

வெற்றிகரமான மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது ஒருபுறம் இருக்க, என்னவெல்லாம் செய்யக்கூடாது, எதையெல்லாம் கைவிட வேண்டும் என்று சில விஷயங்கள் இருக்கின்றன. அது குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.
அனைவரையும் மகிழ்விக்க முயற்சித்தல்:
எல்லோரையும் மகிழ்விப்பது என்பது முடியாத, சாத்தியமற்ற ஒன்று. ஒவ்வொரு மனிதருக்கும் வெவ்வேறான முரண்பட்ட கருத்துக்கள், எதிர்பார்ப்புகள் மற்றும் தேவைகள் இருக்கும். இவை அனைத்திற்கும் இணங்க முயற்சிக்கும் போது நமது சொந்த மதிப்பு மற்றும் ஆசைகளை மறந்து விடுவோம். 100 முறை பிறரை மகிழ்வித்து ஒருமுறை முடியாமல் போனாலும் அந்த மனிதர் உங்கள் மேல் ஆதங்கப்படத்தான் செய்வார். எனவே உண்மையாக ஆதரிக்கும் மக்களுடன் இணக்கமாக வாழ வேண்டும் உங்களுக்கான எல்லைகளை நிர்ணயித்து குற்ற உணர்வு இல்லாமல் தேவைப்படும் போது முடியாது என்று சொல்ல கற்றுக்கொள்ள வேண்டும்.
கடந்த காலத்தில் வாழ்வது:
பலரும் செய்யும் தவறு கடந்த காலத்தில் வாழ்வதுதான். எப்போதோ செய்த தவறு, பிறர் செய்த தீங்குகள், வருத்தங்கள், பிரச்னைகளைப் பற்றி உணர்ச்சி ரீதியாக நினைக்கும் போது நிகழ்காலத்தில் வாழ்வதில் இருந்து விலகிச் செல்கிறோம். தற்போது நடக்கும் நல்ல விஷயங்களை கவனிக்க தவறி விடுவோம். நமது கடமைகளையும் செய்ய முடியாது. எனவே கடந்த காலத்தை பாடமாக ஏற்றுக்கொண்டு நிகழ்காலத்தில் வாழவேண்டும் எதிர்காலத்தை வடிவமைக்கும் இலக்குகளை நோக்கி கவனத்தை திசை திருப்ப வேண்டும்.
அதீத யோசனை:
சிலர் சிறிய விஷயத்துக்கு கூட அதீதமாக யோசனை செய்வார்கள். அதனால் எளிமையான சாத்தியமான செயல்களை கூட செய்யாமல் விட்டு விடுவார்கள். எதைப்பற்றியும் கவலைப்படுவதும், அதிகமாக யோசிப்பதும் மனதின் சக்தியை விரயம் செய்ய வைத்துவிடும். ஒரு செயலை செய்யலாமா வேண்டாமா என்ன மனதுக்குள் பட்டிமன்றம் நடத்தி கவலைகளை உருவாக்கி விவாதங்களை வளர்த்து கொண்டே போகும்போது பதட்டம், முடிவெடுக்க முடியாத தன்மை என நீண்டு அந்த செயலை செய்யாமல் விட்டு விட நேரும். சிந்தனை செய்வதை விட்டுவிட்டு உடனடியாக செயலில் இறங்க வேண்டும்
வித்தியாசமாக இருக்க பயப்படுதல்:
ஆட்டுமந்தைக் கூட்டம்போல பிறரைப் போலவே பலரும் வாழ நினைக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் தனித்துவம் என்பது மிக முக்கியம். வித்தியாசமாக நடந்தால் பிறரால் நிராகரிக்கப்படுவோம், கேலி செய்யப்படுவோம் என்கிற பயம் ஒருவரது உண்மையான சுயத்தை ஆர்வத்தை, தனித்துவத்தை, கண்ணோட்டத்தை மறைக்க செய்கிறது. பிறருக்கு தீங்கு தராத வகையில் வித்தியாசமாக நடப்பதில் கவலைப்பட வேண்டியதில்லை.
மகிழ்ச்சியை தியாகம் செய்தல்:
பிறரை மகிழ்விக்க தனது மகிழ்ச்சியை தியாகம் செய்வது விரைவில் வெறுப்பு சோர்வு போன்றவற்றைத் தரும். நமது வாழ்வில் மற்றவர்களும் அவசியம் தான். ஆனால் அது எந்த அளவு என்பதை தீர்மானித்துக் கொள்ள வேண்டும் தனது மகிழ்ச்சியை தியாகம் செய்து இன்னொருவரை சந்தோஷப்படுத்துவது தேவையற்ற விஷயம்.
சுயசந்தேகம்:
சிலர், தாம் நல்லவர் இல்லையோ, குறைபாடு உடையவர்கள் என்ற சுய சந்தேகத்தை எழுப்பி தன்னைத்தானே வதைத்து கொள்வார்கள். இது புதிதாக ஒரு தொழில் தொடங்கவோ, வேலைக்கு விண்ணப் பிப்பதையோ, உறவுகளை தொடர்வதையோ தடுக்கிறது. பிறரிடம் காட்டும் அன்பு கருணையை தனக்குத்தானே ஒருவர் தந்து கொள்ளவேண்டும். 'நான் ஒரு மதிப்பு மிக்க மனிதர்' என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைக்க வேண்டும். இந்த ஆறு விஷயங்களை விட்டு விட்டால் ஒருவரது வாழ்க்கை ஜம்மென்று இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.