
ஒரு குழந்தையின் எதிர்காலம் அதன் சிறுவயதில் பெற்றோர் கொடுக்கும் வழிகாட்டுதலின் மேல் பெரிதும் அமைகிறது. குழந்தைகளுக்கு கல்வியோடு சேர்த்து தன்னம்பிக்கை, ஒழுக்கம், நல்ல பழக்கவழக்கங்கள் போன்ற குணங்களை வளர்த்துக் கொடுப்பது மிக முக்கியமானது. ஏனெனில் தன்னம்பிக்கை கொண்ட குழந்தை எந்தச் சவாலையும் சமாளிக்கக் கற்றுக்கொள்வார்; நல்ல பழக்க வழக்கங்களுடன் வளர்ந்த குழந்தை சமூகத்தில் மதிப்பும் அன்பும் பெறுவார். இதற்காக பெற்றோர் பின்பற்ற வேண்டிய சில முக்கியமான ஆலோசனைகள் உள்ளன.
அன்பும் ஆதரவும் வழங்குங்கள்: குழந்தைகள் பெற்றோரின் அன்பு மற்றும் ஊக்கத்தால் தன்னம்பிக் கையுடன் வளர்கிறார்கள்.
நல்ல முன்னுதாரணமாக இருங்கள்: பெற்றோர் தங்களின் நடத்தை மூலமே குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கிறார்கள்.
தன்னம்பிக்கை வளர்த்திட ஊக்குவிக்கவும்: சிறிய முயற்சிகளுக்கும் பாராட்டுக்களை வழங்கி அவர்களின் மனஉறுதியை அதிகரிக்கவும்.
ஒழுக்கத்தை கற்றுக்கொடுங்கள்: எது சரி, எது தவறு என்பதை தெளிவாக சொல்லி, அதனை பின்பற்ற பழக்கப்படுத்துங்கள்.
பொறுப்புணர்வு கொடுங்கள்: வயதுக்கேற்ற சிறிய பொறுப்புகளை கொடுத்தால் குழந்தைகள் தங்கள் திறனை உணரத்தொடங்குவார்கள்.
கேட்கும் பழக்கத்தை வளர்த்திடுங்கள்: குழந்தைகள் சொல்வதை கவனமாகக்கேளுங்கள்; இது அவர்களுக்கு தங்களின் கருத்துக்கள் முக்கியம் என்ற உணர்வு தரும்.
கட்டுப்பாடான சுதந்திரம் அளியுங்கள்: தேவையான வரம்புக்குள் சுதந்திரம் கொடுப்பது குழந்தைகளை சுயமாக சிந்திக்கத் தூண்டும்.
சமூக மதிப்புகளை கற்றுக்கொடுங்கள்: மரியாதை, பகிர்வு, கருணை போன்ற பண்புகளை தினசரி வாழ்க்கையில் கற்பிக்கவும்.
முயற்சியின் மதிப்பை உணர்த்துங்கள்: தோல்வி ஏற்பட்டாலும் முயற்சியை பாராட்டி, “நீ மீண்டும் செய்து பார்க்கலாம்” என்று ஊக்கப்படுத்துங்கள்.
சவால்களை எதிர்கொள்ளும் திறன் சொல்லுங்கள்: சவால்களை எதிர்கொள்ளும் பொழுது தங்களுக்கு அதற்கான திறன்கள் இருக்கிறதா என்று எப்பொழுதுமே குழந்தைகள் சந்தேகப்படுவார்கள். அதனால் எந்த ஒரு பிரச்னையையும் அவர்களால் சமாளிக்க முடியும் என்ற ஊக்கத்தை நீங்கள் அவர்களுக்கு கொடுக்க வேண்டும். உதாரணமாக உங்கள் குழந்தை ஹோம் ஒர்க் செய்வதற்கு தடுமாறிக் கொண்டிருக்கும்பொழுதே அவர்களிடம், “ஆழமாக மூச்சை இழுத்து விடு, மீண்டும் மீண்டும் இதை 5 நிமிடங்களுக்கு செய். உன்னால் இந்த பிரச்னையை சமாளிக்க முடியும். இதனை படிப்படியாக செய்யலாம்”, என்று சொல்லுங்கள்.
குழந்தைகளை தன்னம்பிக்கை மற்றும் நல்ல பழக்கவழக்கங்களுடன் வளர்ப்பது பெற்றோரின் பொறுப்பே அல்ல, அது குழந்தைகளின் எதிர்காலத்திற்கான மிகச்சிறந்த முதலீடும் ஆகும்.
குழந்தையின் கனவுகள்
குழந்தைகள் சிறிய வயதிலிருந்தே பல்வேறு கனவுகளை காண்கிறார்கள். யாராவது மருத்துவர் ஆக நினைக்கலாம், யாராவது ஆசிரியர் ஆக விரும்பலாம், சிலர் விஞ்ஞானி, விளையாட்டு வீரர் அல்லது கலைஞர் ஆக ஆசைப்படுவார்கள். இந்த கனவுகள்தான் குழந்தையின் உள்ளார்ந்த திறமைகளை வெளிக்கொணரும் விதைகள்.
பெற்றோரின் ஊக்கத்தின் பங்கு
பெற்றோர் குழந்தைகளின் கனவுகளை புரிந்து, அவர்களை ஊக்கப்படுத்தினால் அது அவர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் முயற்சியை வளர்க்கும். குழந்தையின் சிறிய சாதனைகளையும் பாராட்டுதல், தவறுகளை சீர்திருத்தி ஊக்குதல், அவர்களின் திறமைகளுக்கு பொருத்தமான வழிகாட்டுதல், முயற்சிக்கு முன்மாதிரி ஆகுதல் இவையெல்லாம் குழந்தையின் கனவுகளை மலரச்செய்யும்.
குழந்தையின் கனவு மலர்வதற்கான முதல் சூரியன் பெற்றோரின் ஊக்கமே. தன்னம்பிக்கை, அன்பு, ஊக்கம் ஆகியவற்றை பெற்றோர் விதைத்தால், அந்த விதைகள் ஒருநாள் பெரும் வெற்றியின் மரமாக வளரும். எனவே, பெற்றோர் குழந்தையின் கனவுகளை மதித்து ஆதரித்தால், அவர்கள் நாளைய சமுதாயத்தின் ஒளிவிளக்கர்களாக உயர்வார்கள்.