

உங்கள் சிந்தனைகளையும் எண்ணங்களையும் நீங்களே மனதார ஊக்கப்படுத்திக் கொள்ளுங்கள். அப்போதுதான் உங்கள் வாழ்க்கையில் தடங்கள் ஏற்படாமல், உற்சாகத்தை உங்களுக்குள் ஏற்ப்படுத்தும். சிறிய ஊக்கம் கிடைத்தாலும், மனநிறைவை காணுங்கள். அந்த எண்ணம் வந்தால்தான், நிறைய சாதிக்க வேண்டும் என்ற உந்துதலும், எழுச்சியும், மகிழ்ச்சியும் உங்களிடையே உண்டாகும்.
கடிகார முட்கள் போல், முன்னே செல்லுங்கள். காலம் உங்கள் பின்னே வரும். சாதனைகள் படைக்க, ஆயிரம் வழிகள் திறந்தே உள்ளன. நீங்கள் அதன் உள்ளே சென்று, களமாடி முன்னேறுங்கள். உட்கார்ந்த இடத்தில் ஆர்டர் பண்ணினால், எல்லோமே உங்கள் காலடியில் வந்து சேரும். ஆனால், காலத்தையும் நேரத்தையும் சரியாக பயன்படுத்தி, வியர்வை சிந்தி உழைத்தால்தான், நீங்கள் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வரமுடியும் என்பதை உணர்ந்து, செயல் ஆற்றுங்கள்.
காலம் எவருக்காவும் காத்திருக்காது என்பது போல், நீங்களும், நல்ல காலம் உங்களை தேடிவரும் என்று, கால விரயம் செய்து, அதற்காக காத்திருக்காமல், மழைத்துளிகள் மண்ணுக்கு முக்கியம் என்பது போல், மணித்துளிகள் உங்களுக்கு மிகவும் முக்கியமானது என்பதை மனதில் நிலை நிறுத்தி பாடுபடுங்கள்.
பூமிக்குள் விதைக்கும் விதை, உறங்கிவிடாமல், முயற்சி செய்கிறது. அதற்கு தொடக்கமே போராட்டம்தான். முட்டிமோதி, வெளிவந்து, தன் வாழ்க்கையை துளிர்விடச்செய்து, விருட்சமாக மாறுகிறது. உங்களைப் பெற்று, வளர்த்து ஆளாக்க, பெற்றவர்கள் கரங்கள் பாதுகாத்து, உங்களை, உலகிற்கு அறிமுகம் செய்து வைக்கிறது என்பதை உணருங்கள்.
அவர்கள் கடமையை செய்து, நீங்கள் வாழ்க்கை பாடம் படிக்க, தயார் செய்திருக்கிறார்கள். இனி, உங்கள் கரங்கள் ஊன்றி, எதிர்கால முன்னேற்றத்திற்கு, மாற்றத்திற்கு உங்களால் மட்டும் தான் முடியும் என்பதை உணர்ந்து, பொறுப்புடன் செயலாற்றுங்கள்.
சொல்லறம் காத்து பேசப்பழகுங்கள். தீர்க்கமான பார்வையில், முடிவுகளை எடுங்கள் மெய்ப்பொருள் கண்டு, செயலாற்றுங்கள். தோல்விகளை சந்தித்தால், துவண்டு போகாதீர்கள், உங்கள் லட்சியங்கள் உயர்வாகவும், உன்னதமாகவும் இருக்கட்டும். ஆலமர விழுதுகளாக, கடமைகளையும், கண்ணியத்தையும் பற்றிக் கொண்டு, வாழ்க்கை பாதைக்கு அச்சாரம் போட்டு, எதிர்மறை வரவுகளைக் களைந்து, நேர்மறை நீரோட்டம் பாச்சி, தடைகளை தகர்த்து, தடங்கள் பதித்து, எதிர்கால வாழ்க்கைக்கு வித்திடுங்ங்கள். இடை இடையே வினை செய்பவர்களை, எச்சரிக்கையுடன் தங்கள் கூர்முனை புத்தியுடன் புறம் தள்ளி, புடம் போட்ட தங்கமாக மாறுங்கள்.
நிலத்தடி நீர் போல், ஆழ் மனதில், நல்ல நிகழ்வுகளை பதியம் போட்டு, தேவைப்படும்போது, அறுவடை செய்யுங்கள். ஆற்று மணல் போல், மனதை மிருதுவாக வையுங்கள். அப்போதுதான் கெட்டவைகள் நீங்கி, நல்ல எண்ணங்கள் நிலைக்கும் என்று உணருங்கள்.
பூமி சுற்றுவது அதன் நிலைக்கானது, உங்கள் வாழ்க்கையில் அதுவே அச்சாணி போன்றது. உலகம் பன்மடங்கு அறிவியல் முன்னேற்றம் அடைந்து, மாற்றங்களை விதைத்துக் கொண்ட இருக்கிறது. நீங்களும் அதனோடு ஒன்றி வாழப் பழகி முன்னேறுங்கள்.
காலத்தே பயிரிடும் விதைகளுக்கு வீரியம் அதிகம் உண்டு. அதற்கு ஏற்றாற்போல் பருவநிலை இருக்கும். அதேபோல்தான் வாழ்க்கை பிண்ணனியும் என்பதை, மனம் பதிந்து, தடம் பதித்து முன்னேற்றம் கண்டு, வெற்றி நடை போடுங்கள்.