
ஓர் அரசனிடம் விலை மதிக்க முடியாத ஒரு C இருந்தது. அதை தன் நாட்டின் பெருமையாக அவன் கருதினான். இந்நிலையில் அந்த வைரக்கல்லில், தலை முடியைப்போல் ஒரு கீறல் விழுந்தது.
மன்னர் துடித்துப் போனார். வைரத்தின் அழகே போயிற்று என்று வருந்தினார். அரசன் உடனே தன் நாட்டின் நகை விற்பன்னர்களை வரவழைத்து ஆலோசித்தார்.
அவ்வளவுதான். இந்த நவரத்தினத்தை ஒன்றும் செய்வதற்கில்லை. அது தன் மதிப்பைப் பெரும் பகுதி இழந்துவிட்டது. இன்னும் விரிசல் கொடுக்கும்' என்று வைர வியாபாரிகள் கூறினார்கள்.
எவராவது இந்த வைரத்தை இதன் பழைய மதிப்பிற்குக் கொண்டு வந்தால் அவருக்கு தக்க பரிசு வழங்குவேன்.... அன்று அறிவித்தான் அரசன்.
கடைசியாக ஓர் ஏழை பொற்கொல்லன் முன்வந்து, 'அரசே இந்தக் கீறலை வைத்தே வைரத்தின் மதிப்பைப் பல மடங்கு உயர்த்த முடியும்' என்றான்.
வைரக்கல் அவனிடம் ஒப்படைக்கப்பட்டது. சில நாட்களுக்குப் பின் அந்தப் பொற்கொல்லன் ஒரு சிறிய நகைப் பேழையுடன் திரும்பி வந்தான். மூடியைத் திறந்ததும் அரசன் பிரமித்து விட்டான். வைரத்தின் மீது அழகான ரோஜா ஒன்று செதுக்கப்பட்டிருந்தது. முன்பு இவனுக்குக் கவலை அளித்த கீறல், ரோஜாவின் காம்பாக ஆகிஇருந்தது.
இது ஒரு கதைதான். ஆரம்பத்தில் நமக்குக் கஷ்டம் என்று தோன்றுபவை காலப்போக்கில் அதுமாறி இன்பத்தைத் தரும்.ஊக்கம் ஆர்வம், தன்னம்பிக்கை, பயிற்சி, முயற்சி, தீவிர பயிற்சி, விடாமுயற்சி, தற்தாலிகத் தோல்விகளால் துவளாமை, தொடர்ந்து ஈடுபடும் போர்க்குணம், வெற்றியை அடைந்தே காட்டுவேன் என்கிற உறுதி உள்ளவர்கள் வாழ்க்கையில் உன்னதநிலைக்கு வந்தே தீருவார்கள்.
சிந்தனையாளர் எமர்சனின் வாழ்வில் நடந்த ஒரு சுவையான நிகழ்ச்சி.
எமர்சனைப் பார்த்து ஒருவர் கேட்டார். 'உங்கள் வயது என்ன?"
எமர்சன் சொன்னார் ," 360ஆண்டுகள்!"
இதை நம்ப முடியுமா? எனவே அந்த மனிதர் மீண்டும் கேட்டார். மன்னித்துக் கொள்ளுங்கள். நீங்கள் சொல்லியதை நான் சரியாகக் கேட்கவில்லை திரும்பவும் உங்கள் வயதைச் சொல்லுங்கள் .
எமர்சன் சுத்தமாகக் கூறினார் "360 ஆண்டுகள்!"
அந்த மனிதர் சொன்னார்' "என்னால் இதை நம்ப முடியவில்லை நீங்கள் 60 வயதுக்கு மேல் இருக்கமாட்டீர்கள்."
எமர்சன் அமைதியாக ஆனால் அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். "நீங்கள் சொல்வது சரிதான் என்னுடைய உண்மையான வயது அறுபதுதான். ஆனால் நான் உங்களைவிட ஆறுமடங்கு அதிகமாக வாழ்ந்திருக்கிறேன். 360 ஆண்டுகளில் எப்படி வாழ முடியுமோ அப்படி இந்த 60 ஆண்டுகளைப் பயன்படுத்தி வாழ்ந்திருக்கிறேன்.'
எமர்சனின் பேச்சை கேட்ட அந்த மனிதன் அமைதியானார். ஆழ்ந்து சிந்திக்கலானார்.
காலத்தை மதித்தவன், காலங்கடந்தும் புகழப்படுகிறான்; காலத்தை மிதித்தவன் காலனைத்தான் அடைகிறான். காலத்தின் போக்கை உணர்ந்து வாழ்கிறவன் உன்னத நிலையை கட்டாயம் அடைவான். எனவே நாமும் இன்று முதல் காலத்தின் மேன்மையை உணர்ந்து வாழ்வோம்.