

நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு பார்வையும் தீர்த்தமாக இருக்கட்டும். ஒவ்வொரு சிந்தனையும் தெளிவாக இருக்கட்டும். ஒவ்வொரு செயலும் திறன்மிக்கதாக இருக்கட்டும். எடுத்து வைக்கும் சிறிய சிறிய அடிகளாக இருந்தாலும் இலக்கை எட்டி, சிகரம் தொட்டு சிறப்பாகட்டும்.
வாழ்க்கையில் இடர்ப்பாடுகள் சகஜம். மனம் தளராமல் எடுக்கும் முயற்சியில் தொய்வில்லாமல் செயலாற்றுங்கள். தோல்விகளை சந்தித்து சோர்ந்து போவது சாதனையாளர்களுக்கு அழகல்ல. நாம் சாதிக்க பிறந்தவர்கள் என்று களமாடுவோம். உறுதியான வெற்றியை ஒரு தினம் அடைந்து காட்டுவோம்.
வாழ்க்கையில் சாதிக்கும் எண்ணம் இருக்கும் இடத்தில் நிதானம்தான் அதனை வெற்றிக்கு இட்டுச் செல்லும் அற்புதமான ஆயுதம் என்பதை மறந்து விடாதீர்கள். கோபத்தில் விவேகம் இழந்தால், இருந்த இடத்தில் வீழ்ந்துபோகும் நிதானம் மறக்காதீர்கள்.
வாழ்க்கையில் தளராத எண்ணமும் செயலும் உள்ள மனிதர்களுக்கு இவ்வுலகில் முடியாதது, இயலாதது என்று எதுவும் கிடையாது என்பதை உணர்ந்து பணி ஆற்றுங்கள். நாளைய விடியல் பொழுது நமக்கான ஆரம்பம் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
வாழ்க்கையில் நம்பிக்கை ஒரு அட்சய பாத்திரம் என்று நினைவில் நிறுத்தி, போராடுங்கள். ஏனெனில் வெற்றி இலக்கை அடைவதற்கு, தொடர்ந்து நமக்கு உந்துசக்தியை தந்து கொண்டே இருக்கும். நம்பிக்கை வெற்றியோடு வரும். ஆனால் வெற்றி நம்பிக்கை இருக்கும் இடத்தில் மட்டுமே உறவாடும்.
எந்த ஒருவரும் சுதந்திரமாகவும் சுயமாகவும் சிந்திக்கும் சக்தியும், மன உறுதியும் இருந்தால் மட்டுமே, போட்டி நிறைந்த வாழ்க்கையில், திறமை வலிமை கொண்ட தருணங்களை உருவாக்கி அடியெடுத்து வைத்து முன்னேற்றப பாதையில் நடைப் போட்டு கம்பீரமாக இருக்க முடியும். இல்லையெனில் எதிர்மறை தாக்குதலுக்கு ஆளாக வேண்டி இருக்கும் என்பதை மறவாதீர்கள்.
மண்ணில் இருக்கும் தங்கம் புடம் போடும் போதுதான் அதன் தரம் பிரகாசமான நிலையை எட்டுகிறது. மண்ணில் இருக்கும் வைரம் பட்டை தீட்டிய பிறகுதான் அதன் மதிப்பை பெறுகிறது. இப்படித்தான் மனித வாழ்க்கையும் என்பதை உணருங்கள்.
மனித வாழ்க்கையில் தன்னம்பிக்கை ஆர்வம் இரண்டுடன் சேர்ந்த நேர்மறை எண்ணங்கள், இவைகள்தான் அவர்களை தன்னிலையை, உயர்வாக மாற்றம் காரணிகள். நம் கனவுகளுக்கும், அதனை நிறைவேற்ற முனைப்பு காட்டச் செய்து, வாழ்க்கையை சீரோடும் சிறப்போடும் நடத்துவதற்கு முக்கியமான காரணங்கள் என்பது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை அறிந்து செயல்படுங்கள்.
இயல்பாகவே மனித மனங்களில் தாழ்ப்புணர்ச்சி எனும் களைகள் முளைத்துக் கொண்டேதான் இருக்கும். அதனை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிந்துவிடும் ஆற்றல் கொண்டது நம்பிக்கை. தங்களால் முடியாதது சாத்தியமற்றது என்று தோன்றும் விஷயங்களை ஆராய்ந்து, நம்மால் ஏன் செய்ய முடியாது என்ற கேள்விக்கு ஊக்குவிக்கும் சக்தியும் கொண்டது.
சிற்பியின் எண்ணத்தில் இந்த பெரிய பாரையை நாம் எப்படி சிலை வடிவம் ஆக்குவது என்று பிரமித்து நின்றால், உளி பிடிக்கும் கைகள் வேலை செய்யாது. தன்னால் முடியும், முடித்துக் காட்டுவேன் என்ற நம்பிக்கை உள்ளத்தில் எழுந்தால் தான், அவன் சிலை வடிக்க முடியும். இப்படித்தான் தன் துறைசார்ந்த இடங்களில், மனித சக்தி வென்று காட்டுகிறது. எனவே எதிலும் நம்பிக்கை வைத்தால் வெற்றி நிச்சயம்!