நன்மையும் தீமையும் கலந்ததுதான் மனிதன்: சரியான அணுகுமுறை எது?
அறிமுகமில்லாத ஒருவரை நீங்கள் சந்திக்கிறீர்கள். அவர் சற்று நேரம் உங்களிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டுப் போன பிறகு அவரை எனக்குப் பிடித்திருக்கிறது என்று அபிப்பிராயம் சொல்லுகிறீர்கள்.
அதே சமயம் இன்னொருவர் உங்களோடு பேசிவிட்டுப் போன பிறகு அந்த ஆளை எனக்குப் பிடிக்கவில்லை என்கிறீர்கள். இவரிடமும் நீங்கள் குறுகிய காலமே பழக்கம் என்றாலும் முன்னவரிடம் பிடித்த ஏதோ ஒன்று பின்னவரிடம் உள்ள ஏதோவொன்று
உங்களுக்குப் பிடிக்கவில்லை. அது என்ன என்று கூட உங்களுக்குச் சொல்லத் தெரியாமல் இருக்கலாம். உங்களின் மாறுபட்ட முடிவுகளுக்கு இதுதான் காரணமென்பதை நீங்களும் மறுக்க முடியாது.
இதுதான் ரசனை உணர்ச்சியின் இரகசியம். நீங்கள் சில அடிப்படை வாழ்க்கை நோக்கங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களோடு தொடர்பு கொண்டவர் அந்த நோக்கங்களுக்கு இசைவானவராயிருந்தால் உங்களுக்கு அவரைப் பிடிக்கிறது. இசைவில்லாதவராக இருந்தால் உங்களுக்கு அவரைப் பிடிப்பதில்லை.
இதுதான் விஷயமென்றாலும் மனித உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதில் இது சரியான அணுகுமுறை ஆகாது.
குறைபாடுகள் இல்லாத மனிதர்களே இருக்கமுடியாது. மற்றவர்கள் செய்கின்ற தவறுகள் நம்மைப் பாதிக்காத வரையில் அதைப் பெரிதுபடுத்திப் பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.
அதாவது மற்றவர் குற்றங்களை நாம் பெரிதுபடுத்துவது போல் நம்முடைய குற்றங்களையும் பெரிதுபடுத்திப் பார்த்தால் சகிப்புத்தன்மை வந்துவிடும் என்கிறார் வள்ளுவர்.
நமக்கு உடன்பாடானவை மட்டுமே நல்லது, ஏற்கத்தக்கது என்ற பிரமையிலிருந்து நாம் முதலில் விடுபடவேண்டும். காரணம் இயற்கை யின் அமைப்பே நன்மையும் தீமையும் கலந்ததுதான்.
ஆற்றில் வரும் வெள்ளம் பயிர்த் தொழிலுக்குப் பயன்பட்டாலும் அந்த வெள்ளமே பெருக்கெடுக்கும்போது பயிர்களை அழித்துவிடுகிறது. அதற்காக நாம் வெள்ளத்தை வெறுப்பதில்லை. அதனால் விளையும் நன்மைகளை எண்ணி அது ஏற்படுத்தும் தீமைகளை மறத்து விடுகிறோம். இயற்கைக் கற்றுத்தரும் இன்னொரு பாடம் இது. எந்த மனிதனும் நூற்றுக்கு நூறு நல்லவனுமல்ல, நூற்றுக்கு நூறு கெட்டவனுமல்ல. நன்மையும் தீமையும் கலந்த கலவைதான் இயற்கை. நன்மை தீமை ஆகிய இரண்டு குணாம்சங்களைக் கொண்ட ஒரு கலவைதான் மனிதன். ஆகவே, மனிதனை ரசிக்கும்போது அவனிடமுள்ள குறை பாடுகளையும் படைப்பின் அங்கமாக ஏற்றுக்கொண்டால் சிக்கல்கள் தோன்றாது.
மனித உறவுகள் விட்டுக்கொடுப்பதில்தான் சிறப்பை பெறுகின்றன. ஒரு மனிதனிடமுள்ள நல்லவற்றுக்காக அவனை நாம் நேசிக்கும்போது அவனிடமுள்ள தீயவைகூட நம்மைப் பாதிக்காத நிலையினைப் பெற்றுவிடுவதை நாம் பார்க்கமுடியும்.
குற்றம்பார்க்கின் சுற்றமில்லை என்று சொல்வார்கள். சுற்றம் என்பது உறவுதான். வாழ்க்கையை ரசிக்கத் தெரிந்தவனுக்குக் குற்றங்களைப் பெரிதுபடுத்த நேரமிருக்காது. சிலரால் வெளிச்சத்தைப் பார்க்க முடியும் இருட்டைப் பார்த்தே பழகிவிட்டவர்கள் சிலர். அவர்கள் ஆக்ராவிற்குச் சென்றாலும் தாஜ்மஹாலைப் பார்க்கமாட்டார்கள். அங்குள்ள குப்பைகளையும் சாக்கடைகளையும் மட்டுமேதான் பார்ப்பார்கள்.
ஒரு மலரை ஒரு மலராகத்தான் ரசிக்கவேண்டுமே தவிர தனித் தனி இதழ்களாக ரசிக்க முடியாது. மனிதர் களையும் அப்படித்தான் ரசிக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.

