

ஒவ்வொரு மனித வாழ்க்கையும் எதில் இருந்து தொடங்குகிறது என்று யாரும் நினைத்து பார்ப்பதும் இல்லை அதற்கு முற்படுவதும் இல்லை. ஒவ்வொருவருக்கும் தன் வாழ்க்கை ஒன்றாக இருக்கிறது. அவர்கள் பார்வைகள் பலவிதமாக மாறுபட்டு நிற்கிறது. இது இன்றைய யதார்த்த நிலை.
இதற்கு முக்கிய காரணமாக இருப்பது அவர்களுக்கு தங்களைப் பற்றிய புரிதலும் இல்லை. சுயசிந்தனையும் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. பெற்றவர்கள், தங்கள் பிள்ளைகளை வளர்ப்பதில் இருந்தே அதனை விதைத்து விடுகிறார்கள்.
உதாரணத்திற்கு தன் பிள்ளைகள் வக்கீலாகவோ அல்லது மருத்துவராகவோ அல்லது இன்ஜினியராகவோ வரவேண்டும் என்று ஆசைப்படுகிறார்களே தவிர, அவர்களுக்குள் என்ன திறமை இருக்கிறது என்று நினைத்து பார்த்து அதற்கேற்ப அவர்களை ஆளாக்க முற்படுவது இல்லை.
அதில் இருந்து தொடங்குகிறது இளம் தலை முறையினரின் முரண்பட்ட வாழ்க்கை பயணம். அறியாத அந்த வயதில், அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதை உணராமல், அவர்கள் ஆசையை, அவர்களுக்குள் திணிக்க முற்படுகிறார்கள் என்பது கசப்பான உண்மை.
வாழ்க்கையை அதன் இயல்பிலேயே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் தொடங்கி, நீங்கள் முயற்சி செய்வது பிள்ளைகள் வளர்ப்பதுதான் சிறந்த வழிமுறை என்று உணருங்கள். எதில் அவர்களுக்கு விருப்பம் இருக்கோ, அந்த பாதையில் தடுமாறாமல் தடம் மாறாமல் வாழவிடுங்கள்.
மாறாக தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று நினைத்து அவர்கள் இடத்தில், உங்கள் ஆளுமையை காட்டாதீர்கள். அவர்கள் எதில் சிறந்து விளங்குகின்றனர் என்பதை அறிந்துகொள்ளுங்கள். அந்த திறமைக்கு முன்னுரிமை கொடுத்து, நம்பிக்கையோடு அவர்களை உற்சாகப்படுத்துங்கள்.
நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக புதிய திறமைகளுக்கு அவர்கள் பன்முகப்படுத்த முற்படுவார்கள். அப்போது தான் அவர்களுக்கு இன்னும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்பதை உணரும் தருணம் ஏற்படும். தானாகவே அவர்களுக்கு எதையும் சமாளிக்க முடியும் என்ற நேர்மறை எண்ணங்கள் தோன்றும்.
வாழ்க்கையில் திறமை, முயற்சி இரண்டும் செயல்களால் ஆனது என்றும், அதுவே தங்களது வாழ்க்கையை தீர்மானிக்கிறது என்பதை உணர்த்துங்கள்.
அவர்களுக்கு சிறிய சிறிய செயல்முறை விளக்கங்களை சொல்லி, அவர்களை ஊக்குவிக்கவும், பக்குவப்படுத்தவும் முதன்மையாக இருங்கள். அதுவே அவர்களை வலிமையாக மாறச்செய்து சக்திமிக்கவர்களாக ஆக்குகிறது. அந்த தருணத்தில் சாதிக்கும் எண்ணங்களும் கனவுகளும் தோன்றச் செய்யும்.
அவர்களுக்குள் ஊற்றெடுக்கும் ஆர்வமுள்ள செயல் வடிவங்களுக்கு உதவியும் பயிற்சியும் கொடுங்கள் அப்போது அவர்கள் முன் தோன்றும் எதிர்கால வாழ்க்கைக்கு முழு ஒத்துழைப்பு தருவதை உறுதிப் படுத்துங்கள். அவர்களின் முன்னேற்றத்தின் கண்களாக இருந்து உங்கள் பார்வையை செலுத்துங்கள்.
இன்று மாறிவரும் சூழ்நிலை அறிந்து, அவர்களுக்கு ஒழுக்கம் பற்றிய நெறிமுறைகளை பின்பற்றக் கற்றுக் கொள்ள முயலுங்கள். அவர்கள் சாதனைகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கத் தவறாதீர்கள். அதேசமயம் தோல்வி ஏற்படின், அவர்களை தட்டிக் கொடுத்து, இது பயிற்சி களம்தான் என்று உணரவையுங்கள்.
இளம் தலைமுறையினர் சாதனை படைத்து உயர்ந்தால், எதிர்காலம் விடியலின் விழுதுகளை பற்றும். ஆகச்சிறந்த மாற்றங்களை எட்டும் என்பதில் ஐயம் இல்லை. பெற்றவர்கள் கரங்கள் அதற்காக உளி கொண்டு செதுக்கட்டும்!