
எந்த ஒரு வெற்றியை அடையவேண்டும் என்றாலும் அதற்கு திட்டமிடுதல் என்பது அவசியமாகிறது. என் தோழி சொல்லுவார் ஐந்து நிமிடம் வேலை செய்யவேண்டும். 10 நிமிடம் ஓய்வு எடுக்க வேண்டும். அப்படி செய்வது என்றால் முடியும். அதற்கு திட்டமிடுதல் அவசியம். தினம் வீட்டில் நாம் என்ன எல்லாம் வேலை செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு செய்வதன் மூலம் நேர விரயம் தவிர்க்கப்படுகிறது.
செய்யும் வேலைகளில் சிறப்பாக செயல்பட முடிகிறது என்று பல நன்மைகள் நடக்கும். அதனால் சின்ன சின்ன விஷயங்களில் ஆரம்பித்து வெற்றியை நோக்கி பயணப்படும்பொழுது எல்லாவற்றுக்கும் திட்டமிடல் அவசியமாகிறது.
ஏதாவது ஒரு குழுவுடன் சேர்ந்து பயணம் செய்யவேண்டும் என்று திட்டம் தீட்டி இருந்தால் முன்னதாகவே கிளம்பி விடவேண்டும். அதற்கு சீக்கிரமாக எழுந்து புறப்படுவதற்கு ஆயத்த வேலைகளை செய்ய வேண்டும். அதை விடுத்து கடைசி நேரத்தில் அவசர கோலத்தில் அள்ளி தெளித்தார்போல வேலைகளை செய்ய ஆரம்பித்தால் காலம் தாழ்ந்துவிடும்.
நம் கூட வருபவர்களையும் நமக்காக வெயிட் பண்ண சொல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனால் எல்லோருக்கும் கால தாமதம் ஏற்படும். போய்ச் சேர வேண்டிய இடத்திற்கு நேர காலத்தோடு சென்று சேரமுடியாது. நாம் ஒருவரால் ஒரு வாகனத்தில் இருப்பவர்கள் அத்தனை பேரும் காத்திருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்கள். இதனால் அடுத்த முறை குழுவுடன் சேர்ந்து நாம் பயணம் செய்ய முற்பட்டால் நம் கூட வர அவர்கள் தயங்குவார்கள்.
வீட்டில் ஏதோ ஒரு விசேஷம் அதற்கு உதவியாக ஒரு வேலையை செய்ய ஒப்புக்கொள்கிறோம் என்றால் அதை அக்கறையாக செய்து முடிக்க வேண்டும். அந்த வீட்டினர் அருகில் இருக்கும்பொழுது மட்டும் வேலை செய்வது, இல்லாதபோது அலட்சியமாக இருப்பது என்பதை தவிர்க்க வேண்டும் .இதுபோல் செய்பவர்களையும் பார்க்க முடியும்.
அதேபோல் இப்பொழுதெல்லாம் வீட்டிலிருந்து பணி செய்யும் முறை வழக்கத்திற்கு வந்துவிட்டது. அதற்கு வேலை செய்யப் போகும் இடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியம். வீட்டில் எங்கு அமர்ந்து வேலை பார்த்தாலும் அந்த இடத்தில் பைல்கள், லேப்டாப், செல் என அனைத்தையும் எப்போதும் அதற்கான இடத்தில் வைத்துவிட்டால் ஏதேனும் பொருளை தொலைத்துவிட்டு தேடுவது, அதனால் மன உளைச்சலுக்கு ஆளாவது என்பது தவிர்க்கப்படும்.
இதனால் வேலையை சுறுசுறுப்பாகவும், மகிழ்ச்சியுடனும், குறிப்பிட்ட நேரத்திற்குள்ளும் செய்து முடித்துவிட்டு அடுத்த வேலையில் கை வைக்கலாம் அல்லது சிறிது நேரம் ஓய்வெடுத்துக்கொள்ள முடியும்.
என் தோழி வீட்டிற்கு விருந்தினரை அழைக்க வேண்டும் என்றால் ஒரு கால வாரத்திற்கு முன்னதாகவே அவர்களை அழைப்பது, அவர்கள் வந்தால் என்னென்ன சமைக்க வேண்டும். என்ன பரிசு பொருள் கொடுத்து வழி அனுப்ப வேண்டும் என்று தீவிர ஆலோசனையில் இறங்கிவிடுவார்.
யாராவது சொல்லாமல் கொள்ளாமல் சென்றுவிட்டால் அவ்வளவுதான். அவருக்கு என்ன செய்வது என்றே புரியாது. சிந்தை தடுமாறி சரியாக செய்ய முடியாமல் போய்விட்டதே என்று வருந்துவார். இதனால் ரத்த அழுத்தம் ஏறிவிடும். டாக்டரை பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிடும். எதையும் சுலபத்தில் சமாளிக்க முடியாமல் தடுமாறுவார். இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அதனால்தான் எல்லாவற்றிற்கும் நேர மேலாண்மை என்பது அவசியமாகப்படுகிறது.
திட்டமிட்டே ஒவ்வொரு பணியையும் செய்பவர்கள் எதிலும் நிதானமாக செயல்படுவதை காணமுடிகிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலைகளை முடித்து விடுவதால் அவர்களுக்கு ஓய்வு நேரம் அதிகம் கிடைக்கிறது. அந்த ஓய்வு நேரத்தில் தனக்கு பிடித்த விஷயங்களை செய்து அதனால் பொருளீட்டி மகிழ்கிறார்கள். ஆதலால் தோழிகளே யார் வீட்டிற்கு செல்வதாக இருந்தாலும் முன்கூட்டியே தெரிவித்துவிட்டு செல்லுங்கள். இதனால் மேற்கூறிய உணர்வு சார்ந்த செயல்கள் பாதிப்படையாமல் இருக்க வழி வகுக்கும்.
வெற்றி என்பது பெரிய பெரிய சாதனைகளை செய்வதில் மட்டும் அடங்கி விடுவதில்லை. அன்றாடம் செய்யும் செயல்களை வேலைகளை அன்றே முடித்து விடுவதும் வெற்றிதான். அப்பொழுதுதான் அடுத்தநாள் வேலையை இயல்பாக தொடங்க முடியும். இப்படி தினசரி திட்டமிட்டு செய்யும்பொழுது என்றைக்காவது ஒரு நாள் மாபெரும் வெற்றியை பெற முடியும் என்பது உறுதி.
நேரத்தையும் நேர்மையையும்
தவற விட்டு விட்டால் ....
மறு வாய்ப்பு கிடையாது.