

வாழ்க்கையில் கவலை மேகங்கள் சூழும்போது, நமக்குள் ஏற்படும் வலியின் வேதனையும், ஏமாற்றமும், இந்த இரண்டும் சேர்ந்து நம் வாழ்க்கை கந்துவட்டி மாதிரி கழுத்தை நெரித்துவிடும் என்று பயப்படும் அளவுக்கு நாம் சென்று விடுகிறோம். அது மிக மிக தவறு. அதுவே நம் இறுதிக்கட்ட வாழ்க்கை என்னும் முடிவுக்கு வருவதும் தவறு.
அப்படி நினைப்பதை விட்டு விட்டு, அது வாழ்க்கையை நன்கு அறிந்து, பயணிப்பதற்கு, நம்மை முயற்சியில் ஈடுபடுத்தும் கட்டம் என்பதை நாம் உணருவோம்.
வாழ்க்கையில் தயக்கம் என்னும் சொல்லை தவிர்த்து வாழப் பழகிக்கொள்ள வேண்டும். ஏனெனில், அது நமக்கு பயத்தைக் கொடுத்து, சிந்திக்கும் ஆற்றலை இழக்கச் செய்து, இந்த உலகில் எதுவுமே நமக்கு சாத்தியப்படாமல் போகுமோ என்ற எண்ணத்தை விதைக்கும்.
நம்முடன் நண்பராக துணிவு இருந்தால், இவை எல்லாவற்றையும் மாற்றும் மார்க்கம் தோன்றச் செய்யும் என்பதை புரிந்து, முயற்சியின் முனையைக் கூர்மைப்படுத்திக் கொண்டே இருப்போம். அப்போது தான் வெற்றிக்கான முதற்படி நம் கண்களுக்கு தெரியும்.
எதையும் எதிர்பார்த்து காத்திருக்கும் எண்ணம் நமக்குள் இருக்கக் கூடாது. என்னவென்றால் எதிர்பார்ப்பு ஒரு சமயம் தோல்வி அடைந்துவிட்டால், மனம் ஒடிந்து போய்விடும். ஆகவே கடமையைச் செய்து, அடுத்தடுத்த கட்டங்களுக்கு நம்மை எடுத்துச் செல்ல வேண்டும். அப்போதுதான் எதிர்பார்க்காமல் வரும் சின்ன சின்ன ஆறுதல் கூட, நம்மை மகிழ்ச்சிக்கு இட்டுச் செல்லும் என்ற யதார்த்த உண்மை நமக்கு புரியும்.
முயற்சி செய்தும் சில நேரங்களில் நமக்கு வெற்றி கிடைக்கவில்லையே என்ற மனநிலையில், வருத்தமோ, விரக்தியோ அடைந்து விடக்கூடாது. இந்த பின்னடைவு தற்காலிகமானது, என்ற யதார்த்த நிலையை உணர்ந்து, முயற்சியில் சிறிதும் தொய்வின்றி தொடர்ந்து பயணிக்கும் நிதானமும் மனப்பக்குவமும் நமக்குள் ஏற்பட வேண்டும். அந்த உந்துசக்தி நம்மை வெற்றியின் படிகளாகக் கொண்டு, நம் எண்ணங்கள் முன்னே இயங்கத்தொடங்கும்.
நாம் எடுத்துச் செல்லும் விடாமுயற்சி என்பது, நம்மால் முடிந்த வரை அல்ல... முடியும் வரை என்று நினைத்து முயல்வதே விடாமுயற்சி. எனவே விடாமுயற்சியின எழுச்சியும், துணிவு கொண்ட மனமும் எதையும் சமாளிக்கும் திறன் படைத்தது என்று உணர்ந்தால், வலியின் தாக்கமும், ஏமாற்றத்தின் உளைச்சலும் நம்மை அண்டாது.
எந்த மனிதனும் வாழ்க்கையில் கவலையற்று வாழ்வது சாத்தியம் இல்லை என்பதை தெரிந்துகொள்ளுங்கள். அதனை கடந்து செல்லும் பாதை அறிந்து வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு தான், இறைவன் எல்லோருக்கும் மனம் என்ற அறிய ஒன்றைக் கொடுத்து இருக்கிறான் என்பதை உணர்ந்து, மனதை 'பத்தரை மாற்று தங்கமாக' வைத்துக் கொள்வோம்.
நம்முடைய மனதின் எண்ணங்களை வலுவாகவும் குரலை உறுதியாகவும் வைத்து இருந்தால், நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை பிறக்கும். எனவே, கடினமான சூழ்நிலையிலும் மனதை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்து, அதனை வெற்றிக்கு வித்திடும் வகையில் செயலாற்ற வைக்கும் திறன் பெற்று, முன்னேறுவோம்.
வாழ்க்கையில் வலி ஏற்படின் வலிமை பெறுவோம். ஏமாற்றம் தழுவினால் ஏற்றமாக மாற்றுவோம். வாழ்க்கை வாழ்வதற்கே என்றே பயணிப்போம்!
Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News
Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook
Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram
Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter
Add KalkiOnline as a preferred source on Google... Click Here