
போராட்டமில்லா வாழ்க்கையில் வெற்றியில்லை, தோல்வி கானாத வாழ்க்கை ருசிப்பதுமில்லை. வாழ்க்கையானது நெல்லிக்காய் போல, பச்சையாய் கடித்து சாப்பிடும்போது லேசாய் புளிப்பதுபோல இருக்கும், அதை மென்று விட்டு கொஞ்சம் தண்ணீா் குடித்தால் தித்திக்கும். அதுபோல இன்பம் துன்பம் நிறைந்ததே வாழ்க்கை. அதை சரியாக கையாள்வதே புத்திசாலித்தனம்.
காலையில் எழுந்ததும் மனைவி முகத்தில் விழியுங்கள். ஹாலில் மாட்டியுள்ள நிலைக்கண்ணாடியில் முகம் பாருங்கள். குடும்ப நபர்களுக்கு வணக்கம் சொல்லுங்கள் நண்பர்களுடன், உறவுகளும் இதில் அடங்கும். இந்த நாள் இனிய நாளாய் அமையட்டும் என பிராா்த்தணையோடு மனதில் எந்தவித எதிா்மறை நினைவுகளும் அசைபோடாதவாறு காபியோ, டீயோ, அருந்துங்கள்.
அதில் மனைவிக்கும் கொஞ்சம் கொடுத்துப்பாா்த்து, நல்ல டேஸ்டா இருக்கே, காபி பொடி பக்குவமா? அல்லது உன் கைப்பக்குவமா ,என பாராட்டத் தயங்கவேண்டாம். வாழ்க்கையில் சூட்சுமமே சின்ன சின்ன சந்தோஷங்களில் தான் நிறைந்து கிடக்கிறது. அப்புறமென்ன வாழ்க்கையின் அன்றைய விளையாட்டில் முதல் பந்தே சிக்சர்தான்.
மனிதனுக்கு நிறைவான வாழ்க்கை எது?
நல்லபெற்றோா்கள், நல்ல மனைவி, நல்ல பிள்ளைகள், ஓகோ என இல்லாது போனாலும் ஓரளவிற்கான வசதி, நல்ல உறவு, நல்ல நட்பு இதுதானே முக்கியம். அப்போது அங்கே அடுத்தவர் வாழ்வு கண்டு பொறாமைப்படும் நிலை வராதே!
அதுதான் அனைவருக்குமான மகிழ்சி. நிகழ்காலதத்தில் நடந்த விஷயங்களையே திரும்பத் திரும்ப அசைபோட வேண்டாம்.
அது கற்றுக்கொடுத்த பாடத்தில்தான் நாம் பாடம் கற்றுக்கொண்டோம். அதனால் அதனை மறந்து எதிா்கால வாழ்க்கைக்கான திட்டமிடுதலில் கவனம் செலுத்துவதே சிறப்பாகும்.
உங்களுக்கான எதிாி உங்களிடமே உள்ளான். அதை விடுத்து புதிய எதிாியை ஏன் தேடவேண்டும்?
ஆடம்பர செலவு, அடுத்தவருக்கான டாம்பீக வாழ்க்கை, பெற்றோா் மற்றும் மனைவி சொல் கேளாமை, நான் எனும் அகங்காரம், கெட்ட எண்ணம், எதிா்மறை சிந்தனை, கூடாநட்பு, சோம்பல் இப்படி அடுக்கலாமே. நமக்கான வாழ்க்கையை நல்ல நெறி முறையோடு தெய்வ நம்பிக்கையோடு உழைப்பின் மேன்மை அறிந்து விடாமுயற்சியோடு வாழலாமே யாா் தடுப்பாா்கள்?
பொதுவாக மன்னிக்கும் மனப்பக்குவம் நமக்கு வரவேண்டும். அது நமது சுய கவுரவம் பாதிக்காத விஷயங்களில்இருப்பது நல்லதே.
அதே நேரம் சொன்னதையே திரும்பத்திரும்ப சொல்லாத மனப்பக்குவமே நமக்கான மருந்து. உறவுகளிடம், நட்புகளிடம் பிாிவிணை பாகுபாடு காட்ட வேண்டாம். நான் அவனுக்கு அதைச்செய்தேன், இதைச்செய்தேன், நன்றி மறந்து விட்டான் துரோகி, நயவஞ்சக்காரன் இப்படி எல்லாம் ஏக வசனம் வேண்டாமே.
"டேக்இட் ஈசி நம்ம பாலிசி". இறைவன் ஒவ்வொடு நிகழ்வுகளையும் பாா்த்து பதிவு செய்து கொண்டேயிருப்பாா். கோபம் வரும்போது சாந்தமாகுங்கள். "சாந்த முலேகா செளக்கியமுலேது"
நம்மையும் மீறி கோபம் வந்தால் இறைவன் நாமாவளியை மனதிற்குள்ளேயே பாராயணம் செய்யுங்கள். அதற்காக முக்கியமாக நியாயமான கோபங்களுக்கு பேசித்தீா்வு காண்பதே சிறப்பாகும்.
அடுத்தவர் வளா்ச்சி கண்டு மகிழ்ச்சியைத் தொிவியுங்கள் அது நல்ல நட்பு, மற்றும் ஆரோக்கியமான சூழலுக்கான அஸ்திவாரமே!
நாம் செய்த உதவிகளுக்கு அங்கீகாரம் தேடவேண்டாம் , யாாிடமும் பெருமைப்பட சொல்லவேண்டாம், நான் இல்லையென்றால் அந்த விஷயமே நடந்திருக்காது என பேசாமல், அமைதிகாப்பதே நமக்கான கூடுதல் பலம்.
ஆக- "அாிஸ்டாட்டில்" என்ற அறிஞர் சொன்னதுபோல "செயல் திறன் பெருகும்போது மகிழ்ச்சி பெருகுகிறது, எனவே அதிகபட்ச மகிழ்ச்சிக்கு ஆசைப்படுங்கள்", என்ற அருமையான தத்துவத்தின் அடிப்படையில் இறைவன் தந்த மகிழ்சியான வாழ்க்கையை சந்தோஷம் குறையாமல் வாழ்ந்து பாருங்கள்.
அப்போது தொியும் இனி எல்லாம் வசந்தமே!