பழகிவிட்டோம்.
அதேபோல் வரப்போகும் வருடத்தை ‘ என்னலாம் பாக்க போறோமோ’ என்ற பயத்திலேயே வரவேற்போம். எந்த அசைவும் இல்லாமல் இருக்கும் சிலைக்குக்கூட ஏகப்பட்ட பிரச்னைகள் அதைத்தேடிவருகின்றன. நாம் மனிதர்கள். அதுவும் தினமும் புதுப் புது வேலைகளை செய்து, புதுப் புது ஆட்களைப் பார்க்கும் மனிதர்கள். நிச்சயம் பிரச்னைகள் வருவது இயல்புதான்.
ஒவ்வொரு நாளும் இன்று நாள் நன்றாக இருக்கும் என்று எண்ணி அந்த நாளை வரவேற்கிறோம். அதேபோல் அடுத்த வருடத்தையும் நாம் சிரித்த முகத்துடன் எந்த பயமும் இல்லாமல், எந்த குறையும் சொல்லாமல் வரவேற்போம். அதேபோல் சென்ற ஆண்டு பல அனுபவங்களைக் கற்றுத்தந்ததற்கு நன்றி சொல்லவில்லை என்றாலும் சலிக்காமல் வழி அனுப்பி வைக்கலாம்.
அடுத்த ஆண்டு அழகாக அமைய சில விஷயங்கள் தவிர்த்துவிடுவது நல்லது. என்ன என்ன விஷயங்கள் என்பதைப் பார்ப்போம்.
வீண் வீம்பை விட்டுவிடுங்கள்:
நீங்கள் செய்த தவறுகளைக் கண்டுப்பிடித்து முதலில் உங்களை மனித்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் உங்கள் நண்பர்கள் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு வழங்க முடியும். மன்னிப்பு வழங்காத மனிதனின் வாழ்வில் மன அழுத்தங்கள் அதிகம் இருக்குமாம்.
சிறு விஷயங்களையும் கவனிக்காமல் இருக்காதீர்கள்:
வாழ்வில் இதெல்லாம் ஒரு விஷயமா என்று அலட்சியப் படுத்தாதீர்கள். உங்கள் வாழ்வில் பெயரிடப்படாத சில சிறிய விஷயங்களைத் திரும்பி பார்த்தால் அவை எவ்வளவு அர்த்தமுல்லதாக இருக்கும் என்பது தெரியும். ஆகவே சின்னச் சின்ன விஷயங்களையும் கவனியுங்கள்.
எளிய வழிகளைத் தவிர்த்து விடுங்கள்:
நீங்கள் பயனிக்கும் பாதையில் சில எளிய வழிகளும் வாய்ப்புகளும் கிடைக்கும். அதனை நம்பி ஏமாந்துவிடாதீர்கள். கடினமான பாதையே நிலையான வெற்றியைக் கொடுக்கும். ஆகையால் எளிய வழிகளைத் தேர்ந்தெடுக்காதீர்கள்.
புதிய உறவுகளை உதாசினப்படுத்தாதீர்கள்:
பழைய உறவுகள் அனைத்தும் உங்களை ஏமாற்றிய பொழுதும் மிகவும் நெருக்கமானவர்கள் உங்களை விட்டு சென்றபொழுதும் மனிதர்கள் மீது வெறுப்பு உண்டாவது இயல்புதான். அதற்காக புதிய உறவுகளை உதாசினப் படுத்தாதீர்கள். உங்கள் வாழ்க்கையில் யார் வேண்டு மென்றாலும் எப்படி வேண்டுமென்றாலும் பெரிய பங்கை வகிக்கலாம். மேலும் அன்பு கொடுக்காமலும் வாங்காமலும் இருக்க நீங்கள் ஒன்றும் ஜடமில்லை.
ஒரு காரணத்தினால் ஒருவரை காதல் செய்யாதீர்கள்:
காதல் என்பது ஒரு உணர்வு. நீங்கள் தனிமையாக இருக்கும்போது உங்களுடன் யாராவது இருக்க வேண்டும் என்று அவசரப்பட்டு ஒருவரை காதலிக்காதீர்கள். அதேபோல் ஒருவரை மறக்கவேண்டும் என்று இன்னொருவரை காதலிக்கும் முடிவை எடுக்காதீர்கள். எந்த காரணமும் இல்லாமல் உணர்வின் அடிப்படையில் காதல் செய்யுங்கள்.
இந்த ஐந்து விஷயங்களை அடுத்த ஆண்டு முழுவதும் கவனத்தில் வைத்துக்கொண்டு செயல்படுங்கள். 2024ம் ஆண்டு ஒரு நினைவில் வைத்துக்கொள்ளும் அழகான ஆண்டாக இருக்கும்.
-பாரதி