
முறையான சிந்தனைகளால் வெற்றிக்கிட்டுகிறது. கண்ணுறங்காக் கவனத்தினால் அது காப்பாற்றப் படுகிறது"- இது ஜேம்ஸ் ஆலன் கூற்று.
ரோமாபுரியை ஆண்ட தத்துவஞானி மார்சஸ் அருலியஸ் விதியையே வென்று காட்டுகின்ற எட்டு வரிகள் கொண்ட ஒரு மந்திர வார்த்தையைச் சொல்லி உலகுக்கு உணர்த்திவிட்டுப் போனதாக ரோமாபுரி சரித்திரம் சொல்லுகிறது. "Our Life is what Our Thoughts Make it" என்ற மந்திரச் சொற்றொடரின் தாக்கம் மேலை நாட்டில் பலரையும் இன்று மகிழ்வாக வைத்திருக்கிறது.
மகிழ்வான எண்ணங்களையே அசைபோட்டுக் கொண்டிருந்தால் உங்கள் வாழ்வும் மகிழ்ச்சியாக இருக்கும்.
துன்பம், சோகம், அச்சம், இயலாமை, இல்லாமை, சுகவீனம் போன்றவைகளிலேயே நமது சிந்தனையும் எண்ணங்களும் வட்டமிட்டுக் கொண்டிருந்தால் இதற்கொப்பத்தான் நம்மை இவை இயக்கும்.
வாழ்க்கை என்பது ஆண்டவனால் வழங்கப்பட்ட அற்புதம். எளிதில் கிடைக்கக் கூடியதல்ல. வாழ்க்கை என்பது வெறும் கனவல்ல. முயற்சியால் முகிழ்வது வாழ்வு எனவேதான் மனிதப்பிறவியை ஆண்டவனிடம் திருவாசகம் வேண்டி நிற்கிறது.
நீண்ட நெடிய நாட்களுக்குப் பிறகு என் நண்பன் ஒருவனை சாலையிலே சந்தித்தேன். எப்படி இருக்கின்றாய்? என்று கேட்டேன். அதற்கு அவன் "ஏதோ இருக்கின்றேன்." என்று சலிப்போடு சொன்னான். நண்பன் மட்டும் இவ்வாறு இல்லை. இன்றைக்கு நம்மில் பலர் இதே பல்லவியைத்தான் தெரிந்தோ தெரியாமலோ சொல்லிக்... கொண்டே திரிகின்றோம்.
வாழ்க்கையோடு ஒட்டாத தன்மை இங்கு அதிகம். மேற்கு நாடுகளில் இதனையே கேட்டால், அவன் பதிலுக்கு நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள்? என்று கேட்பான். இன்னமும் 'வாழ்வே மாயம். எல்லாமே விதியின் விளைவு' என உளுத்துப்போன திண்ணை வேதாந்தத்தை காயத்திரி மந்திரம்போல் ஜெபித்துக்கொண்டே செல்லரித்த சல்லடையாய் சாய்ந்து போகின்றார்கள்.
உங்களைப் பற்றி எப்போதும் உயர்வாகவே கருதிச் செயல்பட வேண்டும். மற்றவரை காணுகின்ற போதும் சரி, பழகுகின்ற போதும் சரி நம்மில் உயர்ந்தவராகக் கருதி பழகிட உங்கள் உள்ளத்தை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு அடிப்படை நமது எண்ணங்கள் சுத்தமாக இருத்தல் வேண்டும்.
எண்ணங்கள் தூய்மை இல்லாது போனால் நாம் எதிர் நோக்குவது அனைத்துமே எதிர்மறையாகத்தான் தெரியும்.
பழுதான எண்ணங்களை உள்ளத்தில் அமர்ந்து திரிந்தால் நீங்கள் உருக்குலைவது உறுதி. உயிர்க்கொல்லி நோயைவிட இந்த நஞ்சான எண்ணங்கள் கொடியது.
நிதானம் இல்லாத சிந்தனை அவசரத்தில் எடுத்த முடிவுகள் கோபத்தில் உணர்ச்சிவசப்பட்டு எதிர்ச்செயல்களை செய்ய தயாராகுதல் போன்றவற்றால் நமது எண்ணங்கள் தடுமாறுகின்றன.
விளைவு உடலும் கெட்டுப்போய் பாதை தவறியதால் பழிக்கும் ஆளாக்கப்படுகின்றோம். எண்ணங்களை வலிமையாக்கி தூய்மையாக்கிக் கொண்டால் நீங்கள் மட்டுமல்ல, இந்த மண்ணுலகத்தையே மகிழ்வாக வைத்துக்காட்ட முடியும். ஒலி, ஒளியைவிட விரைவாக சென்று தாக்குகின்ற சக்தி உயிருள்ளவும் உயிர் அற்றதும் உள்ள அனைத்து பிற நிலைகளிலேயும் நமது எண்ணத்தைச் செலுத்தி இயங்க வைக்க இயலும் .
எனவே, எண்ணத்தை மலிவாக எண்ணாமல் மகிழ்ச்சியாக அசை போடுங்கள்.