
ஒருவரின் மனநிலையை மாற்றுவதன் மூலம் தனிப்பட்ட வளர்ச்சிக்கும், மேம்பட்ட உறவுகளுக்கும், நிறைவான வாழ்க்கைக்கும் வழிவகுக்கும். அதற்கு உதவும் ஆறு வகையான உத்திகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. குறைவான எதிர்வினையாற்றுதல்;
எந்த ஒரு செயலுக்கும் சொல்லுக்கும் உடனடியாக எதிர்வினை ஆற்றாமல் சற்றே பொறுத்து அதற்கு ரியாக்ட் செய்ய வேண்டும். உணர்ச்சி ரீதியான எதிர்வினை ஆற்றும்போது அது இரு தரப்பினரிடையே ஆத்திரத்தையும் அதிகரிக்கும். உடனடியாக ரியாக் செய்யாமல் அமைதியாக ஒருவர் தனது உணர்ச்சிகளைக் கவனிப்பதன் மூலம் ஆரோக்கியமான வழியில் பதிலளிக்க முடியும். இது அமைதியான மற்றும் தெளிவான மனநிலைக்கும் வழிவகுக்கும். குறைவாக எதிர்வினை ஆற்றும்போது பொறுமையை வளர்க்கிறது.
2. உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள், மற்றவர்களை அல்ல;
ஒருவர் தன்னுடைய எண்ணங்கள், நடத்தைகள் மற்றும் எதிர் வினைகளை கட்டுப்படுத்த வேண்டும் இதில் கவனம் செலுத்தும்போது அது உணர்ச்சி நல்வாழ்வை மேம்படுத்தும். ஒருவர் பிறரைக் கட்டுப்படுத்த முடியாது என்பதை புரிந்து கொள்ளும்போது விரக்தியை குறைக்க உதவுகிறது. மன அழுத்தமும் குறையும். சுயமுன்னேற்றம் மற்றும் சுய பாதுகாப்பு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த உதவுகிறது. ஒருவர் தனது செயல்கள் மற்றும் உணர்ச்சிகளில் கவனம் செலுத்துவதன் மூலம் சிறந்த உறவு மேலாண்மை மற்றும் நட்பு மேலாண்மையை கடைபிடிக்க முடியும். பிறருடைய நடவடிக்கைகளால் குறைவாக பாதிக்கப்படலாம். ஆரோக்கியமான தொடர்புகளுக்கும் அதிகமான தெளிவுக்கும் வழி வகுக்கும்.
3. எதையும் எதிர்பாராமல் இருத்தல்;
எப்போதும் எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொண்டால் ஏமாற்றமும் குறைவாக இருக்கும். இந்த அணுகுமுறை உறவு மற்றும் வாழ்க்கை நிகழ்வுகளுக்கு ஆரோக்கியமான அணுகுமுறைக்கு வழி வகுக்கிறது.
சூழ்நிலையை அப்படியே எதிர்கொண்டு எதையும் எதிர்பாராமல் இருக்கும்போது அமைதி கிட்டும். தற்போதைய தருணத்தில் கவனம் செலுத்த முடியும். இதனால் ஒருவர் தன்னுடைய நன்றிய உணர்வையும் வளர்த்துக் கொள்ள முடியும். இந்த மாற்றம் வாழ்க்கை அனுபவங்களை வளப்படுத்துகிறது. ஒட்டுமொத்த மகிழ்ச்சியை மேம்படுத்துகிறது.
4. முடிந்ததைச் செய்தல்;
எந்த ஒரு செயலிலும் பரிபூரணத்துவத்தை அடைய நினைப்பதை விட செய்ய முடிந்ததை செய்வது முக்கியமென்ற கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளவேண்டும். இது தோல்வி பயத்தைப் போக்க உதவுவதோடு, கற்றல் மற்றும் முன்னேற்றத்தை வலியுறுத்துகிறது. பிறருடைய ஒப்புதலை எதிர்பார்க்கக் கூடாது. தன்னால் முடிந்ததை ஒருவர் செய்யும்போது அது உள்ளார்ந்த உந்துதலுக்கு வழிவகுக்கிறது.
5. பிறரிடம் எல்லாவற்றையும் சொல்வதை நிறுத்துங்கள்
எல்லா விஷயத்தையும் பிறரிடம் பகிர்வதை நிறுத்த வேண்டும். எதைச் சொல்ல வேண்டுமோ அதை மட்டுமே சொல்ல வேண்டும். பெரும்பாலும் ஒருவருடைய வெற்றியில் எல்லோருமே மகிழ்ச்சி அடைவதில்லை. சிலர் மிக ரகசியமாக நீங்கள் தோல்வியுற வேண்டுமென்றும் விரும்புவார்கள்.
பிறர் உங்களைப் பற்றி அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. தனி உரிமையை பாதுகாப்பது மிகவும் முக்கியம். இது தனிப்பட்ட பலத்தை மேம்படுத்த உதவும். சில எண்ணங்களையும் உணர்வுகளையும் ஒருவர் தனக்குத் தானே வைத்துக் கொள்ளும் போது அது சுயப் பரிசோதனையை ஊக்குவிக்கிறது.
6. நண்பர்களை புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுத்தல்;
பொதுவாக ஒருவரை சுற்றி உள்ள நபர்கள் அவருடைய மனநிலையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள். நேர்மறையான ஆதரவான நண்பர்கள் வளர்ச்சி, நம்பிக்கை மற்றும் முன்னேற்றத்தை ஊக்குவிக்கிறார்கள். அதேபோல எதிர்மறைத் தாக்கங்கள் சந்தேகத்தை உருவாக்கும்.
சவால்களை சமாளிக்க தேவையான ஊக்கத்தை அளிக்கவும் ஆதரவான நட்புகள் தேவைப்படுகின்றன. நட்பில் விவேகத்துடன் இருப்பது ஆரோக்கியமான எல்லைகளை ஏற்படுத்த உதவுகிறது. இது அமைதியான மனநிலையை ஆதரிக்கிறது. இந்த ஆறு உத்திகளை பயன்படுத்தும் போது மனநிலையில் ஆழமான மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.