
மனிதர்கள் சிலருக்குக் காலம் கடந்து அறிவு வரும்! அதுவரை அவர்கள் எதைச் செய்தாலும் நல்லதுதான் என நினைப்பார்கள். அதனால் உண்டாகும் பாதிப்பினையும் உணர்வது இல்லை.
எதுவுமே தனக்கு என்று வரும் போதுதான் அவர்கள் உணர்ந்து கொள்வார்கள். இதுதான் காலம் கடந்த ஞானம் ஆகும். ஏற்கனவே ஒரு செயலில்பட்டு உணர்ந்தவர்கள். தம் அனுபவத்தில் வேண்டாம் என அறிவுரை கூறினாலும் காதில் வாங்கிக் கொள்ளமாட்டார்கள்.
எதையும் அனுபவித்து அறிந்து உணர்ந்த பின்னரே ஞானம் உண்டாகும். தீமை விளைவிக்கும் பழக்கங்களை கைப்பிடிக்க வேண்டாம், விட்டுவிடுங்கள் என்று கூறினால் கேட்பது இல்லை.
தீமை விளைவிக்கும் என்று தெரிந்திருந்தும் அச்சிற்றின்பத்திற்கு அடிமை ஆகிவிடுகின்றனர். ஆரம்பத்தில் அப்பழக்கம் ஆனந்தம் தந்தாலும், தொடர்ந்து அது அவனை அடிமைப்படுத்திவிடுகிறது.
ஆரம்ப காலத்தில் தீமை அறியாமல், செய்யும் தவறுகளைத் தொடர்ந்து செய்யக்கூடாது. நம்மை நாம் திருத்திக்கொள்ள வேண்டும்.
எந்தக் கெட்டபழக்கத்தில் இருந்தும் நம்மால் மீண்டு வெளியே வரமுடியும். அது ஒன்றும் இமாலய சாதனை இல்லை.
தீயபழக்கங்களின் அடிமையாக இருந்து, உடல்நலம் சீர்கேடு அடைந்தபின். இந்தப் பழக்கத்தை விட்டால்தான் உயிர் வாழ முடியும். என மருத்துவர்கள் சொன்னால்தான் தெளிவாவார்கள்.
அதுவரை அவர்கள் மனம் தெளியாது. உயிர்வாழ வேண்டும் அதுவும் ஆரோக்கியமாக வாழவேண்டும் என்ற ஆசை முன்னரே வரவேண்டும்.
நமக்காக நம் குடும்பம் நம்பி உள்ளது. எனவே, அவர்களுக்காக வாழ வேண்டும் என ஆசைப்பட வேண்டும். அப்படி ஆசைப்பட்டால் மட்டும் போதுமா!
வயதான சிலர் கல்விப் பருவம் தாண்டிய பின், அதை நினைத்து வருத்தப்படுகிறார்கள். அப்பொழுதே ஒழுங்காக படித்து இருந்தால், இப்பொழுது நல்ல வேலை வாய்ப்புடன் மகிழ்ச்சியுடன் வாழலாமே. இப்படிக்கிடந்து கஷ்டப்படவேண்டிய நிலை வந்திருக்காதே என்று நினைப்பார்.
அவர்களுக்கு அனைத்து வசதிகளும் இருந்தும் நன்கு படிக்காமல் கோட்டைவிட்டு இருப்பார்கள். அதை நினைத்து இப்பொழுது என்ன செய்வது.
படிக்கும் பருவம் என்ன திரும்பவும் வரவா போகிறது.
இதே போல்தான் விவசாயம் மற்ற தொழில்கள் என பலவற்றிலும் அக்கறையுடன், பார்க்காமல் இருந்துவிட்டு பின்னர் கவலைப்பட்டு என்ன செய்வுது.
காலம் கடந்து வரும் ஞானத்தால் என்ன செய்ய முடியும். சென்ற காலங்கள் திரும்பவும் வராதே
எதையும் உரிய காலத்தில் செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும். அந்தப் பலனையும் முழுமையாய் அனுபவிக்க முடியும்.
ஆரம்ப காலத்தில் அனுபவத்தில் பெரியவர்கள் கூறும் அறிவுரைகளை ஏற்று நடக்கவேண்டும். எதிர்கால வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என ஆசைப் படுகிறோம். அப்படி ஆசைப்பட்டால் மட்டும் போதாது. அதற்கான நிலையை அடைய, ஆரம்பத்திலேயே ஆரோக்கியமான வழியை தேர்ந்தெடுக்கவேண்டும். பின் அதன்படி நடக்கவும் வேண்டும்.
பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவன். வகுப்பில் முதல் மாணவனாகத் திகழ ஆசைப்படுகிறான். அதற்காக அவன் கவனமாகப் படித்து உழைக்கவேண்டும்.
படிக்க வேண்டிய காலத்தில் படிக்காமல், விளையாட்டினால் கவனம் செலுத்தக்கூடாது. பிறகு எப்படி, அவன் அதிக மதிப்பெண்கள் பெற முடியும், வகுப்பில் முதல் மாணவனாக வரமுடியும்?
இப்படி எந்தத் துறையிலும் முழுக் கவனத்தைச் செலுத்தினால் மட்டுமே வெற்றிபெற முடியும். கவனத்தைச் சிதறவிட்டுவிட்டு, பின்னால் வருந்துவதில் இலாபம் இல்லை.
நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். நம் வாழ்க்கை நல்ல முறையில் அமைத்துக் கொள்ளவேண்டும். என்ற தெளிவான சிந்தனை பிறக்கவேண்டும். எதையும் வருமுன் காக்கத் தெரியவேண்டும்.