

வாழ்க்கையில் நீங்கள் சுவாசிக்கும் வசந்த காலத்தில், உங்களோடு ஒட்டி உறவாடி விசுவாசமாக இருப்பவர்கள் அனைவருமே உங்கள் பின்னால் எந்த நேரத்திலும் நிற்ப்பவர்கள் அல்ல என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.
அவர்களில் எத்தனை பேர்கள், நீங்கள் புயலில் சிக்கும்போது உங்கள் முதுகில் குத்திக் காயப்படுத்திவிட்டு போகப் போகிறார்கள் என்பது தெரியாது. அளவுக்கு அதிகமாக போனால் அமிர்தமும் நஞ்சாகும் என்று பழமொழிக்கு ஏற்ப இல்லாமல் யாரிடமும் அளவோடு பழகுங்கள்.
அப்போது அந்த நேரத்தில் விலகியவர்கள் பற்றிய கவலை வேண்டாம். உங்களைவிட்டு விலகியவர்களை உடனே மறந்து விடுங்கள். ஏனென்றால் நீங்கள் இழந்தது ஒரு பொய்யான மாயத் தோற்றத்தில் இருந்த உண்மை. ஆனால் நேர்மாறாக, அவர்கள் இழந்ததோ மெய்யான உண்மை இருக்கும் உங்களை என்பதை மறந்து விடாதீர்கள்.
வாழ்க்கையில் சிக்கல்களை நாம் பார்த்துக்கொண்டே இருந்தால், மலர்களில் வட்டமிடும் வண்டு போல், நம் கண்முன்னே அவை சுற்றிக் கொண்டேதான் இருக்கும். அதற்கு தீர்வுக்கான விடயம் கண்டுபிடித்து, அதனை கடந்து செல்லும் தீர்க்கமான பார்வையாக பார்க்க முயற்சி செய்து, அதனை வென்று காட்டுங்கள்.
வாழ்க்கையில் சிக்கல்கள் என்பது, நாம் ஓடும் ரயிலிருந்து பார்க்கப்படும் மரங்களைப் போன்றது. அதன் அருகில் செல்லும் போது, அந்த மரங்கள் பெரிதாக தோன்றும். கடந்து செல்லும் போது, அதே மரங்கள் மிகவும் சிறியதாகி மறைந்துவிடும். நீங்களும் அதேபோல் கடந்து சென்றால் எப்படிப்பட்ட சிக்கல்களும் மறைந்து போகும்.
வாழ்க்கையில் மிகவும் சரியான வழிமுறைகளை கடைபிடித்து வாழ வேண்டியது அவசியம். அதனை பின்பற்ற தவறினால், வாழ்க்கை பயணம் முட்டுச்சந்தில் முட்டி வீழ்ந்து போகும். ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் பல வகைப்படும் இன்னல்களையோ அல்லது தடைகளையோ தாண்டி வரவேண்டும் என்றால், சரியான வழிமுறைகளை கடைபிடித்து, உங்கள் கண்களில் படும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டு, அதனை வென்று காட்டி வாழவேண்டும்.
வாழ்க்கையில் அடுத்தவர்களை நம்பி வாழப் பழகி, சுயமாக வாழும் வாழ்க்கையை இழந்து விடாதீர்கள். தனிமனித வாழ்க்கையில், தனித்துவம் என்பது ஆணிவேர் போன்றது. அதன் உழைப்பில்தான் மரங்கள் விருட்சமாக வளர்கிறது. அதேபோல்தான் நம்முடைய வாழ்க்கையில் சுயம் என்பது. சுயத்தை எக்காரணம் கொண்டும் இழந்து விடாதீர்கள்.
வாழ்க்கையில் சுயசிந்தனை இருந்தால் மட்டுமே, நீங்கள் முயற்சி செய்யும் செயல்களுக்கு புத்துயிர் கிடைக்கும். அதன் பரிணாமம் பன்மடங்கு வலிமை கொண்டதாக இருக்கும். பிறரிடம் வரும் அறிவுரைகளை ஏற்பது தவறில்லை. ஆனால், அவற்றை பலமுறை யோசித்து முடிவு எடுத்து ஏற்க பழகுங்கள். அதிலும் அவர்களுடைய தலையீடு இருப்பதை தவிர்க்க தவறாதீர்கள்.
வாழ்க்கையில் நிதானமாக இருக்கவும், ஆழமாக சிந்திக்கவும் ஒருபோதும் பின் வாங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். நிதானம் தருவது நீண்ட ஆயுளையும், தெளிந்த வாழ்க்கையும். ஆழமாக சிந்தித்து செயலாற்றும்போது நேர்கொண்ட பார்வையும், வெற்றிக்கு இட்டுச் செல்லும் இலக்கையும் பெற்றுத் தரும் என்பதை உணர்ந்து பொறுப்புடன் செயலாற்றுங்கள்.
வாழ்க்கையில் ஒவ்வொருவரும் மனித குணங்களோடு வாழ்ந்து, வெற்றி முகமாக திகழுங்கள். அதுதான் ஒவ்வொருவருக்கும் சுயத்தின் அடையாளமாக இருக்கும்!