
கற்றுக்கொள்வதை ஒருபோதும் நிறுத்தாதீர்கள். அது ஒரு தொடர்ச்சியான செயல்முறை. ஒரு வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் முடிவடையும் செயல் இல்லை; வாழ்நாள் முழுவதும் தொடரும். கற்றல் மூலம் புதிய திறமைகளை நம்மால் வளர்த்துக்கொள்ள முடியும். அத்துடன் நம்மை மேம்படுத்திக் கொள்ளவும் முடியும். வாழ்க்கை என்பது நமக்கு எப்போதும் கற்பித்துக்கொண்டே இருக்கிறது. கற்றுக்கொள்வது என்பது ஒரு பொழுதும் முடிவடையாது. கற்றுக் கொள்வதற்கு வயது ஒரு தடையே இல்லை.
வாழ்க்கையில் புதிது புதிதாக கற்றுக்கொள்வது நம்மை மகிழ்ச்சியாகவும், புத்துணர்வுடனும் வைத்துக்கொள்ள உதவும். நம்மை மன அழுத்தத்திலிருந்து விடுவிக்க உதவும் சிறந்த கருவி கற்றலே ஆகும். அத்துடன் வாழ்க்கை ஒரு சுவாரஸ்யமான பகுதியாக தோன்றவும் ஆரம்பிக்கும். கற்றல் மூலம் புதிய வாய்ப்புகளை பெற முடியும். அதாவது வேலை வாய்ப்புகள், தொழில் வாய்ப்புகள் மற்றும் பிற வாய்ப்புகளை பெறுவதற்கு கற்பது உதவியாக இருக்கும்.
கற்றல் என்பது நம் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்கும் ஒரு சிறந்த வழியாகும். அதற்கு வயதோ மொழியோ தடை இல்லை. எனவே கற்றுக் கொள்வதை ஒருபோதும் நிறுத்தம் கூடாது. சில ஆய்வுகளின் படி புதிய விஷயங்களை கற்றுக்கொண்டே இருப்பதன் மூலம் மூளை எப்பொழுதும் சுறுசுறுப்புடன் இயங்குமாம்.
இதனால் தேவையற்ற விஷயங்களை அசை போடவோ, வருத்தப்படவோ, துக்கப்படவோ நேரம் இருக்காது. கற்றுக்கொள்வது நம்மை எப்போதும் பிசியாக வைத்துக்கொள்ளும். வாழ்க்கையில் ஒரு பிடிப்பை ஏற்படுத்தும். அத்துடன் மனமும் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கும்.
கற்றல்தான் நம்மை ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்வியை எழுப்பிக்கொண்டே இருக்கும். கேள்விகள்தான் உயிர் உள்ளவர்களின் உயிர் நாடி. ஏன், எப்படி என்று கேள்வி கேட்டு ஆராயும் பொழுது தான் உலகத்தில் நம்மால் சிறந்த மாற்றத்தை உருவாக்க முடியும்.
ஏனென்றால் கேள்வி கேட்பதன் மூலம்தான் பதில்களைப் பெற முடியும். பதில்கள் நம் சந்தேகங்களை தீர்க்க உதவும். சந்தேகங்கள் நீங்கும் பொழுது நமது மூளையின் சக்தி அதிகரித்து புதிய யோசனைகளும், எண்ணங்களும் மனதில் வரும். எனவே கற்பதில் ஒரு பகுதி தான் கேள்வி கேட்பது. கேள்வி கேட்பதை ஒரு போதும் நிறுத்தக்கூடாது.
கற்றல் நிறைய வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறக்கிறது. உதாரணத்துக்கு ஒரு புது மொழியை கற்றுக்கொள்வது மூளைக்கு சிறந்த பயிற்சியைத் தரும். கற்றல் நம்மைப் பற்றி மேலும் அறிய உதவுகிறது. வாழ்க்கையில் தொடர்ந்து கற்றுக்கொள்வது நம்மை சுவாரஸ்யமாக ஆக்குகிறது. புதிதாக ஒன்றை கற்றுக்கொள்ளும் பொழுது நிறைய சறுக்கல்களும் தோல்விகளும் ஏற்படுவது இயல்பானதுதான்.
ஆனால் போதுமான அளவு பயிற்சியும், முயற்சியும் இருந்தால் எளிதில் கற்றுக்கொண்டு அதில் தேர்ந்து விடலாம். கற்றல் என்பது ஒரு பிரச்னைக்கு எளிய தீர்வை கொடுப்பதல்ல; மாறாக ஒரு தீர்வை கண்டுபிடிக்கும் செயல்முறை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
கற்றுக்கொள்வதை ஒரு போதும் நிறுத்தாதீர்கள்!