
வாழ்ந்தார்கள்; வளமோடு வாழ்ந்தார்கள். வாழ்வாங்கு வாழ்ந்தார்கள்; நீங்களும் வாழவேண்டும் என்பதல்ல. நாமெல்லாம் வாழவேண்டும்; நல்லோராக வாழவேண்டும்; நாட்டுக்கு நம்மால் சிறிதளவாவது நன்மை பயக்கும்படி வாழவேண்டும்.
மொழி நம்மால் வளராவிட்டால் அழியாமல் இருக்கும்படியாவது வாழவேண்டும். வாழ்ந்ததற்கு அறிகுறியாக புகழத்தக்க ஒன்றை நிலைநிறுத்த வேண்டும். புகழ்பட வாழவேண்டும்; புதுமை செய்து வாழவேண்டும்.
நாமும் வாழ்ந்து பிறரையும் வாழச்செய்வதுதான் பண்புள்ள வாழ்க்கை; பயனுள்ள வாழ்க்கை.
நாம் இந்த உலகில் ஒரே ஒரு தடவை மட்டும் வாழக்கூடிய வாழ்க்கையை பலருக்கும் பயன்படும்படி வாழ்வதுதான் பெற்ற பிறவிக்குப் பயனைத் தேடித்தரும்.
நாம் மட்டும்தான் சிறப்பாக வாழவேண்டும், வளரவேண்டும் மற்றவர்கள் எப்படியோ வாழ்ந்துவிட்டுப் போகட்டும் என்ற எண்ணக் கூடாது.
நம்முடன் இருப்பவர்களையும் நல்லபடியாக வாழச்செய்ய வேண்டியது நம்முடைய கடமை. சமுதாயம் என்பதே கூட்டு அமைப்புதான். நம்முடைய இன்பங்களை பலரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டுமானால் அவர்களும் நம்மைப்போல் நன்றாக வாழ வேண்டும் அப்பொழுதுதான் இன்பங்களைப் பரிமாறிக்கொள்ள முடியும்.
வீட்டில் ஒருவனின் வளர்ச்சியால் குடும்பமே இன்பமடைகிறது என்றபோது, பல குடும்பங்களின் வளர்ச்சி என்பது ஒரு நல்ல ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குகிறது என்பதை நாம் முதலில் உணர்ந்தாக வேண்டும்.
சோதனைகளும் வேதனைகளும் யாரோடு சொந்தம் வைத்துக் கொள்ளுகின்றன தெரியுமா? வாழ்க்கைக்குத் தன்னைத் தயார் செய்து கொள்ளாமல் வாழ்நாளைத் தொலைத்து விடுகிறவனோடு மட்டுமேயாகும்.
கனியிருப்பது ரசம் பருக, மலர் இருப்பது மணம் நுகர, வாழ்வு இருப்பது இன்பத்தை அனுபவிக்க என்பதை நினைவில் கொண்டு, நமது வாழ்க்கை முறைகளைச் சிறப்பாக அமைத்துக்கொண்டு, பிறந்ததன் பயனை அடைய வாழ்ந்து காட்டுவதை. ஒவ்வொரு மனிதனும் இலட்சியமாக எடுத்துக்கொள்வோம்.
சுவாமி விவேகானந்தர் நமக்குச் சொல்லும் வீர உரை இதோ:
'நாம் எல்லாரும் இறைவனுடைய பிள்ளைகள். எதையும் செய்யக் கூடிய ஆற்றல் நமக்கு உண்டு. ஒரு நல்ல இலட்சியத்துடன் முறையான வழியைக் கைக்கொண்டு தைரியத்துடன் வீரனாக விளங்கு நீ மனிதனாகப் பிறந்திருக்கிறாய். நீ வாழ்ந்து மறைந்ததற்கு உன் பின்னால் ஓர் அழியாத அறிகுறி எதையாவது விட்டுச்செல்.'
ஒருவன் பயமின்றி கடல் ஆழத்திற்குச் சென்று முத்துக்குளித்து வரவில்லையென்றால் உலகில் முத்து ஏது?
ஒவ்வொரு பறவைக்கும் இறைவன் உணவு அளிக்கின்றார். ஆனால் அந்த உணவை அப்பறவையின் கூட்டிற்குள் கொண்டுபோய் வைப்பதில்லை' என்கின்றார் ஹாலண்ட் என்ற அறிஞர். உடும்புப்பிடியாக நமது குறிக்கோளை அடையும்வரை முயற்சியைக் கைவிடாமல் உழைத்தால் நாம் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம்.
ஒரு காரியத்தை ஆரம்பித்துவிட்டால் அதை முடிக்கும்வரை ஓயக்கூடாது சோர்வடையக்கூடாது, துவளக்கூடாது. இன்னும் கொஞ்சம்: இன்னும் கொஞ்சம் என்று முயற்சியின் எல்லைகளை அகலப்படுத்திக் கொண்டேயிருக்க வேண்டும். இவ்விதம் நாம் செய்தோமானால் வெற்றித் தேவதை நம்மைக் கட்டியணைத்து முத்தமளிப்பாள்.
வெற்றித் தேவதையின் முத்தமழையில் நாம் நனைவோமாக!