
நாம் ஒருவரிடம் காட்டும் அன்பிற்கும் நெருக்கத்திற்கும் ஓர் எல்லைக்கோடு வைத்து அளவோடு பழகும்போதுதான் அந்த நெருக்கம் வலுவடையவும் அதன் மூலம் நம் மீதான மதிப்பு உயரவும் வழியாகும். நாம் எதையெல்லாம் ஆமோதிக்கணும், எதற்கெல்லாம் 'நோ' சொல்லவேண்டும் என்பதை சற்று விளக்கமாக இப்பதிவில் பார்க்கலாம்.
உறவு முறையில் உரசல் உண்டாகாமல் பாதுகாக்க அவரவருக்குத் தேவையான, உடல் ரீதியான அல்லது உணர்வு பூர்வமான தனிமையை எடுத்துக்கொள்வது அவசியம். அது நம் உடல் புத்துணர்வு பெற்று மீண்டுவர தேவைப்படும் ஓய்வாக இருக்கலாம் அல்லது ஒரு கருத்தை தெளிவாக வெளிப்படுத்தும் முன் அதைப்பற்றி சிந்தித்து முடிவெடுக்க தேவைப்படும் இடை வெளியாகவும் இருக்கலாம்.
நெருங்கிய நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர் களுடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு குறிப்பிட்ட விஷயம் பற்றிய உரையாடல் பொது வெளியில் உள்ள அனைவருடனும் பகிர்ந்து கொள்வதற்கு அல்ல. எனவே அந்த விஷயத்தை சம்பந்தப்பட்ட இருவருக்குள் மட்டும் வைத்துக் கொள்வது, நம்பிக்கையும் மரியாதையும் அதிகரிக்க உதவும்.
நேர மேலாண்மை மிக முக்கியமானதொன்று. உங்கள் நேரம் உங்களுக்கானது. அதை நீங்கள் வேலை செய்யவோ, பொழுது போக்கு அம்சங்களில் ஈடுபடவோ அல்லது ஓய்வெடுக்கவோ பயன்படுத்திக் கொள்ளலாம். இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் தெளிவாகக்கூறி, அவர்கள் உங்களை எப்பொழுது தொடர்பு கொள்ளலாம் என்பதையும் தயக்கமின்றி தெளிவாகக் கூறிவிடுவது நலம். இது உங்களை தேவை இல்லாத தொந்தரவுகளிலிருந்து காக்க உதவும்.
மற்றவர்களின் பிரச்னைகளுக்கு நீங்கள் எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டீர்கள். சிறிய அளவில் அவர்களுக்கு உதவி செய்யலாம். ஆனால் உங்கள் மொத்த கோப தாப உணர்ச்சிகளையும் சக்தியையும் அவர்களுக்காக விரயம் செய்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பதாய் முடியும்.
பண விஷயத்தில் எப்பவும் கறாராயிருப்பது நல்லது. பணம் கொடுப்பது வாங்குவது மற்றும் உங்கள் நிதி நிலைமை பற்றி உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பகிர்ந்து கொள்வதும் விவாதிப்பதும் அவர்களுடனான உறவில் விரிசல் உண்டு பண்ணவே உதவும்.
உங்கள் அலுவலக வேலை, நட்பு வட்டம், வாழ்வியல் முறை அனைத்தும் உங்கள் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டியவை. அதில் முடிவெடுப்பது உங்கள் உரிமை. இதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும், அதற்கு ஒரு எல்லைக்கோட்டை நிர்ணயித்து அதற்கு வெளியே அவர்களை வைப்பது தொந்தரவின்றி வாழ உதவும்.
ஒருவருடனான உரையாடலை மதிப்பதற்கும் மறுப்ப தற்கும் உங்களுக்கு உரிமை உள்ளது. பிறரின் கேலியான விமர்சனம், காயப்படுத்தும் வார்த்தைகள் போன்றவற்றை பொறுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அதைக் கூறியவர்கள் உங்கள் அன்பிற்குரியவராக இருந்தாலும் அதை அவர்கள் உணர்ந்து திருந்துவதற்கு நீங்கள்தான் கற்றுத்தர வேண்டும்.
தேவையற்ற போன் கால், மெசேஜ், சமூக வலைத்தள பதிவுகளை விமர்சனம் செய்தல் போன்றவற்றிற்கும் எல்லைக் கோட்டை நிர்ணயித்து அவற்றை தவிர்ப்பது நிஜ வாழ்வை சமநிலைப்படுத்த உதவும்.
உங்கள் அறைக்குள் அனுமதியின்றி நுழைதல், பொருட்களை கேட்காமல் எடுத்து பயன்படுத்துதல் போன்ற உரிமை மீறல்களுக்கு கட்டுப்பாடு விதித்து வைப்பது உங்களுக்குப் பாதுகாப்பாகும்.
உங்கள் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் எந்த செயலுக்கும் தயங்காமல் "நோ" சொல்வது குற்றமில்லை. உண்மையான உறவினர்களும் நண்பர்களும் புரிந்து கொண்டு உங்கள் மீதான மதிப்பை உயர்த்தவே செய்வார்கள்.