
சுயசிந்தனையைச் சுதந்திரமாகச் செயல்படுத்துகின்ற போது, நமது ஆற்றல் எல்லையற்றதாகி விடுகிறது. மனத்தால் சிந்திக்கின்றபோது, கட்டுப்பாடுகள் இல்லாத சிந்தனை வானில் நாம் பறக்கத் தொடங்கிவிடுகிறோம்.
பழைய எண்ணங்களால் பாதிக்கப்படாத புதிய ஆகாயத்தைச் சிந்திக்கத் தொடங்குகிறோம். இதுவரை ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷயங்களிலிருந்து விடுபட்டு, வாழ்க்கையைப் பற்றி புதிய கண்ணோட்டத்தைப் பெறுகிறோம்.
உன்னையே நீ அறிவாய்!' என்றார் கிரேக்க தத்துவமேதை சாக்ரடீஸ். நம்மை நாமே அறியாத காரணத்தால், நம்முடைய இயற்கைத் தன்மையினை நாம் முற்றிலும் இழந்துவிட்டோம்.
பிணி மூப்பு, சாக்காடு ஆகியவை வாழ்க்கையின் பிரிக்க முடியாத அம்சங்களாகிவிட்டன. இயற்கையில் மாற்றம்தான் நிகழமுடியுமே தவிர அழிவு ஏற்படுவ தில்லை. என்கிறார் விஞ்ஞானி லவாய்ஷியர். இதன் அர்த்தம் இதுதான். மெழுகுவர்த்தி எரிகின்றபோது, அதன் ஒரு பகுதி வெளிச்ச சக்தியாகவும், இன்னொரு பகுதி கரியாகவும் மாற்றம் பெறுகின்றது. இது மாற்றமே தவிர அழிவு அல்ல.
மனிதனைப் பொறுத்தவரையில் அவன் படைப்பின் சிகரமாகக் கருதப்படுகிறான். மற்ற பிராணிகளைவிட அவனுடைய உடல் அமைப்பு உன்னதமாக அமைந்திருப்பதோடு மனம் என்கிற ஒன்றையும் அவன் பெற்றிருக்கிறான்.
படைப்பின் சிகரத்தை எட்டிய அவன், பிரபஞ்சப் பேராற்றலோடு தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளக்கூடிய மனதையும் பெற்று இருக்கிறான்.
இந்த அரிய மனம் என்கிற அமைப்பினை அவன் உணராமல். வெறும் அறிவை மட்டுமே பயன்படுத்தி ஆராய்ச்சிகளை மேற்கொண்டதால், நாகரீகம் என்ற பெயரில் வசதிகளைப் பெருக்கிக் கொண்டானே தவிர தன்னைப்பற்றி அறியத் தவறிவிட்டான்.
தன்னுடைய பார்வையை வெளிமுகப்படுத்தினானே தவிர உள்முகப் படுத்தவில்லை.
சேர்ந்து சமுதாயமாக வாழ்ந்ததால், அதைக் கட்டிக்காக்கும் முயற்சியில் பல ஏற்பாடுகளை உருவாக்கினானே தவிர தன்னுடைய உடல் அமைப்பும், அதிலிருந்து செயல்படுகின்ற மனமும், அந்த மனம் பிரபஞ்சப் பேராற்றலோடு கொண்டு இருக்கின்ற தொடர்பும் எத்தன்மையானது என்பதை அவன் அதிகமாக சிந்திக்கவில்லை.
மனித சிந்தனையின் விளைவாக நாகரிகம் வளர்ந்தது; சாதனங்களும் பெருகின. ஆனால், மனிதன் தன்னுடைய மனவாழ்க்கையைப் பெருமளவுக்கு சுருக்கிக் கொண்டு விட்டான்: நினைப்பது மட்டும்தான் மனிதனின் வேலை என்கிற முடிவுக்கு வந்து விட்டான் அவன் உணர்ந்த மனம் வேறு; நிஜமான மனம் வேறு.
நாம் உணர்கின்ற மனம் ஓர் எல்லைக்கு உட்பட்டது. அது நாமே வகுத்துக்கொண்ட எல்லை. நிஜமான மனத்திற்கு எல்லையே கிடையாது. பிரபஞ்சத்திற்கு எவ்வாறு எல்லை இல்லையோ அதைப் போல உண்மை மனத்திற்கு எல்லை என்பது கிடையாது.
மனத்தின் ஆற்றல் எல்லையில்லாதது. அந்த அரிய மனத்தின் ஆற்றலை நிலைப்படுத்தி நெறிப்படுத்தி வாழ்ந்தால் சொர்க்கம் நமது காலடியில்தான்.