

முன்னேற நினைப்பவர்கள் தங்களை தயார் செய்துகொள்ள முனைப்பை காட்டவேண்டியது அவசியம். அதற்கு தேவையானவற்றை இங்கு காண்போம்.
பொறுமை: பொறுமையுடன் கற்றுக்கொண்டு தொடர்ந்து பயிலவும், பயிற்சி செய்யவும் மறக்க கூடாது. நிதானம் இதற்கு துணை நிற்கும். படபடப்பு, பதட்டம் இவற்றிற்கு இடம் கொடுக்காமல் இருக்க பழகிக்கொள்ள வேண்டும். பொறுமை வேகத்தைவிட விவேகத்திற்கு முக்கியம் அளித்து சரியான தருணத்தில் உதவும்.
தன்னம்பிக்கை: பிறரால் முடியும் என்றால் என்னாலும் முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்துக்கொள்வது அவசியம். அதற்கு ஏற்ப நேர்மறை சிந்தனைகளை உள்மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும். தன்னம்பிக்கை மனோதைரியத்தை உண்டு செய்வதுடன் முடியும் என்ற தாரக மந்திரத்தை செயல்படுத்த தூண்டுகோலாக உதவும்.
யோசித்து முடிவு எடுத்தல்; முன்னேற துடிப்பவர்களின் பங்களிப்பு எந்நேரமும், எல்லா இடங்களிலும் இயங்க வேண்டியது மிகவும் முக்கியத்துவம். அதற்கு உறு துணையாக இருப்பது யோசித்து முடிவுகள் எடுப்பது ஆகும். சுற்றுப்புற சூழ் நிலைக்கு ஏற்பவும், நடைமுறையில் ஏற்பட்டுள்ள மாறுதல்களுக்கு ஏற்ப அனுசரித்து செல்ல சிறந்த முடிவுகள் அவசியம். அதற்கு யோசிப்பதும் தேவைக்கு ஏற்றவாறு துரித முடிவுகள் எடுப்பதும் ஆகும்.
சேகரித்தல்: செயல்படுத்த முடிவுகளை தவிர சரியான தகவல்கள் மற்றும் விவரங்கள் கைவசம் இருப்பது முன்னேற உதவும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. அப்படிப்பட்ட தகவல்கள், விவரங்களை சேகரிப்பதில் ஆர்வத்தை மேம்படுத்திக்கொள்வது அவசியம் மட்டும் அல்லாமல் போட்டிகள் நிறைந்த உலகில் அத்தியாவசியமும் ஆகின்றது.
போட்டியாளர்கள்: முன்னேற நினைப்பவர்களுக்கு போட்டியாளர்கள் தடையாக மட்டும் அல்லாமல் போட்டியிடுபவர் களையும் ஊக்குவிப்பவர்களாகவும் திகழ்கிறார்கள். போட்டியாளர்கள் எவ்வளவு, எப்படி, எவ்வாறு முன்னேறியிருக்கிறார்கள் என்ற விவரங்கள் பற்றி அறிந்துக்கொள்ள வேண்டியதை தவிர்க்க கூடாது. போட்டியாளர்கள் முன்னேற நினைப்பவர்களை செயல்படுத்த வைக்கிறார்கள்.
பின் தொடர்தல்: (Followup) செய்யும் பணியில் ஈடுப்பாடு அவசியம். நடைபெற்றவை சரிவர நடைபெற்றதா எனவும், தொடர்ச்சியாக வளர்ச்சி திட்டமிட்டபடி செயல் படுகின்றதா என்பதை கண்காணிக்கும் பணி இடைவிடாமலும், தொய்வில்லாமல் நடைபெறுவது முன்னேற்றத்திற்கு வலு சேர்க்கும்.
செயல்பாடு: முன்னேற்றம் என்ற இலக்கை நோக்கி செல்ல மேற் கூறிய திறமைகளுடன் முக்கியத்துவம் பெறுவது செயல்பாடு செயல்பாடுதான் முடிவை பெற்று தரும் என்பதால் அது மிக மிகவும் அவசியம் ஆகின்றது. செயல்பாட்டிற்கு உரிய மரியாதை அளிக்க வேண்டியது முன்னேற துடிப்பவர்களின் கடமையாகும். செயல் பாடு சரிவர இயங்காவிட்டால் பின்னடைவை சந்திக்க வேண்டியதை தவிர்க்கவே முடியாது.
அதுமட்டுமல்லாமல் மீண்டு வருவது கடினமாக ஆவதுடன் இத்தகைய தடங்கல், தடை போட்டியாளர்களுக்கு உதவி செய்வதுடன், முன்னேற துடிப்பவர்கள் தேவையில்லாத அழுத்தங்களுக்கு ஆளாகி தவிக்க வேண்டியிருக்கும்.
எனவே செயல்பாடுகளில் தொடர்ச்சி, தேவைக்கு ஏற்ற வேகம், மாற்றம் இவைகளின் உதவியுடன் செயல்பட்டால் முன்னேற்றம் தொடரும். வெற்றி இலக்கை அடையவும் முடியும்.