
மரங்கள் தண்ணீரைத்தேடி பூமிக்கடியில் தொலை தூரத்திற்கும் வேர் விடுகின்றன. காட்டுவிலங்குகள் வேட்டையாடித்தான் இரையைக் கண்டுபிடிக்கின்றன. பறவைகள் இரைதேடி எங்கெங்கோ பறக்கின்றன. எல்லாம் முயற்சியின் பலன் தானாக எதுவும் நடந்துவிடுவதில்லை.
படிப்பதும், வேலை தேடுவதும், வானளாவிய கட்டிடங்களை எழுப்புவதும் முயற்சி இல்லாமலா நடந்தேறுகின்றன? முயற்சியில்தான் இருக்கிறது வளர்ச்சி.
'மரம் சிறியதாயிருக்கையில் வளையும், வலுவற்றதாய் தெரியும். அதுவே முற்றிய நிலையில் யானை கட்டும் தறியாகவும் பயன்படும். முயற்சி செய்கிறவன் செல்வங்கள் பெற்று வாழமுடியும்' - இது நாலடியார் நமக்குத்தரும் பாடம்.
''முயற்சியை மேற்கொள்ளாதவன் மட்டுமே வெற்றியிலிருந்து விலகிக்கொள்கிறான்' என்று ரிச்சர்ட் வேட்லி கூறுகிறார். உழைப்பு. நேர்மை, இடைவிடா முயற்சி கொண்டு உயர நினைப்பவர்கள் சமூகத்தில் எத்தனை பேர்? முயற்சி இல்லாமலே படிக்க இடம் கிடைக்கவேண்டும்; படிக்காமலே தேர்வில் வெற்றி பெற்றுவிட வேண்டும்; தேடி அலையாமலே வேலையும் கிடைத்துவிட வேண்டும்; வேலை செய்யாமலே சம்பளமும் வாங்கிவிட வேண்டும் -இப்படித்தான் பெரும்பாலானவர்களின் மனப்பாங்கு இருக்கிறது. இதென்ன நியாயம்?
பலருக்கும் குறுக்கு வழியில், வெகு சீக்கிரம் முன்னேறிவிட ஆசை. குறுக்கு வழி சறுக்கும் என்பதை பின்னர் அறிந்து வருந்திப் பயனென்ன?
கடுமையாக உழைத்துப் படித்து முதல் மதிப்பெண் பெறும்போது எத்தனை மகிழ்ச்சி! திறமையாக வேலை பார்த்து பதவி உயரும் போது எத்தனை திருப்தி!
பத்து மாதம் கருவில் சுமந்து பிள்ளை பெறும் ஒரு பெண்ணுக்கு கிடைக்கிற ஆனந்தமே தனி. அதை தத்துப்பிள்ளை அடைவதன் மூலம் அனுபவிக்க முடியுமா?
ஆபிரகாம் லிங்கன் ஒரே நாளில் அமெரிக்க குடியரசுத் தலைவர் ஆகிவிடவில்லை. மரம் வெட்டி பிழைப்பு நடத்தியவர்; ஓய்வு நேரத்தில் படிக்கவும் செய்தார்; வழக்கறிஞர் தொழில் புரிந்தார். 'செனட்டர்' ஆனார். பிற்பாடு. அமெரிக்க குடியரசின் தலைவரும் ஆக முடிந்தது. இவை எல்லாம் அவரது முயற்சியில் கிடைத்த வளர்ச்சிதானே.
இப்படித்தான் எத்தனையோ தலைவர்களும், கவிஞர்களும், எழுத்தாளர்களும், தொழில் அதிபர்களும், சமூகத்தின் கீழ் மட்டத்தில் இருந்து உருவானார்கள். முயற்சி இல்லாமல் எது முன்னேற்றம்?
நீங்கள் செய்கின்ற காரியத்தில் கீழ், மேல் பார்க்காதீர்கள், காந்தியடிகள் கூறினார்: 'ஒரு விதத்தில் நாவிதர் தொழிலும், வக்கீல் தொழிலும் ஒன்றே என்று எதையும் அற்ப தொழில் என்று அலட்சியப்படுத்த வேண்டாம்.
தெருவில் பேப்பர் விற்ற பையன்கள் பின்நாளில் பெரிய பத்திரிக்கை முதலீட்டாளராகவும், தொழில் அதிபராகவும் மாறி இருக்கிறார்கள். முயற்சியின் மூலம் இடத்தைப் பெறுங்கள்.
சின்னஞ்சிறு எறும்பு இங்கும் அங்கும் ஊர்ந்து சென்று தனக்குத் தேவையான தானியங்களைச் சேகரிக்கின்றது; பறவைகள் தொலை தூரத்துக்கும் பறந்து சென்று புழு. பூச்சி முதலானவற்றைக் கண்டெடுத்து உண்கின்றன; நாய், பூனை, ஆடு, மாடு போன்ற பிராணிகளும் நங்களுக்குத் தேவையான உணவை நாடிப் பெறுகின்றன. இவைகளெல்லாம் தாங்கள் உயிர் வாழ்வதற்காகவே உழைக்கின்றன.
'போராட்டமே வாழ்க்கை' என்றார்கள். இது வெறும் வார்த்தை அல்ல; அனுபவ வார்த்தைகளாகும்.
புண்ணில்லாத போர்க்களம் இல்லை. அதைப்போல போராட்டமில்லாத வாழ்க்கையில்லை.