
பொறுமை என்பது ஒரு செயலை துணிந்து செய்யவோ அல்லது சூழ்நிலைகளை சமாளிக்கவோ, கோபப்படாத நிலையில் அமைதியாய் இருப்பதை குறிக்கும். இது ஒரு நல்ல மனநிலை. இது வாழ்வில் பல நன்மைகளை பெற்றுத் தரும். பொறுமையாக இருப்பது மனநலத்தையும் உடல் நலத்தையும் காக்கும். எதிர்மறை எண்ணங்களை கட்டுப்படுத்தி மனதை அமைதியுடன் வைத்திருக்க உதவும். "பொறுமை கடலினும் பெரிது" என்பது வள்ளுவர் கூற்று.
பொறுமையாக இருப்பது என்பது மிகச்சிறந்த கொடையாகும். இந்த குணம் உடையவர்களை அனைவரும் விரும்புவார்கள். கோபம் மற்றும் பொறாமை மனிதர்களுக்கு முதல் எதிரி. நாம் எதிர்பார்த்தது எதிர்பார்த்த நேரத்தில், எதிர்பார்த்த வகையில் நடைபெறாவிட்டால் ஆத்திரப்படுகிறோம்;
பொறுமை இழக்கிறோம். நம்மை ஒருவர் அவமதித்தாலோ அல்லது தீமை செய்தாலோ பொறுமை இழந்து அவர்களுக்கு தீமை செய்யத்துடிக்கிறோம். பொறுமை உள்ளவர்கள் கடினமான சூழ்நிலைகளிலும், பிரச்னைகள் ஏற்படும் பொழுதும் அமைதி காத்து பொறுமையாக பிரச்னைகளை சமாளிப்பார்கள்.
பொறையுடைமை என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் பொறுமையின் சிறப்பையும், பொறுமையோடு இருப்பதினால் வரும் நன்மைகளையும் குறிப்பிடுகிறார்.
'அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல தம்மை இகழ்வாரை பொறுத்தல் தலை' - தம்மை அகழ்வாரையும் வீழ்ந்து விடாமல் நிலம் காப்பாற்றுகிறது. அதுபோல் தம்மை அவமதித்து இகழ்வாரையும் பொறுத்துக் கொள்ளுதல் மிகச்சிறந்த பண்பு என்று பொறுமையின் பெருமையை போற்றுகிறார்.
பொறுமை என்பது துன்பம் ஏற்படும் பொழுது உணர்ச்சிவசப்படாமல், கோபம் கொள்ளாமல் இருக்கும் மனநிலையாகும். மற்றவர் இகழும் பொழுதும், தாமதங்கள் ஏற்படும் பொழுதும், பிரச்சனைகள் உருவாகும் பொழுதும், தொடர்ந்து துன்பங்கள் வரும்போதும் என எந்தவிதமான அசாதாரண சூழ்நிலைகளிலும் பொறுமை காத்து அமைதியாக இருக்கும் குணம் பெற்றவர்கள் என்றும் பாராட்டுக்குரியவர்கள்.
எதிலும் அவசரப்படாமல் பொறுமை காப்பவர்கள் வாழ்வில் பல நன்மைகளைப்பெற முடியும். பொறுமை என்பது ஒருவரின் வாழ்வில் வெற்றியைப்பெற உதவும் ஒரு முக்கியமான பண்பாகும்.
பொறுமைதான் வெற்றிக்கான திறவுகோல். பொறுமையாக இருக்கவும், சரியான நேரத்திற்காக காத்திருக்கவும் நமக்கு சிறுவயதில் இருந்தே கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. நாம் மிகவும் விரும்பும் ஒன்றிற்காக காத்திருக்க வேண்டிய பல சந்தர்ப்பங்கள் உள்ளன. அது ஒரு உறவாகவோ, தொழிலாகவோ அல்லது நம்முடைய வாழ்க்கையின் வேறு எந்த முக்கியமான அம்சமாகவோ இருக்கலாம்.
நாம் விரும்பும் ஒன்றை மிக எளிதாகப்பெற முடிந்தால் அதன் அருமை தெரியாமல் போய்விடும். பொறுமையாக இருப்பது என்பது எதையும் கையாளக் கூடிய திறமையை பெற்றுத்தரும். பொறுமை என்பது ஒரு திறமை. அதனை மற்ற திறமைகளை வளர்த்துக் கொள்வது போலவே இதையும் வளர்த்துக்கொள்ள முடியும்.
வாழ்க்கை என்பது ஏற்றத்தாழ்வுகள் நிறைந்தது. எல்லா நேரங்களிலும் நாம் நினைத்தபடியே விஷயங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. பொறுமையாக காத்திருக்க மகிழ்ச்சியான தருணங்கள் நம்மைத்தேடி வரும். 'பொறுத்தார் பூமி ஆள்வார்'.
பொறுமை தெளிவை கண்டறியவும், கட்டுப்பாட்டை மீட்டெடுக்கவும், எதிர்மறையிலிருந்து விடுபடவும், உள்நோக்கி கவனம் செலுத்தவும் போதுமான வாய்ப்பை வழங்குவதன் மூலம் நமக்கான சுய விழிப்புணர்வை உருவாக்கவும் அனுமதிக்கிறது. வாழ்வில் வெற்றிபெற ஒழுக்கத்துடன் பொறுமையும் அவசியம்.