

வாழ்க்கையில் உலகத்தையே வென்று, சாதித்துவிடலாம் என்று நினைக்கும் நேர்மறை எண்ணங்கள் நம்மிடையே இருந்தால், நம் சிந்தனைகள் பறந்து விரிந்து செயலாற்றும் வல்லமை கொண்டதாக இருக்கும். அதை உணர்ந்து, நம் தடங்களைப் பதித்தால் நம்மை உயர்வான இடத்திற்கு இட்டுச் செல்லும்.
வாழ்க்கையில் முயற்சி செய்யாமல் எதுவும் வந்து விடாது. பிரபஞ்சம் எப்போதும் இயங்கி கொண்டேதான் இருக்கிறது உயிரினத்தின் வாழ்க்கைக்காக. நாம் நமக்காக, நம் வாழ்க்கைக்காக இயங்குவோம். இல்லையெனில் காலம் நம்மை கடத்திச் சென்று விடும்.
ரோஜாச் செடியில் முட்களும் இருக்கிறது, ரோஜாக்களும் இருக்கிறது. நம் பார்வையைக் கவர்வது ரோஜா மலர்கள்தான். ஆனால் அதேசமயம் ரோஜாப்பூவை பறிக்க நினைக்கும் போது, முட்களின் மீதுதான் நம் கவனம் முதலில் செல்கிறது. இதுதான் வாழ்க்கை என்பதை புரிந்துகொள்வோம்.
வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஒரு இலக்கை நோக்கி பயணிக்கும்போது, இடை இடையே பல தடங்கல்கள் ஏற்படும். அதனை எப்படி கையாளவேண்டும் என்ற தெரிந்து கொள்ள வேண்டும். நாம் ரோஜாவை பறிக்கும்போது, முட்கள் நம் கையில் குத்தாமல் இருக்க எப்படி கவனமாக இருக்க வேண்டுமோ அப்படி இருக்க வேண்டும் என்பது அவசியம்.
நம் கரங்கள் சும்மாவே இருந்தால் உழைப்பு ஏது? நம் செயல்கள் முடஙகினால் சாதனை ஏது? நாம் காலத்தையும் நேரத்தையும் விழுங்கினால் வாழ்க்கை ஏது? இப்படி எதிர்மறை கேள்விகளில் ஒளிந்து கொண்டு இருக்கிறது எண்ணற்ற நேர்மறை எண்ணங்களும் செயல்களும் என்று புரிந்துகொள்வோம்.
மனித வாழ்க்கையில் நாம் தேனீக்கள்போல் சுறுசுறுப்பாக இருக்கவேண்டும் என்பதை முதலில் புரிந்து கொள்வோம். தேனீக்கள் மலர்களைத் தேடிச்சென்று, தேனை சேகரித்து வருகிறது. அதுபோல் நம்முடைய வாழ்க்கையில் தேடுதல் இல்லாமல் எதுவும் கிடைத்து விடாது என்பது நிதர்சனமான உண்மை. தேனீக்களைப் போன்று தேடுவோம் நம் வாழ்க்கைக்கான வாழ்வாதாரம் நோக்கி. தேடுதல் இல்லாமல் எந்த சாதனையும் சாத்தியம் இல்லை.
தேடுதலின் பற்றுதலே முயற்சியின் தொடக்கம். முயற்சியில் தோல்வி அடைந்தாலும், முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்காமல், கமா போட்டு விடாமுயற்சி என்னும் ஆல விழுதுகளை பற்றுவோம். விதியை வெல்லும் மதி போல், வென்று காட்டுவோம்.
சிந்தனையும் உழைப்பும் சேர்ந்து நேர்க்கோட்டில் பயணித்து, சாதனைக்களத்தில் வெற்றிக்கு களமாடுவோம். சாதனை படைக்கும் இடத்தில் சகுனி உருவமாக பிரச்னைகள் வரும். போராட்டம் இல்லாமல் வாழ்க்கையில் எதுவுமே சாத்தியம் இல்லை. மலைத்து விடாமல், மலைபோல் நம்பிக்கையும், தைரியமும் கொண்டு உறுதியுடன் இருப்போம். சோதனைக் கடலில் விழுந்தாலும், மீன்களைப் போன்று எதிர்நீச்சல் போட்டு, முன்னேற்றப் பாதையில் பயணித்து தடம் பதிப்போம்.
வாழ்க்கை என்பது பூக்கள் நிறைந்து இருக்கும் ஒரு பூஞ்சோலை. அதில் நம் மனங்களே வேர்கள். நம்முடைய எண்ணங்களே மரங்கள். நம்முடைய புன்னகையே மலர்கள். நம்முடைய சிந்தனையே இயற்கை காட்சி நம்முடைய பார்வையே அதற்கு சாட்சி. இப்படி ஒரு வாழ்க்கை அமையவேண்டும் என்று கற்பனைப் பண்ணி பார்ப்போம். மனதில் நேர்மறை எண்ணங்கள் விதைத்து வாழ்ந்தால், விருட்சம் என்றே வாழலாம்.