

வாழ்க்கையில் பேசுவதும், பழகுவதும் கலை. அந்த கலை அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்கள் முன்னே இருப்பவர்கள் அருகம்புல் போன்று மிருதுவாக இருப்பதும், முட்களின் கூர்மையாக இருந்து உங்களை குத்துவதும், நீங்கள் அனைவரிடமும் நடந்து கொள்ளும் விதத்தில் இருக்கிறது.
வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்று, நம் கண் முன்னே நேருக்கு நேர் தேனாக இனிக்க இனிக்க பேசிவிட்டு, பின்னால் எதிர்மறை விளைவுகளை தூண்டும் புறம் பேசும் மனிதர்களை இனம் கண்டு, அவர்களை தவிர்த்துவிடுங்கள்.
வாழ்க்கையில் பிரச்னைகள் வருவது சகஜம். அப்படி ஏற்ப்படும் போது, முளையிலேயே அதனை கிள்ளிவிடுங்கள். அதாவது எங்கே அந்த நிகழ்வு நடக்கிறதோ, அங்கேயே ஒன் டூ ஒன் பேசி தீர்த்துக் கொள்ள முயலுங்கள். இடைத்தரகராக மூன்றாவது நபரை புகுத்தி, இன்னும் அதனை விரிவுபடுத்தி, வலியை ஏற்படுத்திக்காதீர்கள். மாற்றானுக்கு இடம் தருவதை தவிருங்கள்.
ஏனெனில் நீங்கள் ஒருவரை நினைத்தது மாதிரி எல்லாம் அப்படியே இருந்துவிட மாற்றார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அப்படி இருக்கும் மனமே, தனக்கு தானே தீர்த்துக்கொள்ளும் எண்ணம் உண்டாகும். அது உங்களுக்கு நிம்மதியும் தரும்.
வாழ்க்கையில் இல்லாதவர்தானே என்று ஏளனமாக நினைத்து, இவரால் என்ன செய்துவிட முடியும் என்று காழ்ப்புணர்ச்சி கொள்ளாமல், சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பதை புரிந்து கொண்டு, அவர்களை மனிதனாக நினைக்கப் பழகுங்கள். இல்லாதவர்களுக்கு இழப்பதற்கு எதுவுமில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
வாழ்க்கையில் மிக உயர்ந்த குணத்தில் இருப்பவர்களிடம் மதிப்பாக பேசுங்கள், பழகுங்கள். ஏனென்றால் அவர்கள் என்றுமே உங்களை கெட்ட திசையில் கால் ஊன்றவிடமாட்டார்கள்.
அதேபோல் வாழ்க்கையில் குணம் இல்லாமல் அடிமட்டத்தில் இருப்பவர்களிடம் எப்போதும் ஒதுங்கியே இருங்கள். ஏனென்றால் அவர்கள் ஒருபோதும் தன்னிலை மாறவே மாட்டார்கள். உங்களையும் உயரவிடும் எந்த செயலும் செய்ய எத்தனிக்க மாட்டார்கள்.
வாழ்க்கையில் ஐயன் வள்ளுவன் 'குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்" குறளுக்கு ஏற்ப, ஒருவரின் குணங்களையும் குற்றங்களையும் ஆராய்ந்து பார்த்து அவற்றுள் எது மிகையாக இருப்பதை அளவுகோலாகக் கொண்டு, அந்த மிகுதியை வைத்து, ஒருவருடைய தெளிவான முடிவுக்கு வருவது அவசியம்.
வாழ்க்கையில் ஒவ்வொருவருடைய நிலையையும் அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். முதலில் உங்களை இழிவாக நினைப்பவர்கள் மற்றும் பேசுபவர்கள் வாழ்க்கையில் மறந்து விடுங்கள். உங்களிடம் என்றுமே குறை காண்பவர்களிடம் எதையும் பேசி உங்களை தாழ்மைப்படுத்திக் கொள்ளாதீர்கள். இவர்களை நீங்கள் இழந்துவிட்டால், எந்த தவறும் இல்லை.
வாழ்க்கையில் பேசும் போதும், பழகும் போதும் அச்சத்தை தவிர்த்து பாருங்கள். எண்ணத்தில் தெளிவு பிறக்கும். கோபத்தில் மெளனமாக இருக்க பழகுங்கள். மன அழுத்தம் நீங்கும்.
வாழ்க்கையில் பேசும் வார்த்தைகளை அரும்புகள் மலர்வது போல் மிகவும் இதமாகவும், எதிர்மறை விளைவும் செயல்களையும் தவிர்த்து, பழகுவதில் தென்றல் வீசும் காற்றைப்போல் மிருதுவாகவும் வாழ்ந்து காட்டுங்கள். வாழ்க்கை பயணத்தில் தடையின்றி எல்லாமே கிடைக்கும். வெற்றிப்பாதையில் தடம் பதித்து தனித்துவம் வாய்ந்த மனிதராக உயர்த்தும்!