
காற்றாடி பறக்க, காற்று, பட்டம் மற்றும் நூல் தேவை. காற்றாடி பறக்க திறந்தவெளி மற்றும் மிதமான காற்றும் தேவை. அதைப் போலத்தான் நம் வாழ்க்கைக்கும் அறிவு, கல்வி, சரியான பாதை போன்றவைகள் தேவைப் படுகின்றன. எப்படி காற்றாடியை பக்குவமாக பிடித்து மேலே ஏற்றிய பிறகு கயிற்றின் மூலமாக அதை காற்றின் திசைக்கு ஏற்றவாறு திருப்புகிறோமோ அதைப் போலத்தான் நம் வாழக்கையிலும் சரியான பாதையைத் தேர்ந்தெடுத்து சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு நம்மை அமைத்து கொள்ள வேண்டும். வாழ்க்கை மற்றும் காற்றாடி இரண்டிற்கும் தேவையான பொதுவான குறிப்புகளை இப்போது பார்க்கலாம்.
1. ஒரு நல்ல காற்றாடி செய்ய, தரமான காகிதம், பனை ஓலை அல்லது துணி போன்ற பொருட்கள் தேவை. அதை இணைப்பதற்கு ஒரு குச்சியோ அல்லது நல்ல பிரேமோ தேவைப்படும். மற்றும் நல்ல தரமான திடமான நூலும் தேவை.
இதைப் போலவே வாழ்க்கைக்கும் முதலில் ஒழுக்கம், கட்டுப்பாடு, கண்ணியம், ஆர்வம் போன்ற குணங்கள் தேவை. இந்த குணத்தோடு இணைந்து தமக்கென்று ஒரு கல்வி துறையை தேர்ந்தெடுக்க வேண்டும். மற்றும் நம்மை செயல்படுத்த ஒரு நல்ல தோழனும் தேவை.
2. காற்றாடி பறக்க, திறந்தவெளி, காற்று வீசும் இடம் அவசியம். கட்டிடங்கள், மரங்கள் மற்றும் பிற தடைகளிலிருந்து விலகி இருக்க. வேண்டும். நம்முடைய வாழ்க்கையிலும் நாம் சரியான பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும். கெட்ட வழி பாதையிலிருந்து விலகி இருப்பது நல்லது.
3. காற்றாடி பறக்க, போதுமான காற்று வீசவேண்டும். காற்று இல்லாதபோது, காற்றாடியை மெதுவாக முன்னோக்கி இழுத்துவிடவும்.
காற்றாடிக்கு காற்று எப்படி முக்கியமோ அதைப்போல நம்முடைய வாழ்க்கைக்கும் பொருளாதாரம் மிக மிக அவசியம். நம்மிடம் பொருளாதாரத்தின் நிலை எப்போது குறைவாக இருக்குமோ அப்போது யோசித்து தான் பணத்தை செலவு செய்ய வேண்டும்.
4.சரத்தை கையில் பிடித்தால்தான், காற்றாடியை கட்டுப்படுத்த முடியும். நாமும் நம் வாழ்க்கையில் மனதை நம் கட்டுக்குள் வைத்தால்தான் தீய எண்ணத்தையும் கெட்ட வழக்கங்களையும் கட்டுபடுத்த முடியும்.
காற்றாடிக்கு கூறிய குறிப்புகளை கையாண்டால்தான் காற்றாடி கிழியாமலும் சேதமடையாமலும் எங்கேயும் மாட்டி கொள்ளாமலும் இருக்கும். நமக்கும் அதேதாங்க...மேற்கூறிய குறிப்புகளை கையாளா விட்டால் நாமும் முன்னேற முடியாமல் மாட்டிக்கொண்டு திண்டாடுவோம். கெட்டவர்களோடு இணைந்தால் சீரழிந்து விடுவோம்.
ஆகவே நல்லொழுக்கத்தோடு நற்பண்போடு நல்ல குணங்களை உருவாக்கிக்கொண்டு, நமக்கு முடியும் என்று நம் மனதில் தோன்றுகின்ற கல்வியை தேர்ந்தெடுத்து சரியான முறையில் பயின்று நேரான பாதையில் நல்ல நண்பர்களின் பிணைப்போடு நடந்தால் வெற்றி நிச்சயம்.
சரியான பாதையில் சரியான நோக்கத்தோடு சென்று வளமான வாழக்கையை வாழ்வோம்!