
ஏதாவது வரம் வேண்டும் என்று சதா சர்வகாலமும் கடவுளிடம் கேட்டுக்கொண்டே இருக்கிறோம். உண்மையில் வாழ்வதென்பதே வரம் தான் என்பதை எப்போது நாம் புரிந்துகொள்ளப் போகிறோம். நினைத்தது கிடைக்கவும், கிடைத்தது நிலைக்கவும் நேர்மையாக வாழ்ந்தாலே போதும் வாழ்வு என்பது வரம்தான். வாழ்வை ரசிக்க தெரிந்தாலே போதும் ஒரு மழலையின் சிரிப்பில், பனித்துளிகள் நிறைந்த புல் நுனியை, இயற்கையை, தனிமையை, அமைதியை என்று எல்லாவற்றையும் அதனதன் இயல்புகளுடன் ரசிக்க தெரிந்தாலே போதும். மனிதர்களாய் பிறப்பதே ஒரு வரம்தான்.
வாழ்வென்பதே வரம்தான் எப்பொழுது? நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும் பொழுது. நல்ல உடல் நலத்தோடு, மனநலத்தோடு மகிழ்வுடன் வாழ்கின்ற மனிதர்களுக்கு வாழ்வு என்பது வரம்தான். பொதுவாக நீண்ட ஆயுள் வரமாகவே பார்க்கப்படுகிறது. அது எல்லோருக்கும் எளிதில் கிடைப்பதில்லை. பாசமுள்ள குடும்பத்துடனும், ஆதரவு காட்டும் துணையுடனும், எப்பொழுதும் உடன் நிற்கின்ற நட்போடும் இருப்பது பெரிய வரமே!
யாருக்கும் பாரமாக இல்லாமல் நம்மாலான சின்ன சின்ன உதவிகளை செய்துகொண்டு வாழ்வது. பொருளாதார ரீதியில் யாரையும் சார்ந்திடாமல் இருப்பது, இவர் இன்னும் நீண்ட காலம் வாழனும் என்று நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நினைக்கும் அளவிற்கு வாழ்வதே வரம். வாழ்க்கையை நேர்மறையாக எதிர்கொள்ளும் திறன்கொண்டால் வாழ்வதென்பது வரமே!
நம் வாழ்க்கை சொர்க்கமாவதும், நரகமாவதும் நம் கையில்தான் உள்ளது. நம் மனதில் தோன்றும் எண்ணங்களைப் பொறுத்தே நம் வாழ்க்கை அமைகிறது. அதனால்தான் "எண்ணம்போல் வாழ்வு" என்கிறார்கள். அமைதியான மனமும், மகிழ்ச்சியான எண்ணங்களும் இருந்தால் வாழ்வு வரமாகவே அமையும். அன்பு நிறைந்த நெஞ்சத்துடன், ஆசைகளை குறைத்துக்கொண்டு வாழப்பழகினால் வாழ்வென்பது வரம்தான்! அகந்தை இல்லாமல் பழகுவதும், உள்நோக்கம் எதுவுமின்றி அன்பு செலுத்துவதும், எந்தவிதமான எதிர்பார்ப்பும் இன்றி அக்கறை செலுத்துவதும், சுயநலமின்றி சிந்திப்பதும், வாழ்வதும் வாழ்க்கைக்கு தேவையான சூத்திரங்கள் என்பதை மறக்க வேண்டாம். இவற்றை கடைப்பிடித்தால் வாழ்வென்பது வரம்தான்.
வாழ்கின்ற நாட்களில் யாருக்கும் எந்த விதமான கெடுதலும் எண்ணாமல், தொந்தரவு செய்யாமல், முடிந்தவரை பிறருக்கு உதவியாக இருப்பதுடன், யாரையும் வெறுக்காத மனநிலையையும் வளர்த்துக் கொண்டால் வாழ்வில் மகிழ்ச்சிக்கு என்றும் குறைவிருக்காது.
ஆடம்பரத்தை விரும்பாமல் எளிமையாக வாழ்வதும், பழகுவதும், பேசுவதும் வாழ்வில் சந்தோஷத்தைக் கொடுக்கும். மனதிற்குப் பிடித்த விஷயங்களை செய்துகொண்டு, நம்மை சார்ந்து இருப்பவர்களுக்கு உண்மையாக இருந்துகொண்டு, நம் மீது அக்கறை கொள்பவர்களை ஏமாற்றாமல் திருப்பி அன்பு செலுத்துவதும், நட்பு பாராட்டுவதும் என இருந்தால் நமக்கு கிடைத்த வாழ்வு வரம்தானே!
வாழ்வென்பது ஒவ்வொரு நொடியும் அலுப்பு சலிப்பின்றி மகிழ்ச்சியுடன் வாழ்ந்து முடிப்பதுதான். மனிதனாய் பிறப்பது வரமே. இதனால் எல்லைகள் இன்றி கனவுகள் காண்பதும், அந்த கனவுகளை நிறைவேற்றும் வகையில் உழைப்பதும் என வாழ்வில் ஆனந்தத்திற்கு அளவே இல்லை. வாழ்வென்பது ஒரு கலை. அதனை திறம்பட வாழ்ந்து முடிக்க வேண்டும். பேசும் பேச்சில், உடுத்தும் உடையில், சிரிக்கும் சிரிப்பில், கொண்டாடும் விழாக்களில், உணர்கின்ற உணர்வில் இதனை எளிதாக காணலாம்.
வாழ்வென்பதே வரம்தானே! அறம் சார்ந்த வாழ்க்கை வாழ்ந்து முடிப்போம் இனிதே!