
சில பெண்கள் இல்லத்தின் கடமைகளை செவ்வனே செய்து, குடும்பத்தினர் மனதில் குடியிருப்பர். சிலர், கொஞ்சம் விரிந்து உறவுகளிடம் இணக்கமாக பழகி அவர்கள் இதயத்தில் இடம் பிடிப்பர். இன்னும் சிலர், விசேஷங்களுக்கு சென்றாலோ, கூட்டங்களில் கலந்துகொண்டாலோ அந்த இடத்தையே கலகலப்பாக்கி விடுவர். அதேபோல் அலுவலகத்திலும், அனைவரிடமும் அனுசரணையாக நடந்து, தேவைப்படும் உதவிகளை செய்து, உடன் பணிபுரிபவர்களின் நல்லெண்ணத்தைப் பெறுவர். இதுபோல் கொஞ்சம் மெனக்கெட்டால் போதும். எல்லோர் மனசிலும், சிம்மாசனமிட்டு அமரலாம்.
எப்படி..? வாங்க சொல்றேன்.
முதலில் நம்மை உயர்த்திக்காட்டுவது, தோற்றமே… பகட்டான பட்டுப் புடவையானாலும், சிம்பிளான காட்டன் புடவையானாலும் நேர்த்தியாக உடுத்தினாலே போதும். சுத்தமாக, சுருக்கங்களின்றி இருப்பது அவசியம். செல்லும் இடத்திற்கு ஏற்றாற்போல் செலக்ட் செய்யவும்.ஆபரணங்கள் எடுப்பாக இருந்தாலே போதும். உங்களை, மற்றவர்கள் பார்க்கும் பார்வையில் மரியாதை இருக்கும்.
நாம், சந்திக்கிற நபர், சிறியவரோ, பெரியவரோ அவர்களிடம் உள்ள நிறைகளை மனந்திறந்து பாராட்டுங்கள். உங்களை கூடுதலாக நேசிப்பார்கள். பிறரிடம் உள்ள குறைகளை பட்டியலிடாதீர்கள். பிறகு, அவர்கள் உங்களிடம் குறைகளை தேடத் தொடங்கி விடுவார்கள்.
இனிய உளவாக இனிமையே பேசுக என்பதற்கேற்றாற் போல் பேசும் வார்த்தைகளில், இனிமை அவசியம். கண்ணியம் கலந்து, உரையாடும்போது அந்த இடம் கலகலப்பாகும். எதிரில், உள்ளவருக்கு பிடிக்காத நபர்கள் இருக்கலாம். இது யதார்த்தம். அந்த நபரை பற்றி நெகட்டிவாக பேசுவதை தவிர்க்கவும். பாசிட்டிவாக பேசுவதும் வேண்டாமே. அவர்கள் பிரச்னை… அவர்கள் பாடு என ஒதுங்குவது நன்று.
புன்னகையே பொன் நகை என்ற பொன்னான கொள்கையை கை வசம் வைத்திருங்கள். வருத்தமில்லாதவர்கள், பிரச்னையில்லாதவர்கள் இல்லை. சொல்வாங்களே, அவனவனுக்கு ஆயிரம் பிரச்னைன்னு.. கொஞ்சமோ, அதிகமோ உங்கள் கஷ்டங்களை மனசுக்குள்ளே வச்சுக்கிட்டு, புன்சிரிப்போடு மற்றவர்ளை நெருங்கினால், மனநிறைவு இரு பக்கமும் இருக்கும்.
அற்புதமான வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் பொன்னாளே… நம்மாலான சிறு உதவிகளை பிறருக்கு செய்யும்போது, மனசெல்லாம் மலர்ச்சிதான். களைப்பாக வரும் பணிப்பெண்ணுக்கு ஒருநாள் விடுமுறை தரலாம். மாடி வீட்டு ஆன்ட்டி வீட்டில், கேஸ் காலியாகிவிட்டால், புது சிலிண்டர் மாற்றிக் கொடுத்து உதவலாம்.
எதிர் வீட்டு தாத்தா, பாட்டிக்கு மாதம் தோறும் மருந்து, மாத்திரைகள் வாங்கித் தரலாம். அதற்காக மெனக்கிட வேண்டியதில்லையே… உங்கள் சொந்த வேலையாக, வெளியே செல்லும்போது, மெடிக்கல் ஸ்டோரில் சில நிமிடங்கள் செலவழிக்கலாம்தானே.
பண்டிகைக்கு நமக்கு புதுத்துணிகள் எடுக்கும்போது, வருடம் முழுவதும் நமக்காக பணி செய்யும் அயர்ன் பண்ணுபவர், செக்யூரிட்டி, கார்ப்பரேசன் ஊழியர் களுக்கும் புத்தாடை வாங்கித் தரலாம்.
இயலாத பட்சத்தில், பண்டிகைக்கு முன்னரே பட்சணங்கள் கொடுத்து, அவர்களின் பண்டிகை டென்சனைக் குறைக்கலாம். உதவிட நினைத்தால் வழியெங்கும் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கும்.
கொஞ்சம் அக்கறை எடுத்து, படிப்படியாக மத்தவங்களை நெருங்கி, மனசுக்குள் நுழைந்துவிட்டால் போதும். அவங்க, உங்களை கொண்டாடுவாங்க. அதைப் பார்த்து, உங்க குடும்பமும் கொண்டாடும்.