
கடந்த கால தவறுகளுக்காக வருந்துவது என்பது முட்டாள்தனம். அவைதான் நமக்கு விலைமதிப்பற்ற அனுபவங்களை தருகின்றன. வாழ்நாள் முழுவதும் பயன்படும் வகையில் கிடைத்த அனுபவங்களுக்காக யாராவது வருந்துவார்களா? கடந்த கால வருத்தங்கள் நம் மனதில் வரும்பொழுது அவை நம் வளர்ச்சிக்கு முக்கியமான அனுபவ பாடங்களாக இருந்தன என்றும், அவை தான் நம்மை இன்று இந்த அளவு மாற்றி உள்ளது என்றும் எண்ணலாம்.
கடந்த கால தவறுகளுக்காக வருந்துவது என்பது ஒரு பொதுவான உணர்வாகும். இது சில சமயங்களில் மன அழுத்தத்திற்கும், சில சமயங்களில் நம்முடைய வளர்ச்சிக்கும் வழி வகுக்கும். கடந்த கால தவறுகளுக்காக வருந்துவது நம்மை செயலாற்ற விடாமல் முடக்கி விடலாம் அல்லது புதிய அனுபவங்களுக்கு தூண்டலாம்.
கடந்த கால வருத்தங்கள் நமக்கு குற்ற உணர்வை ஏற்படுத்தி மன அழுத்தத்தை உண்டாக்கும். இது உடல் நல பிரச்னைகளை ஏற்படுத்துவதுடன் நம்மை முழுமூச்சாக செயல்படவிடாமல் முடக்கிவிடும் வாய்ப்புகள் அதிகம்.
தவறு செய்யாத அளவுக்கு யாரும் 100% சரியானவர்கள் அல்ல. கடந்த கால தவறுக்கான காரணத்தை கண்டுபிடித்து, அதில் நம் மீது தவறு இருந்தால் ஏற்றுக்கொள்ள முயற்சி செய்வதோடு அதனை மறந்து விட்டு வாழ்வில் முன்னேற முயற்சி செய்யவேண்டும். கடந்த காலத் தவறுகளை நினைத்து காலத்தை வீணாக்காமல் அதிலிருந்து கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்வதுதான் சிறந்தது.
நமக்கு நெருக்கமான ஒருவருடன் நம்முடைய பிரச்னைகளை பகிர்ந்து கொள்வது நிம்மதியைத்தரும். அத்துடன் நமக்கு பிடித்தமான விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவதும் கடந்த காலத் தவறுகளில் இருந்து வெளிவர உதவும். முக்கியமாக அந்தத் தவறுகளை மீண்டும் செய்யாமல் இருக்க கற்றுக்கொள்வதுதான் மிகவும் முக்கியம். இது எதிர்கால இலக்குகளை அடைவதற்கான தைரியத்தையும், செயலாற்றும் திறனையும் கொடுக்கும்.
கடந்த காலத் தவறுகளை மீண்டும் மீண்டும் நினைவில் கொண்டு வந்தால் அது அதிக வலியைக் கொடுத்து மன ஆரோக்கியத்தையும் பாதிக்கும். தவறு செய்தவர்களை மன்னிப்பது என்பது உயர்ந்த பண்பாகும். அதேபோல் நாம் காயப்படுத்திய ஒருவரை அணுகி மன்னிப்பு கேட்பதும் அதற்காக வருந்துவதும் கூட சிறந்தது.
கடந்த காலத்தைப் பற்றிய கவலைகளை மறந்து புதிய வாழ்க்கையை தொடங்குவதுடன், நமக்கு பிடித்தமான விஷயங்களில் கவனம் செலுத்துவதும் சிறப்பு. கடந்த காலத்தை விட்டு விலகி எதிர்காலத்தை நோக்கி முன்னேற்ற பாதையில் செல்வதுதான் நம்மை குற்ற உணர்விலிருந்து வெளிவர உதவும்.