
இவ்வுலகில் நாமும் ஓர் அங்கம் என்பதை மறந்துவிட வேண்டாம். அதனால் நம் வாழ்க்கை உலகத்திற்கு எவ்விதத்திலும் பயன்படும்படியாக அமையவேண்டும்.
'மக்கள் பணியே மகேசன் பணி' என்று ஆன்றோர்கள் கூறிச் சென்றுள்ளனர். அண்மையில் தோன்றி மறைந்த விவேகானந்தர் 'எனக்கே நன்மை செய்து கொண்டு நான் மோட்சத்தை அடைவதைவிட, மற்றவர்களுக்கு நன்மை செய்து நரகத்துக்கே போகத்தயார்' என்று மார்தட்டிப் பேசி இருக்கிறார்.
மற்றவர்களுக்கு உபகாரம் செய்து வாழ்வதே மேலான வாழ்வாகும். பிறர் நலன்களையே எண்ணித் தேவையான உதவிகளை அளித்து வாழ்ந்து வந்தவர்கள் எப்போதும் கேடுற மாட்டார்கள்.
நீ ஜெபமாலையை உருட்டிக் கொண்டு மூலையில் உட்கார்ந்திராதே. நீ விரும்பி வேண்டும் ஆண்டவன் இங்கில்லை. கண்ணைத் திறந்து பார் அதோ... புழுதி படிய - வியர்வை வடிய நிலத்தைஉழுகிறானே. அவனிடத்தே ஓடு! அவனைப்பார்' என்கிறார் ரவீந்திரநாத் தாகூர்.
வாழ்க்கையில் உயர்ந்ததும் உங்களுக்கு அதிகார ஆசை வந்துவிடும். நீங்கள் ஜாக்கிரதையாக இருந்து அதைக் களைந்து எறியவேண்டும்.
'நான் தலைவன்' என்று நீங்கள் மார்தட்டினால் ஒருவரும் உங்களை சட்டை செய்யமாட்டார்கள். அதே சமயத்தில் நான் ஒரு தொண்டன் என்று இறங்கி வந்தால் உங்கள் பின்னால் அநேகர் வரத் தயாராய் இருப்பார்கள்.
பிறருக்கு உதவி செய்வதில் -உபகாரமாக இருப்பதில் - தொண்டு செய்வதில் - நீங்கள் மனப்பூர்வமாக ஈடுபட வேண்டும். இவ்வண்ணம் நீங்கள் கடமையாகக் கொண்டு பிறருக்கு உதவி செய்வதாக இருந்தால், உலகம் உங்களை மறந்து விடாது. கட்டாயம் தன்னுடைய கடமையைச் செய்தே தீரும். உலக வரலாற்றைப் பாருங்கள். அந்தந்த நாட்டுத் தியாக வீரர்களை தொண்டுள்ளம் கொண்டவர்களை இன்றும் போற்றிப் புகழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
இவ்விதமான தியாகிகள்தான் உலக முன்னேற்றத்தின் வீரிய வித்துக்களாவர்; உலக வாழ்க்கையின் உயிர்களாவர். தியாகிகள் இல்லாத நாடு சுதந்திரநாடாகாது.
விவேகானந்தர் இளைஞராய் இருந்தபோது, ஒரு வீட்டு வாயிலில் நின்று இருந்து கொண்டிருந்த ஒரு துறவியைக் கண்டார். உடுத்தியிருந்த கந்தையைப் பார்த்து உளம் நொந்தார். அப்பொழுது அந்தத் துறவியார் அவரைப் பார்த்து நீ உடுத்தி இருக்கும் துணிகளை எனக்குத் தருவாயா?" என்று கேட்க, உங்கள் கந்தல் ஆடையைப் பார்த்துவிட்டு நானே அப்படி எண்ணியிருந்தேன் என்று உடனே தன் ஆடைகளைக் களைந்து கொடுத்துவிட்டார்.
அத்தகைய அன்பு உள்ளத்தை - தியாக உள்ளத்தை அவர் இளமையிலேயே பெற்றிருந்தமையால்தான், பிற்காலத்தில் அன்பே உருவாய், தொண்டு செய்வதே தன் பணியாய் இருந்து வந்தார்.
எவரது இதயம் ஏழைகளைக் கண்டு கண்ணீர் வடிக்கின்றதோ அவரையேதான் மகாத்மா என்பேன்' என்பது விவேகானந்தரின் திருவாக்காகும். நதியைப்போல பிறருக்காய் வாழ்வதில் ஒரு தனி சுகம் இருக்கிறது.