

மனித வாழ்வில் நாம் அனுதினமும் கடைபிடிக்க வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. அதில் நோ்மறை மற்றும் எதிா்மறை என இருவகைகள் உண்டு. உதாரணமாக அன்றாட வாழ்வில் பதவி, துன்பம், இன்பம், கோபம், செல்வம், ஏழ்மை, தோல்வி, இவைகளை பல்வேறு நிலைகளில் உள்ளடக்கியதே வாழ்க்கை.
அதன் வகையில் நாம் கடைபிடிக்கவேண்டிய பல விஷயங்களில் சில வகைகளை கடைபிடித்து, வடம் பிடித்து வாழ்க்கைத்தேரை இழுக்கவேண்டும்.
பொதுவாக இசை, அது ஏழு ஸ்வரங்களை உள்ளடக்கியது. (சப்த ஸ்வரங்கள்) ஸ, ரி, க,ம, ப, த, நி. மனித வாழ்வின் உணர்வுகளே ஸ்வரங்கள் முலம் பாடலாகிறது. அந்த ஏழும், சட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்பனவாகும். மனித வாழ்வில் அவரவர் மனங்களின் எண்ணங்கள், கேள்விகள், சந்தோஷங்கள், துன்பங்கள், இவையாவும் ஏழு ஸ்வரங்கள் போலவே சுழல்கிறது.
அதேபோல வாரங்கள், அதாவது கிழமைகள், ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இதனில் ஒவ்வொரு கிழமைக்கும் பலராலும் பலவித எண்ணப் பறிமாற்றம் கடைபிடிக்கப்படுகிறது. அதாவது சனி நீராடு, செவ்வாயோ வெறுவாயோ, பொன் அகப்பட்டாலும் புதன் அகப்படாது, என வரிசையாக சொல்வதும் நடைமுறை.
அதேபோல ஏழு கன்னிகைகள் (சப்த மாதர்கள்) பிராம்மி, மகேஷ்வரி, கெளமாாி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, மற்றும் சாமுண்டி, இவர்கள் அன்னை பராசக்தியின் அம்சங்களாகும். இவர்கள் அரக்கர்களை அழிக்க தோன்றியவர்கள். அதேபோல ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்வில் ஒவ்வொரு நிலையிலும் பின் வரும் ஏழு விஷயங்களை கடைபிடித்து வாழ்வதே மேன்மையானது.
பதவி வரும்போது பணிவை கடைபிடியுங்கள். மனிதனுக்கு பதவி, புகழ் வரும்போது கூடவே பணிவும் வரவேண்டும் அப்படி வந்தால் அனைத்தும் தொடர்ந்துவரும்.
துன்பத்திலும் அச்சம் தவிா்த்தல்.
பொதுவாக வாழ்வில் இன்பம் வரும்போது பயம் வருவது கிடையாது. அதேபோல துன்பம் வரும்போது அதை எதிா்கொள்ள துணிச்சல் வரவேண்டும், அதுவே பொிய கவசமாகும்.
கோபத்தில்கடைபிடிக்கும் நிதானம்.
அதாவது கோபம் வரலாம், அது தன் எல்லையை மீறக்கூடாது, நம்மையும் மீறி கோபம் வரும் நிலையில் நாம் நிதானத்தை கடைபிடிப்பதே நல்ல விஷயமாகும்.
செல்வம் வரும்போது எளிமை.
நமது விடாமுயற்சி, உழைப்பு, இவைகளால் வசதி வரும்போது, ஆடம்பரம், படாடோபம் தவிா்த்து எளிமையை கடைபிடிப்பதே நல்லது.
ஏழ்மை வறுமையில் நோ்மையே நல்லது.
மனிதனது வாழ்வில் ஏற்ற இறக்கம் வருவது சகஜம், இந்நிலையில் ஏழ்மை எட்டிப்பாா்க்கும்போது நாம் நமது நோ்மையை அவசியம் கடைபிடிப்பதே நல்லதாகும்.
தோல்வியிலும் விடாமுயற்சி.
வாழ்வில் வெற்றி தோல்வி வருவது சகஜம்,அந்த நேரம் தோல்விகண்டு துவளவே கூடாது. அப்போது விடாமுயற்சியே விஸ்வரூப வெற்றியைத்தருமல்லவா?
வறுமையிலும் உதவி செய்தல்.
வாழ்க்கையில் வறுமையும், வசதியும், மாறி மாறி வரும் அந்த நேரம் வறுமை வரும் நிலையில் நமது மனதில் உள்ள பரோபகராக எண்ணத்தை கைவிடவே கூடாது. இப்படி பல்வேறு உதாரணங்களை வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களாக கூறலாம்.
இருப்பினும் மேற்குறிப்பிட்ட ஏழு தன்மைகளையும் கடைபிடித்து வாழ்வதே சாலச்சிறந்த ஒன்றாகும்!