
வெற்றி என்பது எண்ணத்தை பொறுத்து அமைகிறது" - என்பது மாவீரன் நெப்போலியன் வாக்கு ஆகும்.
ஒருவரது வெற்றிக்கு பலர் துணையாக நின்றாலும், அவரது எண்ணங்களும், செயல்களும்தான் அவரின் வெற்றிக்கு பெருமளவில் பக்கபலமாக அமைகிறது. இதனால், ஒருவரது எண்ணங்களையும், செயல்களையும் சீராக்கி, நெறிப்படுத்த இளம்வயதிலேயே பழகிக்கொள்வது அவசியமாகும்.
நல்ல எண்ணங்களை இளம்வயதில் உருவாக்க விரும்புபவர்கள் தங்கள் “வாழ்வின் குறிக்கோள்" (Life Goal) எனப்படும் நோக்கத்தை முதலிலேயே தீர்மானித்துக் கொள்ள வேண்டும். வெற்றியுடன் வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்கு, "வாழ்க்கை முழுவதும் எந்தத் தொழிலில் அல்லது வேலையில் ஈடுபட வேண்டும்?" என்பதைத் தெளிவாக்கிக்கொள்ள வேண்டும்.
சிலருக்கு, "தான் ஒரு வழக்கறிஞராக எதிர்காலத்தில் மாறவேண்டும்" என்ற எண்ணம் இருக்கும். இன்னும்சிலர், தொழிலதிபராக மாற விரும்புவார்கள். வேறுசிலர், ஆசிரியர் தொழிலில் ஈடுபட அதிக விருப்பமுடன் இருப்பார்கள், “எதிர்காலத்தில் கூலி தொழிலாளியாக இருந்தால்போதும்" என்றுகூட சிலர் எண்ணுவது உண்டு.
டாக்டராகி மருத்துவ சேவை புரியவும் சிலருக்கு ஆசை இருக்கும். "விஞ்ஞானியாகி புதிய புதிய கண்டு பிடிப்புகளை கண்டுபிடித்து இந்த சமுதாயத்திற்கு உதவவேண்டும்" என்றும் சிலர் விரும்புவது உண்டு. அரசியல்வாதியாக வலம்வரவும் அதிக ஆர்வம் கொண்டவர்களும் உண்டு, இப்படி - ஏதேனும் ஒரு துறையில் ஈடுபட்டு வெற்றிபெற ஒவ்வொருவருக்கும் ஆசைகள் இருப்பதுண்டு, பொறியியல், மருத்துவம், சட்டம், கம்ப்யூட்டர், வேளாண்மை, உடற்கல்வி ஆடிட்டிங், ஆசிரியர் பணி-போன்ற துறைகளில் எந்தத் துறையை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். ஆனால், ஒரு துறையைத் தேர்ந்தெடுத்தபின்பு அந்தத்துறையில் வெற்றிபெற்று, சிறந்து விளங்குவது எப்படி?" என்பது பற்றிய எண்ணத்தை நாள்தோறும் வளர்த்துக்கொண்டே வரவேண்டும்.
"மூட்டை தூக்குவதை வேலையாகக் கொண்டிருந்தாலும், அந்த வேலையில் சிறந்து விளங்கி சிறந்த மூட்டை தூக்குபவராக மாறுவது எப்படி?" என்பது பற்றி சிந்தித்து தகுதிகளையும், திறமைகளையும் வளர்ப்பதற்கு முயற்சி செய்யவேண்டும். அப்போதுதான், நீங்கள் தேர்ந்தெடுத்தத் துறையில் தெளிவான சிந்தனையையும், சிறப்பான வெற்றியையும் பெறஇயலும்,
வாழ்க்கையில் குறிக்கோளை நிர்ணயித்த பின்புதான் அதனை பற்றிய எண்ணங்கள் அதிகமாகும். "அந்தத் துறையில் வெற்றி பெற வேண்டும்?" என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அந்த துறை சார்ந்த நல்ல மனிதர்களோடு தொடர்பை ஏற்படுத்திக்கொள்வது நல்லது. மேலும், அந்த துறைசார்ந்த நண்பர்களிடம் நீங்கள் தேர்ந்தெடுத்த துறைபற்றி அடிக்கடி கலந்துரையாடி, அந்தத் துறையை பற்றிய அதிக தகவல்களையும் பெற முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
நீங்கள் தேர்ந்தெடுத்த உங்கள் வாழ்க்கையின் குறிக்கோள் அல்லது நோக்கத்தை அடைவதற்குத் தேவையான திறன்கள் (Skills) உங்களிடம் இருக்கிறதா? என்பதையும் மதிப்பீடு செய்துகொள்ள வேண்டும். குறிக்கோளை அடைவதற்குத் தேவையாள திறன்கள் இல்லையென்றால், அந்த திறன்களை பெறுவதற்கான வழிமுறைகளையும் கண்டறிந்து அதனை பெற ஆர்வமுடன் செயல்பட வேண்டும்.
நல்ல நம்பிக்கையோடுகூடிய தன்னம்பிக்கைக் கொண்டவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த துறையில் சாதனை படைக்கிறார்கள். இவர்கள்தான் சோதனைகளை சாதனைகளாக மாற்றும் ஆற்றல் படைத்தவர்களாக இருக்கிறார்கள்.
நீங்கள் தேர்ந்தெடுத்தத் துறையில் முன்னேறியவர் களைப் பார்க்கும்போதெல்லாம் "சாதாரண நிலையிலிருந்த இவர்கள் இப்படி பெரிய அளவில் புகழ்பெற்றுவிட்டார்களே!" -என்று பொறாமைப் படுவதற்குப் பதிலாக, "அவர்களது எந்தெந்த குணங்கள் அல்லது திறன்கள் அவர்களை வெற்றியை நோக்கி நகர வைத்தது?" என்பதைப்பற்றி சிந்திக்க வேண்டும். வெற்றி பெற்ற மனிதர்களுடைய வாழ்க்கையை கூர்ந்து கவனித்தால், அவர்களது செயல்கள் ஒவ்வொன்றும் நமக்குப் பாடங்களாக அமையும். எத்தனை விதமான வெற்றிகளையும், தோல்வி களையும் அவர்கள் சந்தித்திருக்கிறார்கள் என்பதும் தெளிவாகப் புரியும்.