உங்கள் நாளை திட்டமிட்டு வெற்றிகரமாக்குவது எப்படி?

Lifestyle articles
Motivational articles
Published on

நாம் எப்போதும் நீண்ட நெடிய இலக்குகளை வைத்துக் கொண்டு அவற்றை அடைய போராடுகிறோம். எப்போது வேண்டுமானாலும் நம் எனர்ஜி லெவல் குறையக்கூடும். அப்போது இந்த ‘அழகான ஒரு நாள் திட்டத்தின்’ பத்து விதிகளை பயன்படுத்தி நன்மை அடையுங்கள். விரைவில்  அவை உங்களின் வாழ்க்கையாகவே மாறிவிடும் என்கிறார் சிபில் பாட்ரிட்ஜ் என்கிற தன்னம்பிக்கையாளர்.

1. இன்று ஒரு நாள் மட்டும் நான் மகிழ்ச்சியாக இருப்பேன். மகிழ்ச்சி என்பது உள்ளிருந்து வருவது, வெளியில் இருந்து பெறப்படுவது அல்ல என்று உணர்கிறேன்.

2. இன்று ஒரு நாள் மட்டும் என் சூழ்நிலைக்கு ஏற்ப என்னை நான் அட்ஜஸ்ட் செய்து கொள்வேன். என்னுடைய விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி அனைத்தையும் மாற்ற முயற்சிக்காமல், என் குடும்பம், தொழில், சூழ்நிலைக்கு ஏற்றார் போல் நான் என்னை அதில் பொருத்திக் கொள்வேன்.

3. இன்று ஒரு நாள் மட்டும் நான் என் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவேன். உடற்பயிற்சி செய்து என் உடலைப் பேணுவேன்.

4. இன்று ஒரு நாள் மட்டும் என்னுடைய மனதை செம்மைப்படுத்த முயற்சி செய்வேன். என் எண்ணம், ஆற்றல் மற்றும் முழுக்கவனத்தை செலுத்தி உபயோகமான, மேன்மையான ஒரு விஷயத்தைக் கற்றுக் கொள்வேன்.

5. இன்று ஒரு நாள் மட்டும் என்னுடைய ஆத்ம திருப்திக்காக நான் மூன்று விஷயங்களை செய்வேன். பிரதிபலன் எதிர்பாராமல், யார் என்றே தெரியாத ஒருவருக்கு நன்மை செய்வேன். என் ஆன்மாவை பலப்படுத்த இதுவரை  நான் செய்யாத இரண்டு கடினமான காரியங்களைச் செய்வேன்.

6. இன்று ஒரு நாள் மட்டும் நான் அனைவரிடமும் இணக்கமாக நடந்து கொள்வேன். நேர்த்தியாக உடையணிந்து,  என் தோற்றத்தை மேம்படுத்திக் கொள்வேன். குறைவாக பேசுவேன். கருணையோடு நடந்து கொள்வேன். தாராளமாக புகழ்வேன். யாரையும் குற்றம் குறை சொல்ல மாட்டேன். ஒருவரையும்  திருத்த  முயல மாட்டேன்.

இதையும் படியுங்கள்:
அன்பை விதைப்போம், நன்றியை காணிக்கை செய்வோம்!!
Lifestyle articles

7. இன்று ஒரு நாள் மட்டும் இன்றைய நாளை முழுமையாக வாழ முயற்சி செய்வேன். இன்று ஒரு நாளில் என்னுடைய மொத்த வாழ்க்கையின் பிரச்னையையும் தீர்க்க முயற்சி செய்யமாட்டேன்.

8. இன்று ஒரு நாள் மட்டும் திட்டமிட்டு வேலைகளை செய்வேன். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் என்ன செய்ய வேண்டும் என்பதை எழுதி வைத்துக்கொள்வேன். முழுமையாக அதன்படி நான் நடந்துகொள்ள முடியாமல் போனாலும் பரவாயில்லை. கடைசி நிமிடத்தில் அவசரமாக ஒரு வேலையை செய்ய முனைவதும், முடிவெடுக்க முடியாத தன்மையும் இனி தவிர்க்கப்படும்.

9. இன்று ஒரு நாள் மட்டும் அவ்வப்போது அரைமணி நேரத்தை எனக்காக ஒதுக்கி ரிலாக்ஸ் செய்து கொள்வேன். அப்போது என் வாழ்க்கைக்கு சகாயம் செய்யக்கூடிய கடவுளை நினைத்துக்கொள்வேன்.

10. இன்று ஒரு நாள் மட்டும் நான் எதற்கும் பயப்பட மாட்டேன். முக்கியமாக  மகிழ்ச்சியாக இருப்பதற்கும், அழகான பொருளை ரசிப்பதற்கும், அன்பு செலுத்து வதற்கும், நான் யாரை விரும்புகிறேனோ, அவர்களும் என்னை விரும்புகின்றனர்  என்று நம்புவதற்கு நான் பயப்பட மாட்டேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com