
நேர்மை என்பது ஏன் எப்போதும் கடினமான தேர்வாக இருந்து வருகிறது தெரியுமா? அதனை பின்பற்றுவது ஒன்றும் அவ்வளவு எளிதான விஷயம் அல்ல என்பதால்தான். நேர்மையாக இரு என்று அறிவுரை கூறுவது ரொம்ப சுலபம். ஆனால் அதை கடைபிடிக்க நிறைய திட மனதும் துணிச்சலும் வேண்டும்.
உண்மையாக இருப்பதும் உண்மையைப் பேசுவதும் மிகவும் கடினம். அது ஒவ்வொரு முறையும் இனிமையான நினைவுகளையோ பரிசுகளையோ தராது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் உண்மை இனிக்காது. ஆனால் உண்மையும் நேர்மையும் ஒரு அரிய பொக்கிஷம் என்பதை மறந்து விடக்கூடாது.
நேர்மை என்பது உணர்வுகளையும் கருத்துகளையும் வெளிப்படுத்துவதாகும். அதாவது உண்மையை சொல்வதும் உண்மையாக இருப்பதுமாகும். உண்மை என்பது யதார்த்தத்தின் துல்லியமான பிரதிநிதித்துவமாகும்.
நேர்மையாக இருப்பதில்தான் உண்மையான மகிழ்ச்சி உள்ளது. வாழ்வில் எவ்வளவு இன்னல்கள் எதிர்ப்பட்டாலும் நேர்மையுடனும், உண்மையுடனும் இருந்தால் மனநிம்மதியுடன் மகிழ்ச்சியாக இருக்கலாம். எங்கும் எதிலும் நேர்மையான மற்றும் வெளிப்படையான உறவு தான் மகிழ்ச்சியை நிலை நிறுத்தும். நேர்மை என்பது நம் உள்ளிருந்து தொடங்குகிறது. எல்லா நேரங்களிலும் நேர்மையாக இருப்பது ஒன்றும் கடினமல்ல. மனசாட்சிப்படி நடந்து கொண்டாலே போதும். மற்றவர்களுடன் பழகும் பொழுது கூட நம்முடைய நம்பிக்கைகளுக்கு மாறாக செயல்படாமல் இருக்கலாம்.
உண்மையைவிட சக்தி வாய்ந்த ஆயுதம் எதுவும் இல்லை. நாம் நேர்மையற்றவராக இருக்கும்பொழுதுதான் நாம் கூறும் எல்லாப் பொய்களையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் அவற்றை உண்மையாக்கவும் பாடுபட வேண்டும். அதுவே நேர்மையாக இருக்கும்பொழுது பொய் சொல்ல வேண்டியதில்லை. அதை காப்பாற்ற நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. இதனால் மன அழுத்தம் இன்றி அமைதியாக வாழமுடியும்.
நேர்மை ஒருவருக்கு நற்பெயரை உண்டாக்குவதுடன் அவர் மீது நம்பிக்கையும் கொள்ள வைக்கிறது. நிறைய பேசும்பொழுது நம்மை அறியாமல் சில பொய்களைக் கூறி விடுவோம்; எதிரில் நிற்பவர்கள் நம்மை உயர்வாக நினைக்க வேண்டும் என்பதற்காக. அதனால்தான் 'குறைவான பேச்சு குறைவான தவறுகளை உண்டாக்கும்' என்று கூறப்படுகிறது.
நேர்மையை சிறந்த கொள்கையாக வாழ்வில் கடைபிடிக்க வேண்டியது அவசியம். இது பணியிடத்தில் வெளிப்படைத் தன்மையையும், தனிப்பட்ட உறவுகளில், நட்பு அல்லது காதல் உறவுகளில் வெளிப்படையாக இருப்பது தவறான புரிதல்களை தடுக்கவும் உதவும். நேர்மையைக் கையாள்வது மனக்கசப்பை உருவாக்கவிடாமல் உறவை வலுப்படுத்தும்.
ஒரு கல்வி அமைப்பில் மாணவர் ஒருவர் பணியில் தவறை மறைக்க முயற்சிப்பதற்கு பதிலாக அதை ஒப்புக் கொண்டால் அது பெரும்பாலும் அவரது நேர்மைக்காக மதிக்கப்படுகிறது. இந்த அணுகுமுறை மதிப்புமிக்க கற்றல் அனுபவங்களுக்கும், கல்வியாளர்களிடையே நேர்மைக்கான நற்பெயருக்கும் வழி வகுக்கும்.
அதேபோல் ஒரு நிறுவனத்தில் தயாரிப்பு குறைபாடு அல்லது சேவையில் திருப்தியின்மை போன்ற தவறுகளை வாடிக்கையாளர்கள் சுட்டிக் காட்டும் பொழுது வெளிப்படையாக ஒப்புக்கொண்டு அதை சரி செய்ய உடனடியாக நடவடிக்கைகளை எடுக்கும் பொழுது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் பெறமுடியும். எந்த சூழ்நிலையிலும் நேர்மை பிரச்னைகளைைத் தீர்க்க உதவுவதுடன் வலுவான உறவுகளையும், நற்பெயரையும் உண்டாக்கும்.
நம்மால் முடிந்தவரை நேர்மையை பின்பற்றலாமே! முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை.