

தனக்குத்தானே சிரியுங்கள். அதுவே சந்தோஷம்; மற்றவர்களை பார்த்து சிரிக்காதீர்கள்; அது ஏளனம்; மற்றவர்கள் நம்மை பார்த்து சிரித்தால் அது அவமானம் இதனைப் புரிந்து வாழ்ந்தால் நூறாண்டு வாழலாம்.
எனது சித்தப்பாவிற்கு 96 வயது ஆகிறது. 92 வயது வரை எங்கே சென்றாலும் சைக்கிளில்தான் செல்வார். இப்பொழுது நான்கு வருடங்களாக சைக்கிளை மிதிப்பதில்லை. எங்கு சென்றாலும் நடைப் பயணம்தான். உடம்பிற்கு நோய் என்று வந்து மருத்துவ செலவும் செய்தது இல்லை. மருத்துவமனைக்கும் சென்றதில்லை. அவரைப் பார்த்தால் எல்லோரும் ஆச்சரியப்படுவார்கள். மேலும் அவரிடம் அனைவரும் கேட்கும் கேள்வி,
‘தாங்கள் நீண்ட காலம் வாழ்வதின் ரகசியம் என்ன?’ என்பதுதான்.
அதற்கு அவர் சொல்லும் பதில்: “நன்றாக உழைத்தேன். நிம்மதியாக வாழ்ந்தேன். அளவோடு சாப்பிட்டேன். அதிக நடைப் பயணம், மற்றும் சைக்கிள் பயணம் மேற்கொண்டேன். நோய் நொடியின்றி வாழ்ந்தேன். ஆரவாரமின்றி குழந்தைகளைப் படிக்க வைத்து கரை சேர்த்தேன். அதிகம் எதையும் சேர்த்து வைக்கவில்லை. என்றாலும், கடவுள் எனக்கு அளித்த பரிசுகளை நான் அப்படியே பயன்படுத்துகிறேன். இரவில் நன்கு உறங்குகிறேன். களைப்படைந்தால் ஓய்வு எடுக்கிறேன்." அவர் சொல்வது ஒரு ஞானியைப்போல் இருக்கும்.
இதை எல்லோரும் எளிதாக பின்பற்றலாம். ஆனால் நாம்தான் மனது வைக்கவேண்டும்.
-இந்திராணி தங்கவேல்