
அடுத்த தலைமுறையினருக்கும் சென்ற தலைமுறையினருக்கும் இடை யே ஒருவித இடைவெளி நிலவுவது இயற்கை. சென்ற தலைமுறையினர் கூறுவதை பின்பற்றாமல் அடுத்த தலைமுறையினர் அலட்சியப்படுத்துவதாக பலர் குறை கூறுவதை காணலாம்.
அதே நேரத்தில் சென்ற தலைமுறையினர் குறித்து அடுத்த தலைமுறையினர் கூறும் ஒபினியன் வேறு மாதிரியிருக்கும். ஆக மொத்தம் ஒருவருக்கு ஒருவர் ஒத்துப் போவதும் அவ்வளவு சுலபமாக இருப்பதில்லை.
சென்ற தலைமுறையினர் எதற்கு எடுத்தாலும் அவர்கள் கால பெருமை பற்றி உயர்வாக பேசுவதும் சரியில்லை. அதனால் தற்பொழுது எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை.
அதே சமயத்தில் அடுத்த தலைமுறையினர் எல்லாம் தங்களுக்குதான் தெரியும் என்ற எண்ணத்தில் போன தலைமுறையினருக்கு உரிய மரியாதை அளிக்காமல் அலட்சியப்படுத்தியும், உதாசீனப்படுத்தியும் நடத்துவதும் முற்றிலும் சரியில்லை. முந்தைய தலைமுறைனரின் பரந்த அனுபவம் அடுத்த தலைமுறையினருக்கு அருமருந்தாக உதவக்கூடும்.
போன தலைமுறையினரும் பல்வேறு சூழ்நிலைகளில் பல வகையான வித்தியாசமான பிரச்னைகளை எதிர்கொண்டு வெற்றிகரமாக கடந்து வந்து இருப்பர்கள். சில வேளைகளில் வாழ்க்கையில் அல்லது தொழிலில் சவால்கள், பிரச்னைகள், தோல்விகளை சந்தித்து அவைகளை தீர்த்து வைக்கையில் புதுவித அனுபவம் பெற்றுயிருப்பர்கள். இந்த வகை அனுபவங்கள் பற்றி அவற்றில் ஈடுபட்டவர்கள் வாயிலாக கேட்டு அறியும் சந்தர்ப்பம் எல்லோருக்கும் கிட்டாது.
மேலும் இவை எழுத்து வடிவிலோ அல்லது கூகிள் போன்றவைகள் மூலம் கண்டு அறிவதும் கடினமானது. அனுபவித்தவர்கள் வாயிலாக கேட்டு அறிவது சாலச்சிறந்தது. அப்படிப்பட்ட தலைமுறையினரின் அரிய அனுபவங்கள் அடுத்த தலைமுறையினருக்கு சிறந்த ஒரு பொக்கிஷமாக அமையலாம்.
எனவே அடுத்த தலைமுறையினர் போன தலைமுறையினருடன் பழகி அவர்களது அனுபவ பாடத்தை தெரிந்து வைத்துக்கொண்டால் எதிர்காலத்தில் பிரச்னைகளை எதிர்கொள்ளும் சமயத்தில் பெரிதும் பயனுள்ளதாக அமையும்.
போன தலைமுறையினர் தங்களின் தனிப்பட்ட அனுபவம் பற்றியும் அவர்கள் கற்ற படிப்பினை பற்றியும் அடுத்த தலைமுறையினருக்கு அவர்களாகவே முன் வந்து பகிர்ந்துக்கொள்ள வேண்டும். அப்படி செய்வதால் அவர்களுக்கு மனதிருப்தியும், அத்தகைய அனுபவம் பற்றி அறிந்துக் கொண்ட அடுத்த தலை முறையினருக்கு அறிவு விருத்தி ஏற்படுவதுடன், தன்னம்பிக்கை வலுவாகவும் உதவும்.
அடுத்த தலைமுறையினருக்கு வழிவிட்டும், வழிகாட்டி பழக்கப் படுத்தியும்விட்டால் அவர்கள் எதிர்காலத்தில் மேலும் மிக சிறப்பாக செயல்பட போன தலைமுறையினரின் உலக ஞானம் (wisdom) அடுத்த தலைமுறையினரை சிறப்பாக செயல்பட வைக்கும்.
அடுத்த தலைமுறையினர் தலை தூக்கி கால் பதிக்க தேவையானவற்றை கொடுத்து தயார்படுத்துவதில் போன தலைமுறையினர் ஈடுபட்டு அவர்கள் அடுத்த தலைமுறையினரை உருவாக்க தேவையான ஆதரவு கொடுப்பது சென்ற தலைமுறையினரின் கடமை ஆகும்.