

வாழ்க்கையில் அமைதியாக இருப்பது மிகவும் கஷ்டம் என்பது உண்மை. ஆனால் அதனை மாற்றி அமைத்து, வாழ்ந்து காட்டுவது எப்படி என்று யோசிப்போம்.
வாழ்க்கையில் முதலில் நாம் மன அமைதி மற்றும் மன அழுத்தமின்மை இரண்டையும் பாதுகாக்க வேண்டும். ஏனென்றால், கூடியமான வரை உங்கள் சொந்த வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். மற்றவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைத்து விடாதீர்கள்.
வாழ்க்கையில் அவ்வப்போது சிற்சில தொடர் கஷ்டங்கள் வரலாம். அதனை நம்பிக்கையுடன் சந்தியுங்கள். அது தரும் மகிழ்ச்சியில், நம்மை தொடரும் கவலைகள் கூர் முனை மழுங்கி மறைந்து போகும். மன அழுத்தம் வீழ்ந்து, மனஅமைதி எழுந்து நம்மை சிறப்பிக்கும்.
நீங்கள் பாதையில் நடந்து செல்லும்போது, செருப்புகள் சிக்கி விடும் கல்லை எப்படி நிதானமாக நின்று, அதனை அப்புறப்படுத்திவிட்டு, மேற்கொண்டு நடக்கத் தொடங்குவதுபோல், நம்மை உறுத்திக்கொண்டே இருக்கும் கவலைகளையும் மனச் சிறையில் இருந்து அகற்றிவிட்டு, வாழ்க்கையை முன்னேற்றப் பாதையில் பயணிக்க முற்ப்படுங்கள்.
வாழ்க்கையில் இம்மி அளவுக்கு நீங்கள் கவலைக்கு ஒரு இடம் கொடுத்தாலும், அது மலை அளவுக்கு உங்கள் மன அமைதியை வீழ்த்தி, உங்களை கவலைக்கிடமாக்கி விடும் அபாயம் உள்ளது. ஆகவே, கவலை என்னும் ஆட்கொல்லி நோயை அகத்தில் பரவ விடாதீர்கள்.
வாழ்க்கையில் ஒவ்வொரு விடியலும் நமக்கான தளம் என்று நினைத்து, இன்றைய பொழுது நல்லதே நடக்கும் என்று நேர்மறை எண்ணங்களின் சிந்தனையை விதையுங்கள். அது உங்களை பன்மடங்கு வலிமை கொண்டவராக மாற்றும். சிந்திக்கும் சிந்தனை சீராக இருந்தால், வாழ்க்கையில் எல்லாமே நல்லதாக நடக்கும்.
வாழ்க்கையில் உங்களுக்கு அமைதி தேவைப்படின், யாரெல்லாம் உங்கள் மனதில் நிறைந்து இருக்கிறார்களோ அவர்களிடம், சற்று நேரம் கலந்து பேசுங்கள். அப்போது உங்கள் எண்ணங்கள் தூய்மை மனதோடு இருக்க உதவுவதாக இருக்கும். அந்த நேரத்தில் தேவை இல்லாதவர்களிடம் செல்வதை தவிர்க்கவும்.
வாழ்க்கையில் அமைதி என்னும் அரும்பை நம் மனதில் பூக்கச் செய்வது, நமக்குள் இருக்கும் சகிப்புத்தன்மை மட்டுமே. நமக்குள் இருக்கும் அமைதிக்கு, எதிர்வினை ஆற்றுவது நம்மிடையே இருக்கும் பகை உணர்வே. ஆகவே ஒவ்வொருவரும் சகிப்புத்தன்மை போற்றி, அமைதியை நமக்குள் வாசம் செய்ய வைப்போம். பகைமை என்னாலும் மறந்து வாழ்வோம்.
வாழ்க்கையில் அமைதியாக இருக்க, பல நல்ல புத்தகங்களை படியுங்கள். சமயம் கிடைத்தால் வாரம் ஒரு முறை தியானம் செய்யுங்கள். முடிந்தவரை இறை நம்பிக்கை நாடுங்கள். இவை அனைத்தும் உங்களுக்கு பல நல்ல பதிவுகளை மனதில் ஏற்றும்.
வாழ்க்கையில் அமைதியை வற்றாமல் தருவது சுய கட்டுப்பாடு. எக்காரணம் கொண்டும் அதனை இழந்து விடாதீர்கள். தேவையில்லாத ஆசை தவிருங்கள். கொப்பளித்து வரும் கோபத்தை அடக்குங்கள். பொதுவாக எதிர்மறை தோன்றும் எண்ணங்களை களைந்து, நேர்மறை எண்ணங்களை மனதில் பதித்து, உணர்வுகளை கட்டுப்படுத்தும் இடத்தில் அமைதி நிலைத்து நிலவும்.
அமைதி சூடும் வாழ்க்கையில் உடல் ஆரோக்கியம் கிடைக்கும். ஆழ்ந்த சிந்தனை செய்து, வெற்றிக்கான பாதையை வகுத்துக் கொடுக்கும். அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு அடித்தளம் இடும். இவைகளை உங்கள் வாழ்க்கையில் சூடி, அமைதி கூடி வாழுங்கள்!