

இம்போஸ்டர் சிண்ட்ரோம் என்றால் என்ன?
இம்போஸ்டர் சிண்ட்ரோம் என்பது ஒரு உளவியல் நிலையாகும். ஒருவருக்குத் திறமையும் தகுதியும் உண்மையாகவே இருந்தாலும், தான் பெற்ற வெற்றிக்குத் தகுதி இல்லை என்று அவர் நினைப்பதுதான் இம்போஸ்டர் சிண்ட்ரோம் ஆகும். தான் ஒரு மோசடி செய்பவர் என்றும், எந்த நேரத்திலும் தன் உண்மைத்தரம் வெளியாகிவிடும் என்றும் அவர் ஆழமாக அஞ்சுவார்.
இந்தத் தீவிரமான தொடர்ச்சியான சுய சந்தேகம் காரணமாக, தான் பெற்ற வெற்றிகள் எல்லாம் தன் திறமையால் அல்ல; வெறும் அதிர்ஷ்டத்தால் மட்டுமே கிடைத்தன என்று அவர் நம்பத் தொடங்குகிறார். ஆச்சரியம் என்னவென்றால், வாழ்க்கையில் வெற்றி பெற்ற பல சாதனையாளர்களிடையே இந்த இம்போஸ்டர் சிண்ட்ரோம் காணப்படுகிறது.
நன்மைகள்
இந்தச் சுய சந்தேகம் மன அழுத்தத்தை அளித்தாலும், அதைச் சரியான முறையில் கையாள்வதன் மூலம் சில ஆக்கபூர்வமான நன்மைகளைப் பெறலாம்.
கடின உழைப்பும் தேர்ச்சிக்கான உந்துதலும்: தான் உண்மையிலேயே திறமையற்றவர் என்று நம்புவதால், இவர்கள் மற்றவர்களைவிட கடினமாக உழைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த பயம் ஒரு சக்திவாய்ந்த உந்துதலாகச் செயல்படுகிறது. தங்கள் செயல்களைக் கவனமாகவும், தொடர்ச்சியான கற்றல் மூலமும் சிறப்பாகச் செய்கிறார்கள். இதுவே அவர்களுக்குத் திறமை, தேர்ச்சி மற்றும் வெற்றி ஆகியவற்றைத் தேடித் தருகிறது.
பணிவும் புதிய தகவலுக்கான தேடலும்: தொடர்ந்து தங்கள் சொந்த அறிவைச் சந்தேகிப்பதால், புதிய தகவல்களைத் தேடுவதிலும், நிபுணர்களுடன் கலந்தாலோசிப்பதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள். பொறுமையாக மற்றவர்கள் சொல்வதைக்கேட்டு, கருத்துக்களை ஏற்றுக்கொள்வதால், இவர்களது முடிவெடுக்கும் திறன் மேம்படுகிறது.
பச்சாதாபமும் குழு மனப்பான்மையும்: பிறர் மேல் பச்சாதாபம் (Empathy) கொள்ளும் உணர்வை இது வளர்க்கிறது. மற்றவர்களின் போராட்டங்களையும் சிரமங்களையும் இவர்கள் எளிதில் புரிந்துகொள்கிறார்கள். ஒரு குழுவாக வேலை செய்யும்போது சிறந்த ஒத்துழைப்பைத் தந்து, மற்றவர்களை அதிகமாக ஊக்குவிக்கிறார்கள். இது அவர்களைச் சிறந்த சக ஊழியர்களாகவும், தலைவர்களாகவும் உருவாக்குகிறது, கூட்டு மனப்பான்மையை வளர்த்து குழுவின் வெற்றிக்குப் பெரும்பங்கு வகிக்கிறது.
தொடர்ச்சியான வளர்ச்சி: 'நான் போதுமான அளவு திறமையானவன் இல்லை' என்கிற கவலை, தொடர்ச்சியான முயற்சிக்கு வழி வகுக்கிறது. இது மெத்தனத்தைத் தடுத்து , அலட்சியப் போக்கை நிறுத்துகிறது. தொடர்ந்து தொழில்முறை மேம்பாட்டில் கவனம் செலுத்தவும், தங்கள் துறையில் சிறந்து விளங்கவும், எப்போதும் பொருத்தமானவர்களாக இருக்கவும் உதவுகிறது.
நடைமுறை உத்திகள்
இம்போஸ்டர் சிண்ட்ரோம் வெற்றிக்கு அவசியம் இல்லை. இது தீவிரமானால் மன அழுத்தம், பதட்டம் மற்றும் சோர்வு போன்றவற்றுக்கு தூண்டுகிறது.இந்த உணர்வுகளை முன்னேற்றத்திற்கு பயன்படுத்தவ சில எளிய உத்திகள்:
1. உணர்வுகளை அங்கீகரித்து பகிருங்கள்: உங்கள் உணர்வுகளை நம்பகமான வழிகாட்டிகள் அல்லது சக ஊழியர்களுடன் வெளிபடையாகப் பேசுங்கள். இது சாதாரணமானது என்றும் நீங்கள் தனியாக இல்லை என்றும் உணர்வீர்கள்.
2. உண்மைகளில் கவனம் செலுத்துங்கள்: நீங்கள் தகுதியற்றவர் என்று உணரும்போதெல்லாம், உங்கள் உண்மையான சாதனைகள் மற்றும் திறமைகளுக்கு கிடைத்த வெற்றியை, பாராட்டை, பரிசுகளை நினைத்து பாருங்கள்.
3. முழுமையைத் தேடாதீர்கள்: தவறுகளை ஏற்றுக்கொண்டு , எல்லாவற்றிலும் நூறு சதவிகிதம் சரியாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பைக் கைவிடுங்கள். தோல்விகளை உங்கள் திறமையின்மைக்கான ஆதாரம் என்று பார்க்காமல், அடுத்த முறை மேம்படுத்துவதற்கான வாய்ப்பாகப் பாருங்கள்.
4. உள் உரையாடலை மாற்றுங்கள்: "நான் அதிர்ஷ்டசாலி" போன்ற எதிர்மறை எண்ணங்களுக்கு, "இல்லை, நான் அதற்காக கடினமாக உழைத்தேன்" என்று பதிலளிப்பதன் மூலம் அந்த எண்ணங்களை நேர்மறையாக மாற்றுங்கள்.
5. புறக்கணியுங்கள்: உங்கள் மனதில் எழும் இம்போஸ்டர் உணர்வுகளை சாதாரண வெற்றுக்கூச்சல் என்று பெயரிட்டு, அவற்றைப் புறக்கணிப்பதைப் பயிற்சி செய்யுங்கள். இந்த உத்திகளைப் பின்பற்றுவது, உங்கள் தன்னம்பிக்கையை வளர்க்கவும், உங்கள் வெற்றிகளை உள்வாங்கவும் உதவும்.