கவலைகளைக் கடக்க ஜென் பாடம்: இன்பமான வாழ்க்கை உங்களுக்காக!

Lifestyle articles
Zen lesson to overcome worries
ச. நாகராஜன்

மங்கையர் மலர், தினமணி, தினமணி சுடர், ஆனந்தவிகடன், குமுதம் பக்தி ஸ்பெஷல், மாலைமலர், தினபூமி, Hindu உள்ளிட்ட 46 இதழ்களில் 6000க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியவர். இதுவரை வெளியான புத்தகங்கள்; Pustaka - 139 புத்தகங்கள் (Paper back, Digital Printed books) Nilacharal - 61 புத்தகங்கள் (Digital books) (FROM LONDON) சென்னை விநாயகா பதிப்பகம், மணிவாசகர் பதிப்பகம் உள்ளிட்ட பதிப்பகங்களின் வெளியீடு 19 புத்தகங்கள் மொத்தம் 219 புத்தகங்கள்.

Updated on: 

ஏழையோ, பணக்காரனோ, ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் சரி, அமைதியான வாழ்க்கையையே விரும்புகிறார்கள். இதற்கான வழிமுறைகளை ஜென் மாஸ்டர்கள் அழகாகக் காட்டியுள்ளனர். அவற்றின் தொகுப்பு இதோ:-

இந்த வழிமுறைகளை இதைவிடாது கடைப் பிடிப்போருக்கு அமைதியான வாழ்க்கை அமையும் என்பது உத்தரவாதம்.

அன்றாடம் எழுந்தவுடன் அன்றைய நாளில் ஆயிரக் கணக்கில் நிகழ்ச்சிப் போக்குகள் உள்ளன என்பதை உணருங்கள். காலை எழுந்தவுடன் ஒரு பத்து நிமிடம் நீங்கள் நீங்களாகவே இருக்கப் பழகுங்கள்.

மூச்சை ஆழ்ந்து உள்ளிழுத்து மெதுவாக வெளியே விடுங்கள். அதன் மீது மட்டுமே கவனம் செலுத்துங்கள். சற்று மௌனம். பெரிதாக திட்டமிடுதல் எல்லாம் கிடையாது. யாரைப் பற்றியும் அல்லது எதைப் பற்றியும் மனதினுள் விவாதிக்க வேண்டாம். எழுகின்ற எண்ணங்கள் எழட்டும். தாமாகவே அது போகட்டும்.

உங்கள் மொபைலை நிச்சயமாக ஏரோபிளேன் மோடில் வைத்து விடுங்கள். அன்றைய வேலைகளில் கவனம் செலுத்துங்கள். ஒரு சமயத்தில் ஒரு வேலையை மட்டும் செய்யுங்கள். சின்ன வேலையோ, பெரிய வேலையோ – அதில் மட்டும் ஆழ்ந்த கவனம் செலுத்துங்கள். மெதுவாகச் செய்யுங்கள். முழுமையாகச் செய்யுங்கள்.

நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். அதில் உங்கள் சுவாசத்தை கவனியுங்கள். அலட்டிக் கொள்ளவே வேண்டாம். யாரையும் விமரிசிக்க வேண்டாம். உங்களை நீங்களே விமரிசித்துக் கொள்வதைத் தவிர!

ஒவ்வொரு செயலுக்கும் இடையே சற்று இடைவெளி விடுங்கள். சற்று நேரம் கொடுங்கள். பரபரப்பாக ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கிக் கொண்டே போய் மன அழுத்தத்திற்கும் கவலைக்கும் பரபரப்புக்கும் இடம் கொடுக்காதீர்கள்.

தேவையற்றதை உடனே அகற்றுங்கள். மனதிலிருந்தும் சரி, வீட்டின் சகல அறைகளிலிருந்தும் சரி – தேவையற்ற (க்ளட்டர் எனப்படும் தேவையற்ற) பொருள்களை உடனே அகற்றிவிடுங்கள்.

இதையும் படியுங்கள்:
சின்ன செயல்களைக் கூட கூர்ந்து கவனியுங்கள், வெற்றிப்படி உங்களுக்கு காத்திருக்கிறது!
Lifestyle articles

ஜென் குருமார்களின் பொன்மொழிகளைத் தொகுத்து வைத்துக் கொள்ளுங்கள். அவற்றை சீரான இடைவெளியில் பார்த்து ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள்.

உங்களுடைய வாழ்க்கை உங்களுடையதே. அதை அனுபவித்து வாழுங்கள். மற்றவருடன் ஒருபோதும் ஒப்பிடவேண்டாம்.

அதற்காக சோம்பேறியாக, குறிக்கோள் இன்றி வாழச் சொல்வதாக அர்த்தமில்லை. இயல்பாக வருவதை ஏற்றுக் கொண்டு ஒவ்வொரு செயலிலும் மைண்ட்ஃபுல்நெஸ் (MINDFULLNESS) – எனப்படும் மனம் தெளி நிலையுடன் வாழ்வதே வாழ்க்கை. சாஸ்திரங்கள் சொல்லும் சடங்குகள் வெற்று அர்த்தம் உள்ளவை அல்ல. கோவிலைச் சுத்தம் செய்தல் என்றால் அதனுடன் உள்ளத்தையும் சுத்தம் செய் என்பது பொருள். உங்களுக்கென சில சடங்குகளை நீங்களே கூட உருவாக்கிக் கொள்ளலாம். சுத்தம் செய்வது, சாப்பிடுவது, உணவு சமைப்பது, குளிப்பது ஆகிய அனைத்திலும் அர்த்தமுள்ள ஒரு தனி வழிமுறையை நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம். ஒவ்வொன்றுக்கும் ஒரு தனி நேரத்தை நீங்களாகவே நிர்ணயித்துக் கொள்ளலாம்.

தியானத்தில் அமர்வது தினசரி பழக்கமாக ஆகவேண்டும். இது உங்களை அன்றாடம் அந்தக் கணத்தில் வாழ வழி வகுக்கும். சிரியுங்கள். புன்னகை புரியுங்கள் சேவை செய்வது அன்றாடப் பழக்கமாக ஆகவேண்டும்.

இதையும் படியுங்கள்:
வலியும் ஏமாற்றமும் இறுதிக்கட்ட வாழ்க்கை அல்ல!
Lifestyle articles

தேவையற்றதைச் சேர்த்து வைக்காதீர்கள். ஷீக்கள் வைக்க ஒரு தனி ஸ்டாண்டே வேண்டாம். அன்றாடம் வெளிவரும் டிஸைன் ஷர்ட்டை அன்றே வாங்கிக் குவிக்க வேண்டாம். பிரிட்ஜில் ஜங்க் ஃபுட்- ஐ வாங்கி அடுக்க வேண்டாம். தேவை உள்ளனவற்றை மட்டுமே வாங்கி வைத்துக் கொள்ளலாம். எளிமையான வாழ்க்கையே உயர்ந்த வாழ்க்கை.

ஜென் மாஸ்டர்கள் அன்றாடம் தமது வாழ்க்கையில் கடைப்பிடித்து மற்றவர்களுக்கு உணர்த்தும் நெறிமுறைகளாகும். இவற்றைக் கடைப்பிடிப்போருக்கு அமையும் வாழ்க்கையே உன்னதமான வாழ்க்கை. செய்து பார்த்தால் மட்டுமே இதை உணரமுடியும்!

logo
Kalki Online
kalkionline.com