

சிலர் நம்மிடம் இருக்கும் குறைகளை மட்டுமே சுட்டிக்காட்டும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களை கையாள்வது ரொம்ப சுலபம். அவர்களை விட்டு தள்ளி போகாமல் நம் அருகிலேயே அவர்களை வைத்துக்கொள்வது நல்லது. என்னது அவர்களை விட்டு விலகாமல் இருக்க வேண்டுமா என்று ஆச்சரியப் படுகிறீர்களா. ஆமாம் அவர்களை விட்டு தூரப் போகாமல் அருகிலேயே வைத்துக் கொண்டால்தான் நமக்கு நல்லது. அவர்கள் கூறுவதில் ஏதேனும் உண்மை இருப்பின் நம்மை மாற்றிக் கொள்ள ஏதுவாக இருக்கும்.
சிலருக்கு நம்மிடம் இருக்கும் நிறைகள் தெரியாது. குறைகளை மட்டுமே சுட்டிக்காட்டுவார்கள். இதற்காக எரிச்சல் அடையாமல் இந்த மாதிரி மனிதர்களை ஒரு பொருட்டாக நினைக்காமல் அவர்களை கடந்து செல்வதே சிறப்பு. அதற்காக மற்றவர்களின் கருத்துக்களை முற்றிலும் புறக்கணித்து விடுவதும் தவறுதான். அவர்கள் கூறுவதில் ஏதேனும் உண்மை இருப்பின் நம்மை மாற்றிக்கொள்ள முயலலாம்.
முகத்தில் ஏதேனும் அழுக்கு அல்லது கறை இருந்தால் நாம் கண்ணாடி முன் நின்றாலே தெரிந்து விடும். அந்த அழுக்கு அல்லது கறையை அந்த கண்ணாடி கூட்டியோ குறைத்தோ காட்டுவதில்லை. அதேபோல் நம் நெருங்கிய சொந்தங்களிடம் ஏதேனும் குறை இருப்பின் அதை மிகைப்படுத்தி காட்டாமல் உள்ளதை உள்ளபடி சொல்வதே நல்லது. ஈரை பேனாக்கி, பேனை பெருமாளாக்கி காட்டக்கூடாது. அப்போதுதான் உறவு சுமுகமாக இருக்கும்.
அதேபோல் நமக்கு நெருக்கமானவர்களின் குறைகளை நேரிடையாகவே அவர்களிடம் மென்மையாக சுட்டிக்காட்டலாம். தவறில்லை. அவருக்கு பின்னால் பேசுவதுதான் தவறு. ஒருவர் முதுகுக்கு பின்னால் செய்ய வேண்டிய ஒரே காரியம் அவரை பாராட்டி தட்டிக் கொடுப்பது மட்டும்தான்.
கண்ணாடி முன் நிற்கும்போது நம் குறைகளை காட்டும் கண்ணாடியை பார்த்து என்றாவது நாம் கோபமோ எரிச்சலோ அடைகிறோமா? இல்லையே. அதை சரி பண்ணத்தானே பார்க்கிறோம். அதேபோல் யாராவது நம்மிடம் உள்ள குறையை சுட்டிக்காட்டினால் கோபமோ எரிச்சலோ கொள்ளாமல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் சரி செய்ய முயற்சிக்கலாம். இல்லையெனில் புறக்கணித்து விடலாம்.
-கே.எஸ். கிருஷ்ணவேனி