

வாழ்க்கையில் கடந்துபோன காலத்தின் கவலையில் விழும் கண்ணீர்த் துளிகளைவிட, எதிர்காலத்தைப் பற்றிய பயத்தின் ரேகைகளைவிட, நிகழ்காலத்தில் இந்த நிமிடம், இந்த நொடி மிகச் சிறப்பான நேரம். உண்மையும் அதுவே என்று நினைத்து கடமை ஆற்றுங்கள், வாழ்க்கைத் தடம் சிறக்கும்.
வாழ்க்கையில் கஷ்டங்கள் படாமல் எதுவும் சாத்தியம் இல்லை. விதையும் முட்டிமோதித்தான் தன் வாழ்க்கையை தொடங்குகிறது. அதுபோல்தான் உழைக்காமல் எந்த வாழ்க்கையும் சிறக்காது. உழைப்பவன் ஏற்றம் காண்பான். அதை தவிர்ப்பவன் ஏமாற்றம் தழுவுவான். உழைப்பில் உயர்வோம்.
வாழ்க்கையில் உழைப்போடு சேர்த்து பொறுமை காப்பது மிக அவசியம். பொறுமை காக்கும் மனது இருந்தால், எதையும் சமாளிக்கும் தன்மை, உள்ளத்தில் மெருகேற்றி செயலில் முழுவதுமான ஈடுபாடு அதிகரிக்கும். பொறுமையாக இருக்க முயல்வோம்.
வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு வாழும்போதுதான் வாழ்க்கை நமக்கு என்னவென்று புரியும். நாம் எதிர்கொள்ளும் சவால்களை கண்டு அஞ்சாமல், முழுமனதோடு செய்யத் துணிந்தால், நமக்குள் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் வீழ்ந்து போகும். கவனம் சிதராமல் நம்முடைய செயலாற்றும் தன்மை நம்மிடம் வலுப்பெற்று, வெற்றி இலக்கை நோக்கி பயணிக்கும்.
வாழ்க்கையில் திட்டமிடல் அவசியம் என்பதை உணர்ந்து செயலாற்றுவது நல்லப் பழக்கம். திட்டமிட்டு செயல் ஆற்றும் போது, மிகவும் எளிதாக, வரும் பிரச்னைகளை கையாண்டு, அதிலிருந்து விலகி வருவது தெரியும். திட்டமிட்டு செயல்படின் பிரச்னைகள் நமக்கு பிரச்னையாக தோன்றாது.
வெளுத்து வாங்கும் வெயிலைப் போலவும், ஒரேயடியாக குளிர வைக்கும் மழையைப் போலவும், நடுநடுங்க வைக்கும் பனியைப் போலத்தான் இந்த வாழ்க்கையும். அந்தந்த பருவக்காலத்திற்கு ஏற்றவாறு நாம் எப்படி நம்மை தயார் செய்து கொள்கிறோம். அதேபோல், பிரச்னைகள், கவலைகள், மற்றும் கஷ்டங்கள் எல்லாவற்றையும் கடந்து வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.
வாழ்க்கையில் அடிக்கடி நமக்குள் கேள்விக் கணைகள் தொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான், பட்டைத் தீட்டிய வைரம் போல், நம்முடைய வாழ்க்கை அமையும். ஒருவரின் எண்ணங்களே அவருடைய வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி இரண்டுக்கும் காரணம்.
வாழ்க்கையில் நம்மை நாமே அடிக்கடி செப்பனிடும் போதுதான், நம்முடைய ஏற்ற இறக்கம் தெரிந்துகொள்ள முடியும். அப்படி இருப்பவர்கள் அனைவருமே, தங்களுக்கு ஏற்படும் சவால்களையும், இடர்பாடுகளையும் எப்படி களைந்து, தெளிவுபெற வேண்டும் என்பதை உணர்ந்து தங்களை தயார்படுத்திக்கொள்ள முயன்று வெற்றிப் பெறுகிறார்கள்.
வாழ்க்கையில் அப்படி இருக்கவே முயற்சி செய்வோம். அப்போது தான், தங்களுடைய இலக்குகளை எதிர்கொண்டு, பிரச்னைகள் வராமல் தடுத்துக்கொண்டு, நம்மை உயரிய இடத்திற்கு இட்டுச் செல்ல முடியும்.
என்னடா இந்த வாழ்க்கை என்று அலுத்துக் கொள்பவர்களுக்கு, வாழ்க்கை வேம்பாக கசக்கும். எது வந்தாலும் நாம் பார்த்துக் கொள்வோம் என்று துணிந்து நின்றுவிட்டால், வாழ்க்கை விருட்சமாக வளர்ந்து, முன்னேற்றப் பாதையில் பயணிக்கும்.
வாழ்க்கையில் துணிந்துவிட்டால் தூக்கு மேடை கூட பஞ்சு மெத்தை என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்ந்து, வென்று காட்டுவோம். எதிர்மறை உளவாளியை கண்டு, அழித்துவிட்டால், நேர்மறை நண்பன் நம் நிழலாய் இருப்பான்.