
'சிறிய மீன்கள் செல்லட்டும்!' என்று விட்டு விட்டு பெரிய மீனுக்காகக் காத்திருக்கும் கொக்கு, பெரிய மீன் வந்தவுடன் அதைக் கொத்திக்கொண்டு பறந்துவிடும்.
முல்லைக்கொடி, பற்றிப் படர்வதற்கு கொழுகொம்பை எதிர்பார்த்துக் கிடக்கும்; அது கிடைத்தவுடன் பற்றிப் படர்ந்து முல்லை வளர்ச்சி அடையும்.
அதைப் போல்தான் அறிஞர்களும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் செயல்தான் வாழ்க்கைக்கு ஆதாரம் என்பதை அறிந்து, அதை நிறைவேற்ற சந்தர்ப்பங்களை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். சந்தர்ப்பங்கள் கிடைத்தவுடன் செயலுக்கு வடிவம் கொடுக்கிறார்கள்.
"நம்பிக்கை என்ற சொல்லின் முன்னால் கஷ்டங்கள் எல்லாம் பாழடைந்த வீடுபோல் சரிந்துவிடும்" என்று நெப்போலியன் கூறுகின்றார்.
சென்னை துறைமுகத்தில் எழுத்தராக 20 ரூபாயைச் சம்பளமாகப் பெற்று வேலை செய்து கொண்டிருந்தவர் சீனிவாச ராமானுஜன். அவர் பேராசிரியர் ஹார்டி மூலம் சந்தர்ப்பம் கிடைத்தபோது பயன்படுத்திக் கொண்டார். லண்டன் சென்றார். பின்னர் உலகம் போற்றும் கணித மேதையாக உயர்ந்தார்.
கல்கத்தாவில் கணக்கர் ஜெனரலாக வேலை பார்த்தவர் சர் சி.வி.ராமன் அவர் தனக்கு அறிவியல் மீது ஏற்பட்ட தாகத்தால் அந்த வேலையை விட்டுவிட்டார். 'ஒளிச்சிதறல்' பற்றிய உண்மைகளைக் கண்டுபிடித்தார்; நோபல் பரிசு பெற்றார்.
இப்படி அறிஞர்கள் பலரும் தாங்கள் செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டும், வேலையில் இருந்து கொண்டும் சந்தர்ப்பங்களைத் தேடிக்கண்டுபிடித்து அதை நன்கு பயன்படுத்திவெற்றி பெற்றவர்கள்தான்.
சீனத் தத்துவஞானி கன்பூஷியஸ் "தோல்விகள் இல்லாத துயரற்ற வாழ்க்கை வாழ்வது இல்லை பெரிதல்ல. துன்பங்கள் தொடர்ந்து வரும்போது அதைத்தாங்கி மீண்டும் தலை நிமிர்வதுதான் மனித வாழ்வின் மகத்துவம்" என்றார்.
'துன்பம் வருகிறதே!' என்று அறிஞர்கள் ஓடி ஒளியமாட்டார்கள். வாழ்க்கை தோல்வியிலும், பசியிலும் நகர்கிறதே!' என்று கலங்கு மாட்டார்கள்.
அவர்கள் கண்முன் தெரிவதெல்லாம் சாதனையின் கனவுகள்! சந்தர்ப்பத்திற்காகத் காத்திருப்பார்கள், கிடைத்தபோது அதைப் பயன்படுத்தி மகத்தான வெற்றிகளைக் குவிப்பார்கள்.
மேரிகியூரி என்பவர் பிரபுக்கள் வீடுகளில் பணிப்பெண்ணாக வேலை பார்த்தவர். பின்னர் ரேடியம் கண்டுபிடித்து சாதனை புரிந்தார்.
தாமஸ் ஆல்வா எடிசன் என்பவர் தனது வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் புகைவண்டியில் செய்தித்தாள், இனிப்புகள் விற்பனை செய்தவர். பின்னாளில் மின்சாரம் உட்பட ஏராளமான பொருள்களைக் கண்டுபிடித்து பெரும் விஞ்ஞானியாகப் புகழ்பெற்றார்.
கார்பீல்ட் - இவர் மரம் வெட்டுதல், பள்ளியில் மணி அடிக்கும் பியூன் வேலை பார்த்தல் போன்ற வேலைகளை செய்து வந்தார். பிற்காலத்தில் அமெரிக்க அதிபராக உயர்ந்தார்.
சார்லஸ் டிக்கன்ஸ் - இவர் கண்ணாடி பாட்டில்களுக்கு லேபிள் ஒட்டும் வேலை செய்தவர். இவருக்கு 'கிறிஸ்மஸ் கரோல்' என்ற புத்தகத்தின் மூலம் உலகப்புகழ் கிடைத்தது.
ராக்பெல்லர்- இவர் உருளைக்கிழங்கு காயவைத்து கூலிவாங்கிப் பிழைத்தவர். பிற்காலத்தில் உலக கோடீஸ்வரர்களில் ஒருவரானார்.
இப்படிப் பலர் துன்பத்திலிருந்து விடுபட்டு சாதனைகள் படைத்தது போல், நாமும் முயற்சி செய்து ஏன் சாதனையில் சரித்திரம் படைக்கக்கூடாது.