
ஒருவர் நம்மை அவர்கள் பிடியில் வைத்துக்கொள்ள நாம் என்ன சொன்னாலும் அதை மறுத்தே பேசுவார்கள். அதில் உண்மை நூறு சதவிகிதம் இருந்தால் கூட ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அத்துடன் நாம் செய்யும் எந்த ஒரு விஷயத்தையும் கவனிப்பதே அவர்கள் வேலையாக இருக்கும். கவனிப்பதுடன் நிறுத்திக்கொள்ளாமல் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து இது சரியில்லை, அது சரியில்லை, இப்படித்தான் செய்யணும் என்று அடித்து சொல்வார்கள். நாம் ஏதோ அவர்களுக்கு அடிமைபோல, நமக்கு பேச்சு சுதந்திரமே இல்லாமல் பண்ணி விடுவார்கள். அதாவது நாம் பேசுவதை விரும்ப மாட்டார்கள். எந்த விஷயத்திலும் அவர்கள் சொல்வதுதான் சரி என்று வாதிடுவார்கள்.
நாம் நெருக்கமானவர்களிடம் பேசும்போதும் கூட தானாகவே வலிய வந்து அவர்களையும் அதில் இணைத்துக்கொண்டு நம் பேச்சில் கவனம் செல்ல விடாமல் அவர்கள் பேச்சுக்கு கவனத்தை ஈர்க்க முயல்வார்கள். அதாவது நம் பேச்சு நட்பு வட்டத்தில் எடுபடாதவாறு பார்த்துக் கொள்வார்கள்.
கொஞ்சம் கொஞ்சமாக நம் நட்பு வட்டத்தை அவர்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து விடுவார்கள். அங்கு நம்முடைய எந்த பேச்சும் எடுபடாமல் போய்விடும். இத்தோடு நிற்காமல் அந்த நட்பு வட்டத்தில் உள்ள மற்றவர்களிடம் நம்மைப் பற்றி குறைவாக மதிப்பிட்டு வேறு பேசுவார்கள்.
இப்படிப்பட்டவர்களிடம் நாம் நம்மை நிரூபிக்க விவாதம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஒரு சிறு புன்னகையை வீசிவிட்டு நகர்ந்து விடுதலே உத்தமம். இப்படி செய்வதன் மூலம் அவர்களை நாம் எளிதில் சமாளித்து விடலாம்.
அலுவலகத்தில் நம்முடன் பணிபுரியும் நபர்கள் சில சமயம் நம்மை அதிகமாக புகழ்ந்து தள்ளினால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். அதை விட்டு அவர்களின் பேச்சில் மயங்கி, மகிழ்ச்சியின் உச்சியில் அவர்கள் என்ன வேலை சொன்னாலும் செய்து பழகிவிட்டால் அவர்கள் நம்மை அவர்களுடைய பிடியில் சிக்க வைத்து விடுவார்கள். நமக்கு எதிராக என்ன பேசினாலும் நம்மால் வாயை திறக்க முடியாமல் செய்து விடுவார்கள். நமக்கு ஐஸ் வைத்தே அவர்களுடைய காரியத்தை சாதித்துக் கொள்வதுடன், நமக்கு எதிராக எது சொன்னாலோ, செய்தாலோ நம்மால் வாயை திறக்க முடியாமல் ஆக்கி விடுவார்கள். முக ஸ்துதிக்கு மயங்கி அவர்கள் பிடியில் சிக்கிக்கொள்ள வேண்டாம்.
நண்பர்கள் வட்டத்தில் நம்முடைய எல்லா அந்தரங்க விஷயங்களையும் வெளிப்படையாக பேசாமல் இருப்பது நல்லது. ஓட்டை வாயாக இருந்தால் அவர்கள் நம்மை சமயம் பார்த்து நான்கு பேர் எதிரில் நம்முடைய அந்தரங்க விஷயங்களை போட்டுடைப்பார்கள். அம்மாதிரியான சமயங்களில் நம்மால் ஒன்றும் செய்ய முடியாமல் அவர்கள் கூறுவதற்கெல்லாம் 'ஆமாம் சாமி' போட்டுக்கொண்டு அடிமையாக இருக்க வேண்டியதுதான். எனவே யாரிடமும் அளவாய் பழகுவது நல்லது.
டைம் பாஸுக்காக எப்போதாவது கூட வேலை செய்யும் நபர்களுடனோ அல்லது நண்பர்களுடனோ கடைக்கு செல்லும் பொழுது டீ, காபி என வாங்கி சாப்பிடுவோம். அவர்கள் செலவு செய்தால் மறக்காமல் அடுத்த நாள் நாமும் கணக்கு வைத்துக் கொண்டு அவர்கள் செலவு செய்ததற்கு நிகராக செய்து விடுவது நல்லது.
வீட்டை பொருத்தவரை உறவினர் என்றால் நம்முடைய எல்லா விஷயங்களிலும் தலையிடுவதுடன், அவரை கலந்தாலோசிக்காமல் எதையும் செய்ய இயலாத நிலைக்கு நம்மைத் தள்ளி விடுவார்கள். நம் வீட்டில் நடக்கும் நல்லது, கெட்டது எல்லாவற்றிலும் பங்கு கொண்டு, அவருடைய இருப்பையும், ஆலோசனை யையும் கேட்க செய்து விடுவார்கள். வீட்டிலோ, வெளியிலோ எங்கிருந்தாலும் யாரிடமும் அளவோடு பழகுதல் அவசியம். இல்லையெனில் அவர்கள் நம்மை அவர்களின் கை பொம்மையாக ஆக்கி விடுவார்கள்.
கைப்பாவையாக இல்லாமல் சுதந்திரப் பறவையாக இருக்க முயற்சிப்போம்!