
கெடுதல் செய்யும் அழுத்தத்தை நல்லது செய்யும் அழுத்தமாய் மாற்றுவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று யூகங்களுக்கு இடமளிக்காமல் இருப்பதுதான். 'ஒருவேளை இப்படியிருந்தால்... அப்படியானால்' என்கிற ஆட்டம் வேண்டாம். 'இருபது வருஷத்துக்கு முன்பே அந்த நிறுவனத்தில் பங்குகள் வாங்கியிருந்தால்... 'கொஞ்ச காலத்துக்கு முன்பானால் அந்த வீட்டை மலிவான விலையில் வாங்கியிருக் கலாமே...' என்று எண்ணமிடுவதில் என்ன இலாபம்? இழந்ததை நினைத்து வருந்துவதால் என்னவாகிவிடப் போகிறது?
"இப்போது நீங்கள் எங்கிருக்கிறீர்களோ இப்போது உங்களிடம் என்ன இருக்கிறதோ அங்கிருந்தே, மகிழ்ச்சியாய் மாற்ற முடியும்"
கடந்தகாலத்தில் எப்படியிருந்தோம் என்பதைவிட தற்போது எந்த நிலையில் இருக்கிறோம் என்பது முக்கியம். உங்கள் தேர்ந்தெடுக்கும் உரிமைகள் (options) பற்றிய கண்ணோட்டத்தில் இது உதவும். விருப்ப நோக்குடன் ஒரு பாதையைத் தேர்ந்தெடுப்பதிலும் ஆதரவாய் இருக்கும்.
"வாழ்க்கையில் எதுவேண்டுமானாலும் தடைபெறட்டும், நீங்கள் வருத்தங்களை மகிழ்ச்சியாய் மாற்ற முடியும்"
கடந்த காலத்தவறுகளையே எண்ணித் தேங்கிக்கிடப்பதை விட இப்போது இருக்கும் நிலையிலிருந்து வாழ்க்கையைத் தொடருங்கள்' போட்டியோ, கடின உழைப்போ, பண வேட்டையோ மனிதனைக் கொன்றுவிடுவதில்லை. தன்னுடைய வாழ்வின் மீதான கட்டுப்பாட்டை இழந்தநிலையில்தான் அவன் அழிகிறான்.
இடைநிலை மேலாளர்கள்தாம் உயர்மட்ட அதிகாரிகளை விட மன அழுத்தத்தில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். உயர் நிலையில் உள்ளவர்கள் பெரும்பாலும் அந்தப்பிரச்னையில் சிக்கிக் கொள்வதில்லை. அவர்கள்தாம், தம் பிரச்னைகளை தங்களைவிட கீழ்மட்டத்தில் உள்ளவர்களிடம் தள்ளிவிட்டு விடுகிறார்களே.
இடைநிலை மேலாளர்களில் பலரும் தங்களைத்தாங்களே வருத்திக் கொண்டிருப்பவர்கள். அவர்கள் இதயம் சார்ந்த பிரச்னைகளுக்குள்ளாகிறார்கள். பாதுகாப்பற்ற உணர்வில் மன அழுத்தம் வந்து துன்புறும் படியாகிறது.
இளைப்பாறுவதும், ஒய்வெடுப்பதும் முழுமையான ஆரோக்கியத்துக்கு அவசியம். இளைப்பாறவோ ஓய்வெடுக்கவோ விடாமல் கவலை உங்களைத் தடுக்கும் என்றால் அப்போது விளையும் தீங்கு இருமடங்காகிவிடும்.
நம்மால் ஒருமுனைப்படக்கூடியதையே நாம் தேர்ந்தெடுக்கிறோம். நம்முடைய எண்ணங்களையும், சக்திகளையும் ஒரு பொழுதுபோக்கு அல்லது மனதுக்கினிய வேடிக்கையில் ஒரு முனைப்படுத்தும்போது, அன்றைய கவலையை மறந்து ஓய்வுகொள்ள முடியும்.
இயற்கையோடு பொருந்திய வாழ்க்கை, நல்ல நூல்களை வாசித்தல், இசை கேட்டல், நேசத்துக்குரியவர்களுடன் பேசி மகிழ்தல் இவை உங்கள் அக்கறைகளை மடைமாற்றி உதவுவதுடன், உங்களைப் போராட்டத்துக்கு உள்ளாக்கியிருக்கும் பிரச்னைகளிலிருந்தும் விடுவிக்கும்.
உங்கள் வேலை உடலுழைப்பு அதிகம் தேவைப்படுகிற வேலை என்றால் நீங்கள் அமைதியும் ஓய்வும் அளிக்கக்கூடிய பொழுதுபோக்குகளை மேற்கொள்ளுங்கள்.
உங்கள் வேவை உட்கார்ந்து செய்கிற (அதிக உடல் உழைப்பு தேவைப்படாத) வேலை என்றால் நீங்கள் சில உடல் சார்ந்த பயிற்சிகளையும் உங்களுடைய பொழுது போக்கில் சேர்த்துக்கொள்வது நல்லது. கோல்ஃப், டென்னிஸ், ஜாகிங் அல்லது நெடுந்தூரம் நடத்தல் இவை மடைமாற்றும் வேலை செய்வதுடன் உடலுக்கும் பயிற்சியளிப்பதாய் இருக்கும்.